Last Updated : 17 Jan, 2024 09:50 PM

 

Published : 17 Jan 2024 09:50 PM
Last Updated : 17 Jan 2024 09:50 PM

ஆண்களுக்கு இணையாக இளவட்டக்கல்லை தலையைச் சுற்றி வீசி பெண்கள் அசத்தல் @ நெல்லை

திருநெல்வேலி அருகே வடலிவிளையில் நடைபெற்ற பொங்கல் விளையாட்டு போட்டிகளில் இளைஞர்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல்லை தலையை வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினர்.

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடலிவிளையில் நடைபெற்ற பொங்கல் விழா விளையாட்டு போட்டிகளில் இளைஞர்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல்லை தலையை வீசி ஆச்சரியத்தை ஏற்படுத்தினார்.

திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கலையொட்டி சிலம்பம், சடுகுடு, மாட்டுவண்டி போட்டி உள்ளிட்ட வீரவிளையாட்டுகள் பாரம்பரியமாக நடந்து வருகிறது. மாவட்டத்தின் தென்பகுதி கிராமங்களில் இளவட்டக்கல் தூக்கும் வீரவிளையாட்டும் நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி பிரசித்தி பெற்றுள்ளது. இந்த கிராமத்தில் ஒவ்வொரு பொங்கல் தினத்தன்றும் நடத்தப்படும் இளவட்டக்கல் தூக்குதல், உரலை தூக்கிவீசும் போட்டிகளில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் பங்கேற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறார்கள்.

இக்கிராமத்தை சேர்ந்த பெண்கள் கடந்த ஆண்டு தெலங்கானாவில் நடைபெற்ற இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் பங்கேற்று முதல் பரிசு பெற்றுவந்தது குறிப்பிடத்தக்கது.நடப்பு ஆண்டு 27- ம் ஆண்டு பொங்கள்விழா போட்டிகள் வடலிவிளையில் நடைபெற்றது. முதலாவதாக ஆண்கள் காதுகளை பிடித்துக்கொண்டு கைகளின் முழங்கைகளை வைத்து உரலை தூக்கி அதிக நேரம் நிறுத்தம் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முத்துபாண்டி முதல் பரிசும், சுடர் 2-ம் பரிசும் பெற்றார்.

அடுத்து இளம்பெண்கள் உரலை தூக்கி பின்பக்கமாக வீசும் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் லெஜின் 14 முறை உரலை தூக்கிவீசி முதல் பரிசும், சிந்துஷா 6 முறை உரலை தூக்கி வீசி 2- ம் பரிசும் பெற்றார். 55 கிலோ எடையுடைய இளவட்டக்கல்லை தூக்கி ஒரு கையில் அதிக நேரம் நிறுத்தும் போட்டியில் விக்கி முதல் பரிசும், பாலகிருஷ்ணன் 2- ம் பரிசும் பெற்றார்.

பெண்களுக்கான 55 கிலோ எடையுடைய இளவட்டக்கல்லை தூக்கிய தலையைச்சுற்றும் போட்டி நடைபெற்றது. இதில் ராஜகுமாரி ஆண்களுக்கு இணையாக இளவட்டக்கல்லை 22 முறை தலையைச்சுற்றி வீசி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியதுடன் முதல் பரிசை பெற்றார். தங்கபுஷ்பம் 2 முறை வீசி 2- ம் பரிசு பெற்றார். ஆண்களுக்கான 129 கிலோ எடையுடைய இளவட்டக்கல்லை தூக்கி தலையைச்சுற்றி வீசும் போட்டியில் செல்லப்பாண்டி முதல் பரிசைப் பெற்றார்.

மாணவர்களுக்கான 98 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் புவின் முதல் பரிசும், பாரத் 2-ம் பரிசும் பெற்றார். பின்னர் விரும்பி அனைவரும் பங்கேற்கும் 98 கிலோ இளவட்டக் கல்தூக்கி தலையைசுற்றி வீசும் போட்டியில் செல்லப்பாண்டி 13 முறை தலையைச் சுற்றி வீசி முதல்பரிசு பெற்றார். பிரதீஸ்வரன் 11 முறை தலையை சுற்றி வீசி 2-ம் பரிசு பெற்றார். பின்னர் 114 கிலோ இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் செல்லப்பாண்டி முதல் பரிசு பெற்றார். மேலும் பெண்களுக்கான கோலப்போட்டி, 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றது.

இந்த விழாவில் அலெக்ஸ் அப்பாவு, திமுக மாவட்ட துணை செயலாளர் வெ.நம்பி உள்ளிட்டோர் பங்கேற்று பரிசுகளை வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடுகளை வடலிவிளை ஊர்மக்கள், இளைஞர்கள் செய்திருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x