Published : 03 Feb 2024 02:52 PM
Last Updated : 03 Feb 2024 02:52 PM
விருதுநகர்: விருதுநகரில் திருக்குறள் மாணவர் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த கம்பீர தோற்றத்துடன் கூடிய திருவள்ளுவர் படத்தையும், திருக்குறள் ஓவியக் கண்காட்சியையும் மாணவ, மாணவிகள் பார்த்து வியந்து, ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
விருதுநகர் மாவட்ட நிவாகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய 'தீராக் காதல் திருக்குறள்' திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 800 மாணவர்கள் பங்கேற்ற 2 நாள் நடைபெறும் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் நேற்று தொடங்கியது. இதன் ஒரு பகுதியாக விழா அரங்கில் "குறள் ஓவியம் கண்காட்சி அரங்கம்" என்ற தலைப்பில் திருக்குறள் விளக்க ஓவிய கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
இதில், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் திருக்குறள் அதிகாரத்தின் தலைப்புகளில் வரைந்த கண்கவர் விளக்க ஓவியங்களும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் வரைந்த ஓவியங்களும் அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. தமிழகத்தில் உள்ள அனத்து மாவட்டங்களிலிருந்தும் மாநாட்டுக்கு வந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இக்கண்காட்சியைப் பார்த்து வியந்தனர். அதோடு, அமர்ந்த நிலையில் எழுத்தாணி, ஓலைச் சுவடியுடனே திருவள்ளுவர் உருவத்தைப் பார்த்த மாணவர்களுக்கு ஆச்சர்யமூட்டும் வகையில், கம்பீரமாக எழுந்து நின்று திரும்பிப் பார்க்கும் வகையில் திருவள்ளுவர் படம் பிரம்மாண்டமாக வைக்கப்பட்டிருந்தது.
திருக்குறளில் உள்ள அறம், பொருள், இன்பம் என முப்பாலையும் விளக்கும் வகையில் ஒவ்வொரு அதிகாரமும் கூறும் பொருளை முன்னிறுத்தும் வகையில் 150க்கும் மேற்பட்ட ஓவியங்களில் கண்காட்சியில் இடம்பெற்றிருந்தன. இதைப் பார்த்து மாணவர்கள் ஆச்சரியப்பட்டனர். அதோடு, மாணவர்களுக்கான செல்பி பாய்ண்டும் அமைக்கப்பட்டிருந்தது. அங்கு நின்றபடி மாணவ, மாணவிகளும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் அளித்த பேட்டியில், "தீராக் காதல் திருக்குறள் என்ற திட்டத்தின்கீழ் தமிழ் திறனறித் தேர்வில் மாநிலம் முழுவதும் வெற்றிபெற்ற ஆயிரம் மாணவர்களில் 800 மாணவர்களும், 200 ஆசிரியர்களும் திருக்குறள் மாணவர் மாநாட்டில் பங்கெடுத்துள்ளனர்.
மாணவர்களுக்கு திருக்குறளின் பெருமையை எடுத்துச் சொல்லவும், அடுத்த தலைமுறையினருக்கு தமிழ் பண்பாடு, திருக்குறள் போன்று விழுமியங்களைக் கடத்துவதற்காக 2 நாட்கள் பல்வேறு திருக்குறள் சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள், இசை அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான போட்டிகளும் நடத்தப்படுகின்றன. முதல்கட்டமாக திருக்குறளை மையப்படுத்தி மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது" எனத் தெரிவித்தார்.
கண்காட்சியைத் திறந்துவைத்த உலக திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் அளித்த பேட்டியில், "இம்மாநாடு சிறப்பாக நடத்தப்படுகிறது. ஓவியக் கண்காட்சி அற்புதமாக உள்ளது. மாணவர்களுடைய சுய சிந்தனை, படைப்பாற்றல் போன்றவை தெளிவாகத் தெரிகிறது. இதை ஊக்குவிக்கும் விதமாக இந்த மாநாடு அமைந்துள்ளது. இளைய தலைமுறையினரை இம்மாநாடு சென்று சேர்ந்துள்ளது. இது நல்ல முயற்சி. இதுவரை எங்கும் நடைபெறாத ஒரு புதிய முயற்சி" என்று கூறினார்.
மாநாட்டில் பங்கேற்ற சாத்தூர் அருகே உள்ள என்.சுப்பையாபுரம் அரசு பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கூறுகையில், "கற்க கசடற என்ற திருக்குறள் கூற்றுப்படி, அதை முழுமையாக அறிந்து கொள்ள இந்த மாநாடு ஒரு வாய்ப்பாக அமைந்திருந்தது. இதுபோன்று ஒரு மாநாட்டை இதுவரை நாங்கள் பார்த்தது இல்லை. அதிலும், திருவள்ளுவரின் மாறுபட்ட கம்பீரத் தோற்றமும், திருக்குறள் விளக்க ஓவியக் கண்காட்சியும் மிக ஆச்சரியமாகவும், வியப்பையும் ஏற்படுத்தியது” எனத் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT