Published : 30 Jan 2024 04:20 PM
Last Updated : 30 Jan 2024 04:20 PM
மதுரை: நாட்டுமாடுகள் மூலம் தற்சார்பு வாழ்க்கை வாழலாம் என வழிகாட்டுகிறார், அழகர்கோவில் அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர். மதுரை அழகர்கோவில் அருகே அண்டமான் கிராமத்தைச் சேர்ந்தவர் ம.திருமலைராஜா (33). இளங்கலை வரலாறு படித்த இவர், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார்.
தற்போது, நாட்டுமாடுகள் சாணத்திலிருந்து அன்றாட வாழ்க்கைக்கு பயன்படும் சோப், பல்பொடி, திருநீறு, சாம்பிராணி உள்ளிட்ட பொருட்கள் மற்றும் இயற்கை உரங்கள், ஜீவாமிர்தக் கரைசல் போன்றவற்றை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறார். மேலும், அன்றாட வாழ்க்கைக்கு தேவையான அரிசி, காய்கறிகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்து வருகிறார்.
இதுகுறித்து ம.திருமலைராஜா கூறியதாவது: எனது தந்தை மலைச்சாமி விவசாயி. சிறு வயதிலிருந்தே வீட்டில் ஆடு, மாடுகள் இருந்ததால், விவசாயத்தில் ஈடுபாடு ஏற்பட்டது. ஆனால், எனது தந்தையின் விவசாய வேலைக்கு பெரிதாக உதவியதில்லை.
பி.ஏ. பட்டம் படித்து தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்தேன். அப்போது எதேச்சையாக கோ சேவா சங்கம் சார்பில் நடந்த நாட்டுமாடுகள் மூலம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பொருட்கள் தயாரிக்கும் பயிற்சியை கற்றேன். அன்றிலிருந்து நாட்டுமாடுகள் மூலம் தற்சார்பு வாழ்க்கை வாழ முடியும் என்பதை தெரிந்துகொண்டேன்.
அதன்பின்னர் வீட்டில் நாட்டுமாடுகள் வளர்க்க ஆரம்பித்தேன். தற்போது தலா 2 நாட்டுமாடுகள், கன்றுக்குட்டிகளை வளர்த்து வருகிறேன். நாட்டு மாட்டுச்சாணம் மூலம் கைவினைப் பொருட்கள் தயாரிக்கவும் கற்றுக்கொண்டேன். சூடத்தட்டு, பஞ்சகாவ்யா விளக்கு, திருநீறு, மூலிகைப் பல்பொடி, குங்கிலியம் பால் சாம்பிராணி, மூலிகை சாம்பிராணி உற்பத்தி செய்கிறேன்.
மேலும், இயற்கை உரங்கள், ஜீவாமிர்தக் கரைசல் என விவசாயத்துக்கு தேவையான இடுபொருட்களையும் தயாரித்து விற்பனை செய்து வருகிறேன். வீட்டுக்குத் தேவையான மூலிகையால் உருவான தரை சுத்தம் செய்யும் கரைசல், பாத்திரம் கழுவும் மூலிகைப் பவுடர், பஞ்சகாவ்யா சோப் ஆகியவற்றையும் உற்பத்தி செய்து விற்பனை செய்கிறேன்.
இதன் மூலம் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும், எங்களது வீட்டுக்குத் தேவையான காய்கறிகள், நெல் ஆகியவற்றை இயற்கை முறையில் விளைவித்து, தேவைகளை பூர்த்தி செய்து கொள்கிறேன். தமிழகம் முழுவதும் சென்று பசுமை சந்தைகளில் பங்கெடுத்து விற்பனை செய்து வருகிறேன். தனிமனிதனின் தற்சார்பு வாழ்க்கைக்கு நாட்டுமாடுகள் பெரிதும் உதவுகின்றன. இதுகுறித்து அறிய விரும்பும் இளைஞர்களுக்கு வழிகாட்டி வருகிறேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT