Published : 06 Feb 2024 12:25 AM
Last Updated : 06 Feb 2024 12:25 AM
நாகர்கோவில்: கூகுள் மேப் துணையுடன் திருடுபோன தனது தந்தையின் மொபைல்போனை மீட்டுள்ளார் டெக் வல்லுநரான ராஜ் பகத் எனும் தமிழர். இந்த சம்பவம் நாகர்கோவில் பகுதியில் நடந்துள்ளது. அது குறித்து விரிவாக பார்ப்போம்.
ராஜ் பகத்தின் தந்தை ரயில் மூலம் நாகர்கோவிலில் இருந்து திருச்சிக்கு சென்றுள்ளார். இரவு நேர பயணம் என்பதால் லேசாக கண் அசந்துள்ளார். அவர் பயணித்த ரயில் பெட்டியில் கூட்டம் அதிகம் இல்லை. அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதே பேட்டியில பயணித்த ஒருவர், ராஜ் பகத்தின் தந்தை வசம் இருந்த மொபைல்போன் மற்றும் பையை திருடியுள்ளார். அதிகாலை 3.30 மணி அளவில் இது குறித்து அறிந்து ராஜ் பகத்துக்கு வேறு ஒருவரின் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார்.
தந்தையின் போனில் லொகேஷன் ஷேரிங் அம்சத்தை ராஜ் பகத் எனெபிள் செய்து வைத்திருந்துள்ளார். அதன் மூலம் போனை ட்ரேக் செய்துள்ளார். அதில் அந்த போனுடன் கொள்ளையர் மற்றொரு ரயிலில் நாகர்கோவில் வருவதை அறிந்துள்ளார். கொள்ளையர் நெல்லையில் இறங்கியதும், அங்கிருந்து வேறொரு ரயிலில் வருவதும் தெரிந்துள்ளது. அதை மீட்க நினைத்த அவர் தனது நண்பர் மற்றும் ரயில்வே போலீஸாரின் துணையுடன் ரயில் நிலையத்தில் தயாராக இருந்துள்ளார். அங்கு கூட்டம் அதிகம் இருந்துள்ளது. அதனால் கொள்ளையரை அடையாளம் காண்பதில் சவால் ஏற்பட்டுள்ளது.
ராஜ் பகத்தின் தந்தை, சிஐடியூ தொழிற்சங்க உறுப்பினர் என்பதால் அதன் லோகோ அவர் பயன்படுத்திய பையில் இருந்துள்ளது. அது கருப்பு நிறப் பை. அதை வைத்து கொள்ளையரை பிடிக்க முயற்சித்துள்ளனர். இருந்தும் கொள்ளையர் நழுவ, கூகுள் மேப் மூலம் ட்ரேக் செய்து, பேருந்து நிலையத்தில் அவரை மடக்கி பிடித்துள்ளனர். இதற்கு மக்களும் உதவியுள்ளனர். அவரிடமிருந்து தனது தந்தையின் பை மற்றும் மொபைல்போனை பக்த மீட்டுள்ளார்.
கொள்ளையரிடம் போலீஸார் சோதனை மேற்கொண்டதில் அவர் வசம் ரூ.1,000 ரொக்கம், ப்ளூடுத் ஹெட்செட் மற்றும் மொபைல்போன் சார்ஜரும் இருந்துள்ளது. “இதற்கு முக்கிய காரணம் மொபைல்போனை கொள்ளையர் ஸ்விட்ச் ஆஃப் செய்யாமல் இருந்ததும், அவர் நாகர்கோவில் வந்ததும் தான் காரணம். உதவிய அனைவருக்கும் நன்றி” என சமூக வலைதள பதிவில் பகத் தெரிவித்துள்ளார். பெரும்பாலானவர்கள் தங்களது மொபைல்போன் லொகேஷனை பகிர தயக்கம் காட்டும் நிலையில் அந்த அம்சம் தான் தனது தந்தையின் மொபைல்போனை மீட்க உதவியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT