Published : 26 Jan 2024 05:04 PM
Last Updated : 26 Jan 2024 05:04 PM

பழநி அருகே குரும்பப்பட்டியில் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டுபிடிப்பு

பழநி அருகே குரும்பப்பட்டியில் கல்லாங் குழிகள் குறித்து ஆய்வு செய்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, பிரெஞ்சு மானுடவியல் அறிஞர் ரொமைன் சைமனல் . (வலது) கல்லாங்குழிகள்

பழநி: பழநி அருகே குரும்பப்பட்டியில் 4 லட்சம் ஆண்டுகள் பழமையான கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன. பழநியை அடுத்த பாலசமுத்திரம் அருகேயுள்ள குரும்பப்பட்டியில் தொல்லியல் ஆய்வாளர் நாராயண மூர்த்தி, பிரெஞ்சு மானுடவியல் அறிஞர் ரொமைன் சைமனல் ஆகியோர் நிலவியல் ஆய்வாளர் மணிகண்டபாரத் உதவியுடன் தொல்லியல் கள ஆய்வு மேற் கொண்டனர். இதில், மனித இனத்துக்கு முந்தைய இனமான ஹோமோ எரக்டஸ் இனம் உருவாக்கிய கல்லாங்குழிகள் கண்டறியப்பட்டன.

இது குறித்து அவர்கள் கூறியதாவது: குரும்பப்பட்டி பவளக் கொடி அம்மன் கோயில் அருகே பாறைப்பகுதியில் மனித இனத்துக்கு முந்தைய இனமான ஹோமோ எரக்டஸ் இனம் உருவாக்கிய குழிகள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தம் 191 குழிகள் உள்ளன. குழிகளை சிறியவை, இடைப்பட்டவை, பெரியவை, மிகப் பெரியவை என நான்கு வகைகளாகப் பிரிக்க முடிகிறது.

மிகச் சிறிய குழிகள் 4 செ.மீ. விட்டம், 1 செ.மீ. ஆழம் முதல் மிகப்பெரிய குழிகள் 15 செ.மீ. விட்டம் முதல் 13 செ.மீ. ஆழம் வரை பல அளவுகளில் உள்ளன. குழிகளின் அமைப்பை 3 வகையாக பிரிக்க முடிகிறது. ஒரு பெரிய குழியைச் சுற்றி வட்டமாக பல குழிகளாகவும், பெரிய குழியின் தொடர்ச்சியாக நீளமான வரிசையில் பல குழிகளும் செதுக்கப்பட்டுள்ளன.

இந்த கல்லாங்குழிகள் கீழ்த்தொல் பழங்கால கட்டத்தைச் சேர்ந்தவை. பழநியில் கண்டறியப்பட்டுள்ள கல்லாங்குழிகள், உலகின் 3-வது தொன்மையான காலத்தைச் சேர்ந்தவை எனக் கணிக்க முடிகிறது. ஏற்கெனவே, மத்திய பிரதேசத்தில் பீம்பேட்காவில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 7 லட்சம் ஆண்டுகள் பழமையானவையாகவும், தென் ஆப்பிரிக்கா களஹாரி பாலைவனத்தில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் 4.10 லட்சம் ஆண்டுகள் பழமையானவையாகவும் உள்ள நிலையில், தற்போது பழநியில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகளின் தொன்மை அதிகபட்சமாக 4 லட்சம் ஆண்டுகள் வரை இருக்கும்.

ஆகவே இவை உலகின் 3-வது தொன்மையான கல்லாங்குழிகள் என்ற பெருமையைப் பெறுகின்றன. இந்த கல்லாங்குழிகளை தொல் மனிதர்கள் ஏன்? எதற்காக உருவாக்கினர் என்ற காரணம் இது வரை கண்டறியப்படாத மர்மமாக உள்ளது.

ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு காரணம் சொல்லப்படுகிறது. தமிழகத்தில் திண்டுக்கல், தூத்துக்குடி, கிருஷ்ண கிரி, தருமபுரி, திருச்சி உட்பட பல மாவட்டங்களில் இந்தக் கல்லாங் குழிகள் கண்டறியப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் கண்டறியப்பட்ட கல்லாங்குழிகள் பெரும்பாலும் புதை குழிகளுக்கு அருகில் உருவாக்கப்பட்டிருப்பதால், இவை இறந்த முன்னோர்களின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்று யூகிக்க முடிகிறது.

பழநி கல்லாங்குழிகள் உருவாக் கப்பட்ட பாறை ஆர்க்கியன்-புரட்டரோசோயிக் காலத்தை, அதாவது 58 கோடி முதல் 250 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவாகிய பாறைகளால் ஆனவை .

மேலும் இந்த உருமாறிய பாறைகளில் செதுக்கப்பட்ட கல்லாங்குழிகள் 2 முதல் 4 லட்சம் ஆண்டுகள் பழமையானவை என்பதால் மனித குலத்தின் பரிணாமம், இடப்பெயர்வு, தொன்மை பற்றிய ஆய்வுகளுக்கு இந்த கல்லாங்குழிகளின் ஆய்வு பெரும்பங்கு வகிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x