Published : 30 Jan 2024 05:46 PM
Last Updated : 30 Jan 2024 05:46 PM

பழமையின் காதலன்...! - பழைய பொருட்களை சேகரி்த்து காட்சிப்படுத்தும் தொல்லியல் ஆர்வலர்

புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் சு.பீர்முகமது சேர்த்து வைத்துள்ள பழைய பொருட்கள்.

புதுக்கோட்டை: தற்போது பயன்பாட்டில் இல்லாத பழைய பொருட்களை சேகரித்து இளைஞர்கள், மாணவர்களுக்கு காட்சிப்படுத்தி வருகிறார் புதுக்கோட்டையைச் சேர்ந்த தொல்லியல் ஆர்வலர் சு.பீர்முகமது. புதுக்கோட்டை தொல்லியaல் ஆய்வுக் கழகத்தின் மாவட்ட இணைச் செயலாளரான இவர், மண் பாண்டங்கள், பித்தளை மற்றும் மரப்பொருட்கள், பழைய வேளாண் கருவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய பொருட்களை சேகரித்து பல்வேறு இடங்களில் காட்சிப்படுத்தி வருகிறார்.

இதுகுறித்து, ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் சு.பீர்முகமது கூறியது: தொல்லியல் ஆய்வாளர்களுடன் ஆய்வு பணிக்கு செல்லும் போது பானை ஓடுகளைக்கூட சேகரித்து, அவற்றின் பயன்பாடுகளை அறிய முயற்சி செய்வேன். முற்காலத்தில் மக்கள் பயன்படுத்தி வந்த மண்பாண்டங்கள், பித்தளை பாத்திரங்கள், அரிவாள், அரிவாள்மனை, கத்தி வகைகள் போன்றவை சேகரித்துள்ளேன்.

கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பழைய பொருட்களை
புகைப்படம் எடுக்கும் மாணவிகள்.

மேலும், தொடக்கத்தில் பயன்படுத்தப்பட்ட டிவி, ரேடியோக்களையும், செல்போன்களையும் சேகரித்துவைத்துள்ளேன். கடிகாரங்கள், லாந்தர் விளக்குகள், கேமராக்கள், இரும்பு கருவிகள், தகரப் பெட்டிகள் உள்ளிட்டவையும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

கடந்த 10 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான பொருட்களை சேகரித்து வைத்துள்ளேன். இவற்றை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பார்க்கும் வகையில் கல்வி நிலையங்களில் காட்சிப்படுத்தி வருகிறேன். இவற்றை பார்த்து வியக்கும் அவர்கள், புகைப்படங்களை எடுத்துக் கொள்கின்றனர்.

மண், இரும்பு, பித்தளை போன்ற பொருட்களை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது அதிகமாக பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. இது, சூழலுக்கு கேடு என்று தெரிந்தும் புழக்கத்தில் இருக்கின்றன. பயன்படுத்தப்படும் பொருட்கள் எதுவாகினும் அது அவரவர் உடலுக்கும், சூழலுக்கும் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x