Published : 24 Jan 2024 04:09 PM
Last Updated : 24 Jan 2024 04:09 PM
திருப்பத்தூர்: இளங்குடி ஊராட்சித் தலைவர் தனது சொந்த நிதியில் கால்நடை, காய்கறி பண்ணை அமைத்து, சுயசார்பு கிராமமாக மாற்றியுள்ளார். சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே இயற்கை எழில் கொஞ்சும் ஊராட்சியாக உள்ளது இளங்குடி. கல்லல் ஒன்றியத்தில் உள்ள இந்த ஊராட்சியில் இளங்குடி, கருகுடி ஆகிய 2 கிராமங்கள் உள்ளன. மொத்தம் 3,396 பேர் வசிக்கின்றனர். பெரும்பாலானோர் விவசாயிகளாக உள்ளனர். 90 சதவீதம் வீடுகளில் ஆடு, மாடுகள் உள்ளன. இங்கு 2-வது முறையாக ஊராட்சித் தலைவராக இருப்பவர் நேசம் ஜோசப். இவர் பொறுப் பேற்றபோது ஊராட்சி வருமானமின்றியும், வறட்சியான பகுதியாகவும் இருந்தது. தற்போது அந்த ஊராட்சியை பசுமை, தன்னிறைவு, சுயசார்பு ஊராட்சியாக மாற்றி சாதித்துள்ளார்.
இங்குள்ள ஊருணிகள், கண்மாய், வரத்துக் கால்வாய்கள் முழுமையாக தூர்வாரப்பட்டன. அண்மையில் கிராம மக்கள் பங்களிப்போடு 70 ஆண்டுகளாக தூர்வாரப்படாத அய்யனார் ஊருணி சீரமைக்கப்பட்டது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்தது. விவசாய பரப்பும் அதிகரித்தது. குடிநீர் பற்றாக்குறை நீங்கியது. கழிவுநீர் சாலைகளில் செல்வதை தடுக்கும் வகையில், 147 வீடுகளில் உறிஞ்சுகுழிகள் அமைக்கப்பட்டன. அனைத்து வீடுகளிலும் கழிப் பறைகள், குடிநீர் இணைப்புகள் உள்ளன.
மேலும், மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, தெரு குடிநீர் குழாய்கள் உள்ள பகுதிகளில் 20 சமுதாய பொது உறிஞ்சி குழிகள் அமைக்கப்பட்டன. மேலும், ஊராட்சித் தலைவர் தனது சொந்த நிதி மூலம் 3 ஏக்கரில் காய்கறி தோட்டம் அமைத்தார். அங்கு இயற்கை முறையில் மாட்டு சாணத்தை உரமாகப் பயன்படுத்தி, காய்கறிகளை உற்பத்தி செய்கின்றனர். இதன் மூலம் மாதம் ரூ.10,000 ஊராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. தொடர்ந்து, ஒருங்கிணைந்த கோழிப் பண்ணை, கால்நடை பண்ணையும் அமைத்தார்.
இது தவிர, 9 ஏக்கரில் பழத்தோட்டம், பல்வேறு வகை கீரைத் தோட்டம், முருங்கை தோட்டம், மூலிகை தோட்டம், நெல்லி தோட்டம் அமைத்தார். 34 ஏக்கரில் கால்நடைகளுக்காக பசுந்தீவன அடர்காடுகள் உள்ளன. தேனீ வளர்க்கப்படுகிறது. இவற்றின் மூலமாகவும் ஊராட்சிக்கு வருவாய் கிடைப்பதால், சுயசார்பு ஊராட்சியாக மாறியுள்ளது. ஏற்கெனவே 16 ஏக்கரில் காடாக இருந்த பட்டுப்புளி காட்டில், 10,000 மரக்கன்றுகளை நட்டுள்ளனர்.
3 ஏக்கரில் நாற்றங்கால் பண்ணை அமைத்து மரக் கன்றுகளை மானிய விலையில் விற்பனை செய்து வருகின்றனர். ஊராட்சியில் 60 ஆயிரம் பனை விதைகளை நடவு செய்துள்ளனர். 10 ஏக்கரில் குறுங்காடுகள், 2 ஏக்கரில் பூந்தோட்டம், நகருக்கு இணையாக ஊராட்சிப் பூங்கா என ஊராட்சியை பசுமையாக மாற்றியுள்ளார். இக்கிராமத் தெருக்களுக்கு அன்பு, அறம், நீதி, நன்னெறி, நல்வழி, கருணை என தமிழ் பெயர்கள் வைத்து சமத்துவத்துவதை பேணி வருகின்றனர். நகரத்தை போன்று தெரு பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இது குறித்து ஊராட்சித் தலைவர் நேசம் ஜோசப் கூறியதாவது: எங்களது ஊராட்சி முழுவதும் சிசிடிவி கேமரா பொருத்தியுள்ளோம். பயன்பாட்டில் இல்லாத அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மழைநீர் சேமிப்பு அமைப்பாக மாற்றியுள்ளோம். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்த்துள்ளோம். அதேபோல், நில ஆக்கிரமிப்பு இல்லை. எனது சொந்த செலவில் ரூ.3 லட்சம் செலவழித்து கால்நடை பண்ணை வைத்து பராமரித்து வருகிறோம். முழு சுகாதார ஊராட்சிக்கான விருது பெற்றுள்ளோம். வெற்றி பெற்ற இந்த முறையை மற்ற ஊராட்சிகளிலும் அரசே செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT