Published : 25 Jan 2024 03:20 PM
Last Updated : 25 Jan 2024 03:20 PM
நீலகிரி மாவட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வசிக்கும் படுகரின மக்களின் மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவை தனித்துவம் வாய்ந்தது. பேச்சு வழக்கில் உள்ள அவர்களது மொழிக்கு எழுத்து வடிவம் கொடுக்கும் பணியில், அந்த சமூகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். உலக அளவில், அந்தந்த் சமுதாய மக்களின் நம்பிக்கை, மதம், மரபு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில், ஒவ்வோரு சமுதாயமும் ஒவ்வொரு வகையில் நாட்காட்டிகளை கடைபிடித்து வந்துள்ளன. அந்த வகையில் படுகர் தம் காலக் கணக்கு சிற்றளவில் இருந்து பேரளவு வரை அமைந்துள்ளது சிறப்புக்குரியது.
தற்போது, நீலகிரி மாவட்டத்தில் மட்டுமே வசிக்கும் படுகரின மக்கள் தங்களுக்கான நாட்காட்டியை தயாரித்துள்ளனர். இப்பணியை நெலிகோலு அறக்கட்டளை செய்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளாக படுகர் நாட்காட்டியை வெளியிட்டுள்ளது. இது, படுகர் வரலாற்றில் முதல்முதலாக சந்திரன் – சூரியன் காலக்கணக்கைக் கொண்டு அச்சிடப்பட்ட நாட்காட்டி எனும் சிறப்பைப் பெறுகிறது.
இதுகுறித்து நெலிகோலு அறக்கட்டளை செயலாளர் ஆர்.சிவகுமார் கூறியதாவது: 2024 ஜனவரி 12-ம் தேதி படுகர் புத்தாண்டு பிறந்தது. படுகர் புத்தாண்டின் முதல் மாதம் கூடலு. கூடலு ஓரை (ராசி) க்குரிய 10-வது நட்சத்திரமான மகம் என்பதன் பொருள் நுகம் என்பதாகும். வளைந்திருப்பதால் சங்க இலக்கியம் (அகநானூறு 350) இதனைக் கொடுநுகம் என்று குறிப்பிடுகிறது. இந்த கொடுநுகம் எனும் சொல்தான் படுகாவில் கூடலு என்றுள்ளது. கூடலு மாதத்தில்தான் ஏர் மாத்தோ அப்ப என்ற பண்டிகையை முன்னர் கொண்டாடி இருக்கின்றனர்.
அதாவது, ஓராண்டின் வேளாண் பணிகள் அனைத்தும் முடிந்து உழும் ஏருக்கு சில நாள் ஓய்வளித் துள்ளனர். படுகர் பண்பாட்டு அடையாளங்களுள் குறிப்பிடத்தக்கதாக காலக்கணக்கு அமைந்துள்ளது. எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் ஆகிய பண்டை நால்வகை அளவைகளில், நான்கிலும் படுகர் தமக்கே உரிய வகையில் அளவுகளை வைத்துள்ளனர். இவற்றுக்கு முத்தாய்ப்பு வாய்த்ததுபோல் காலத்தை கணக்கிடும் அளவையும் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
படுகு மொழியில் ஜெந (நாள்), பார (வாரம்), திங்குவ (மாதம்), பருச (வருடம்) ஆகியவை காலக்கணக்கைக் காட்டும் சொற்கள். தமிழ் இலக்கணம் காலத்தை பெரும்பொழுது, சிறுபொழுது என்று இரண்டாகப் பகுத்துள்ளது.
காலை, நண்பகல், ஏற்பாடு (சாயுங்காலம்), மாலை, யாமம், வைகறை ஆகிய ஆறும் சிறுபொழுதுகள். ஞாயிறு தோற்றம் முதல் இந்த ஆறு சிறு பொழுதுகளும் பத்து பத்து நாழிகை அளவு கொண்டன. இதே வகையில் படுகு காலக்கணக்கில் ஆறு சிறுபொழுதுகள் உண்டு.
அவ்வகையில் ஒரக்கது (காலை), ஹகலு (நண்பகல்), பூ ஹொத்து (ஏற்பாடு - சாயுங்காலம்), சந்தொத்து (மாலை), இரு (யாமம்), கோயிஜாம (வைகறை) என்பவை சிறு பொழுதுகளாகும். சிறு பொழுதின் கால அளவு பத்து நாழிகை (நான்கு மணி நேரம்) படுகர் நாள் கணக்கில், சூரியன் உதயத்திலிருந்து மறு நாள் சூரியன் உதயம் வரை ஒரு நாள். ஒரு வாரத்துக்கு ஏழு நாட்கள். சோவார (திங்கள்), மங்கவார (செவ்வாய்), பொதவார (புதன்), சிக்குவார (வியாழன்), பெள்ளி (வெள்ளி), சநி (சனி), ஆதிவார (ஞாயிறு).
இவை முறையே சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, சூரியன் எனும் கோள்கள் வரிசையில் அமைந்தன. இவற்றுள் சிக்குவார என்பது சுக்கிரனை குறிக்கும் எனக் கொள்ள இடமுண்டு. அவ்வாறானால் சிக்குவார என்பது சுக்கிரன் கோள் அடிப்படையில் வெள்ளிக்குரியது என்றாலும், படுகு மொழி வெள்ளிக்கு பெள்ளி என்றும், சிக்குவார என்பதை வியாழன் என்றும் கொண்டுள்ளது.
கூடலு, ஆலாநி, நல்லாநி, ஆநி, ஆதிரெ, பேராடி, ஆவாநி, பெரட்டாதி, தொட்ட தீவிகெ, கிரு தீவிகெ, தய், எம்மாட்டி என்பன படகு மாதங்கள். படுகர் சந்திரன் – சூரியன் காலக்கணக்கைக் கொண்டுள்ளனர். அதாவது மாதங்களை சந்திரன் அடிப்படையில் கணக்கிட்டு, ஆண்டை சூரியன் அடிப்படையில் கணக்கிடுவது சந்திரன் – சூரியன் கணக்காகும். சாலிவாகன ஆண்டு முறை சந்திரன்–சூரியன் அடிப்படையில் உருவானது. கி.பி.78-ம் ஆண்டில் தொடங்கப்பட்டதாக கணக்கிடுகின்றனர். இந்த அடிப்படையில்தான், படகுவில் 2024-ம் ஆண்டை அய்யந பருச 1946 என்று குறிப்பிட்டுள்ளோம், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT