Published : 23 Jan 2024 09:00 AM
Last Updated : 23 Jan 2024 09:00 AM
தருமபுரி: அழிவின் விளிம்பில் உள்ள தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் தருமபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர்.
நாட்டுப் புறக் கலைகளில் ஒன்றான தோல்பாவை கூத்துக் கலையும் அழிவின் விளிம்பில் உள்ளவற்றில் ஒன்றாக மாறி வருகிறது. எனவே, இந்தக் கலைகளை நிகழ்த்தி வந்த குழுவினரில் பலரும் வேறு தொழில்களுக்கு மாறி வருகின்றனர். இருப்பினும், தோல் பாவைக் கூத்தின் மீது கொண்ட ஆர்வம் காரணமாக ஒரு சில குழுவினர் மட்டும் பல்வேறு சவால்களுக்கு இடையிலும் இன்றளவும் தோல் பாவைக் கூத்துக் கலையை நிகழ்த்தி வருகின்றனர்.
அந்த வரிசையில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த, கலைமா மணி பட்டம் பெற்ற முத்துசந்திரன் குழுவினர் தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தோல் பாவை கூத்துக் கலையை நிகழ்த்தி வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு தருமபுரி பாரதிபுரம் பகுதியில் அரசு அலுவலர்கள், நாட்டுப் புறக் கலை ஆர்வலர்கள் உள்ளிட்டோர் ஏற்பாட்டில் இந்தக் கலையை நிகழ்த்தினர்.
நேற்று, காரிமங்கலம் ஒன்றியம் குண்டல அள்ளி அரசு நடுநிலைப் பள்ளியில் கல்வியின் முக்கியத்துவம், ஒழுக்கம், கல்வியின் சிறப்பு ஆகியவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தோல்பாவைக் கூத்துக் கலையை நிகழ்த்தினர். இந்நிகழ்ச்சியின் போது பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் ஆசிரியர் ராகவேந்திரன் நன்றி கூறினார். நாட்டுப்புறக் கலை ஆர்வலர் ஜெகநாதன் இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.
இக்குழுவின் ஒருங்கிணைப் பாளர் முத்து சந்திரன், ‘இந்து தமிழ் திசை’யிடம் கூறியது: தோல்பாவைக் கூத்துக் கலையை 5 தலைமுறைகள் கடந்து 6-வது தலைமுறையாக நாங்கள் நிகழ்த்தி வருகிறோம். தோல் பாவைக் கூத்துக்கு திரைக்குப் பின்னால் பயன்படுத்தும் பொம்மை உருவங்கள் அனைத்தும் ஆட்டுத் தோல் மூலம் செய்யப்படுபவை. எங்கள் குடும்பத்தின் முதல் தலைமுறையினர் பயன்படுத்திய, 100 ஆண்டுகளைக் கடந்த பொம்மைகளும் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இன்றைய நவீன பொழுது போக்குக் கலைகள் எல்லாம் வரும் முன்பு மக்களின் உடல் அலுப்பு, மன வேதனைகள் என பலவற்றையும் நீக்கி வாய்விட்டு சிரிக்க வைத்த, ஆர்வமுடன் ரசிக்க வைத்த கலைகளுள் தோல் பாவை கூத்துக் கலையும் ஒன்று.
தற்போது, எங்களுக்கு பொருளாதார ரீதியாக மன நிறைவை அளிக்க முடியாத நிலைக்கு இக்கலை தள்ளப்பட்டு விட்டது. இருப்பினும், இக்கலையிலேயே ஊறிப்போன எங்களுக்கு வருமானத்தை விட மன நிறைவையே பிரதானமாகக் கருதி தொடர்ந்து இயங்கி வருகிறோம். பொது மக்கள் தங்கள் இல்ல நிகழ்வுகள் போன்றவற்றில் இதர இசை நிகழ்ச்சிகளுக்கு வாய்ப்பளிப்பது போலவே எங்களுக்கும் வாய்ப்பளித்தால் அடுத்தடுத்த தலைமுறையினரும் தோல்பாவைக் கூத்துக் கலையை நேரில் பார்க்கும் வாய்ப்பு அமையும். இவ்வாறு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT