Published : 02 Feb 2024 05:08 PM
Last Updated : 02 Feb 2024 05:08 PM
விருதுநகர்: தீராக்காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் விருதுநகர் மாவட்டத்தில் முதன்முறையாக தமிழகம் முழுவதும் இருந்து 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற திருக்குறள் மாணவர் மாநாடு இன்று தொடங்கியது.
விருதுநகர் மாவட்ட நிவாகம் மற்றும் தமிழ் இணையக் கல்விக் கழகம் இணைந்து நடத்திய தீராக் காதல் திருக்குறள் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் முதல்முறையாக தமிழ் திறனறித் தேர்வில் வெற்றி பெற்ற தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 800 மாணவர்கள் பங்கேற்ற 2 நாள் நடைபெறும் “திருக்குறள் மாணவர் மாநாடு 2024" விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் இன்று தொடங்கியது. முன்னதாக, அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் தலைமையில், உலகத் திருக்குறள் பேரவைத் தலைவர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணவித்து மரியாதை செலுத்தி, மாணவர்களால் திருக்குறளை விளக்கும் வகையில் வரையப்பட்ட குறள் ஓவிய கண்காட்சி அரங்கையும் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இக்கண்காட்சியில் அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலுக்கு தனித் தனியாக மாணவர்களால் சுமார் 150-க்கும் மேற்பட்ட குறள் ஓவியங்கள் காட்சிப் படுத்தப் பட்டிருந்தன. அதைத்தொடர்ந்து, கவிஞர் வைரமுத்து அவர்கள் காணொலி காட்சி வாயிலாக வாழ்த்துரை வழங்கி மாநாட்டை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசுகையில், திருக்குறள் என்பது தமிழில் எழுதப்பட்ட இரண்டு அடி வாசகம் மட்டுமல்ல. இது வாழ்வியல், மனப்பயிற்சி, தமிழ் பயிற்சி, நா பயிற்சி அளிக்கக் கூடியதாகும். ஒரு திருக்குறளை நாம் உச்சரிக்கும் போது மொழி திருத்தம் பெறுகிறது, சொற்கள் உங்கள் வசப்படுகின்றன, ஒரு கருத்து உங்கள் நெஞ்சில் பதிகிறது.
அது நாளை உங்களை வாழ்வியலுக்கு வழிகாட்டுகிறது. தமிழை அடுத்த தலைமுறைக்கு கடத்துவதற்கு திருக்குறள் தான் சரியான ஊடகம் என நம்புகிறேன். மாணவர்கள் பள்ளி, கல்லூரி படிப்புகளை முடித்து வெளியேறும் போது 1,330 திருக்குறளும் உங்கள் நெஞ்சில் பதிந்து விட்டால், நீங்கள் தான் முழுமையான, மெய்யான தமிழன். உங்கள் வழியில் தான் தமிழ் அடுத்தடுத்த தலைமுறைகளை கடந்து புதிய தலைமுறைகளை நோக்கி முன்னேறும் என நம்புகிறேன். உங்களால் திருக்குறள் பரவும், தமிழ் வளரும், ஒரு தலைமுறை வெல்லும் என்று கூறினார்.
மாநாட்டில் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் பேசுகையில், திருக்குறளை மாணவர்களுக்கு அதனுடைய பெருமையை எடுத்துச் சொல்லவும் அடுத்த தலைமுறைகளுக்கு தமிழ் பண்பாடு, திருக்குறள் போற்றும் நெறிமுறைகளை கடத்துவதற்காக 2 நாட்கள் பல்வேறு திருக்குறள் சார்ந்த அறிஞர்கள், ஆய்வாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கலை நிகழ்ச்சிகளும், மாணவர்களுக்கான போட்டிகள் நடத்தப் படுகிறது. இந்த மாநாட்டில் 38 மாவட்டங்களிலிருந்தும் சுமார் 800 மாணவர்களும் 200 ஆசிரியர்களும் பங்கேற்றுள்ளனர். எந்தவொரு வாழ்வியல் சிக்கலுக்கும் அதனை ஆற்றுப் படுத்துவதற்கு, எவ்வளவு பெரிய அறிவாளி, ஆற்றல் பெற்றவர், பலசாலியாக இருந்தாலும், அவருக்கு ஒரு வழிகாட்டி மிக அவசியம்.
இதை தான் வாழ்வியல் தத்துவங்களும், அறிவியல் அடிப்படையில் மனோதத்துவ நிபுணர்களும் குறிப்பிடுகின்றார்கள். இந்த உறவுகளெல்லாம் ஒர் அளவிற்கான பங்களிப்பையே நமக்கு ஆற்ற முடியும். ஆனால், இந்த அனைத்து உறவுகளும் இணைந்த ஒன்றாக இருக்க முடியும் என்றால் அது திருவள்ளுவராக தான் இருக்க முடியும். இதை தரவுகள் மூலம் நிரூபிக்க முடியும். கல்வி மற்றும் அறிவில் சிறந்த மாணவர்களான நீங்கள் தான் நாளை மருத்துவர்கள், தொழிலதிபர்கள், அரசு அலுவலர்கள், விஞ்ஞானி, ஆசிரியர்கள் என பல்வேறு துறைகளில் உயர் பொறுப்பில் தலைவர்களாக இருக்கப் போகின்ற தமிழ் குழந்தைகள்.
திருக்குறளோடும், தமிழ் பண்பாட்டோடும், தமிழ் மரபோடும் ஒன்றியிருக்க வேண்டும். நாம் உயர்வதற்கும், நம்மை சார்ந் தோர்களை உயர்த்துவதற்கும் எப்போதும் கைக்கொள்ள வேண்டிய தத்துவம் திருக்குறள். அதை எடுத்துச் செல்வது தான் இந்த மாநாட்டின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.
மாநாட்டில் சிறப்புரையாற்றிய குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசுகையில், 2 ஆண்டும் ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது திருக்குறள். தற்போது எவ்வளவு நவீன தொழில் நுட்பங்கள் வந்தாலும், திருக்குறள் புதிய பொருளை தந்து கொண்டே இருக்கிறது. கல்வி ஒன்று தான் மனிதனை மனிதனாக மாற்றும் வல்லமை உடையது. அத்தகைய கல்வியை பெறுவதற்கு திருக்குறன் ஒரு வழிகாட்டி. எது அறம், எது தர்மம் இதன் மூலம் திருக்குறள் நமக்கு எல்லார்க்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என உணர்த்துகிறது. இது தான் உண்மையான ஞானப்பார்வை.
நமது வாழ்வில் காட்டு வழிப் பாதைக்கு கைவிளக்காகவும், கடல் வழிப் பாதைக்கு கலங்கரை விளக்கமாகவும், மலை வழிப் பாதைக்கு குன்றின் மேல் இட்ட விளக்காகவும் திருக்குறள் வழிகாட்டும். திருவள்ளுவர் எப்போதும் உங்களுக்கு நண்பனாக இருந்து வழிகாட்டுவார். எனவே அந்த திருக்குறளை நாளும் கற்று, உங்களை மகத்தான மாமனிதர்களாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.
அதைதொடர்ந்து, எழுத்தாளர் பாரதி கிருஷ்ண குமார் சிறப்புரையாற்றி பேசுகையில், திருக்குறளின் பெருமையையும், வாழ்வியின் வழி காட்டுதல்களையும், அற நெறிகளையும், நாம் பின்பற்ற வேண்டியதின் அவசியம் குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைத்தார். மேலும், இம்மாநாட்டில் நடைபெற உள்ள சிறப்பு நிகழ்ச்சிகளில், தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக இணை இயக்குநர் சங்கர சரவணன் வினாடி- வினா போட்டியையும், திரைப்பட இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் பங்கேற்று தமிழ் ஓசை இசை நிகழ்ச்சி மற்றும் தமிழோடு விளையாட்டினையும் நடத்தினார்.
மேலும், இம்மாநாட்டில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு, வினாடி - வினா, நாடகம், நடனம், பேச்சுப் போட்டி, கவிதைப் போட்டி, தனி நபர் போட்டிகள், கலைப்போட்டிகள், குறள் விளையாட்டு, மற்றும் குறும்படம் ஒளிபரப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன் வரவேற்றார். நிறைவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி நன்றி கூறினார். எழுத்தாளர் மரு.அறம், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT