Published : 17 Jan 2024 09:00 AM
Last Updated : 17 Jan 2024 09:00 AM
சிவகங்கை: சிவகங்கை அருகே வெள்ளை சேலை உடுத்தி பெண்கள் பொங்கல் வைத்து கொண்டாடினர்.
சிவகங்கை அருகே சலுகைபுரம் முத்தரையர் சமூக மக்கள் பச்சைநாச்சி அம்மன், பாலடி கருப்பு, சிந்தாண்டி என 61 தெய்வங்களை வழிபடு கின்றனர். அவர்கள் மாட்டுப் பொங்கலுக்காக மார்கழி 1-ம் தேதியிலிருந்து விரதம் இருக்கின்றனர். ஒரு வாரத்துக்கு முன்பு மாட்டு தொழுவம் அருகே ஒன்று கூடி, இறைவன் அனுமதி கிடைத்ததும், விழாவுக்கான பிடி மண் கொடுக்கின்றனர். அதன்படி இந்த ஆண்டு ஜன. 8-ம் தேதி விழா தொடங்கியது. ஒரு வாரம் இரவில் வீட்டுக்குச் செல்லாமல் தொழுவம் அருகிலேயே ஆண்கள் தங்கினர்.
பெண்கள் வீட்டில் விரதம் இருந்தனர். அந்நாட்களில் கை வளையல், மெட்டி, கொலுசு உட்பட எந்த அணிகலனையும் பெண்கள் அணிவதில்லை. நேற்று மாட்டு பொங்கலையொட்டி சாமியாடிகள் வீடு, வீடாகச் சென்று அழைப்புவிடுத்தனர். பின்னர் பொங்கல் வைக்கும் பெண்கள் வெள்ளை சேலை உடுத்தி வீடுகளில் இருந்து பொங்கல் பானைகளை எடுத்து வந்தனர். அதற்கு தேவையான பொருட்கள், விறகுகளை ஓலைப் பெட்டிகளில் குடும்பத்தினர் எடுத்து வந்தனர்.
பின்னர் அவர்கள் மந்தைச் சாவடியை சுற்றி மாட்டு தொழுவத்துக்கு வந்தனர். தொழுவம் முன் மண் அடுப்பில் பொங்கல் வைத்தனர். பொங்கல் வைத்ததும், அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து 61 தெய்வங்களுக்கு தனித்தனியாக தலைவாழை இலையில் படையல் வைத்து வழி பட்டனர். பின்னர் அவற்றை ஒன்று சேர்ந்து உண்டனர். அதைத் தொடர்ந்து மாடுகளுக்கு துண்டு கட்டிவிட்டு, சுதந்திரமாக அவிழ்த்து விட்டனர்.
இது குறித்து லெட்சுமி, தர்மன் ஆகியோர் கூறியதாவது: நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெறும் இவ்விழாவில் பெண்கள் விரதம் இருக்கும் நாட்களில் ஆடம்பரமாக இருக்க மாட்டோம். குழந்தை வரம் கேட்டு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவர். குழந்தை பிறந்ததும் கரும்பில் தொட்டில் கட்டி நேர்த்திக்கடன் செலுத்துவர். வெண் பொங்கல்தான் வைப்போம்.
அனைவரது பொங்கலையும் ஒன்று சேர்த்து உண்பதால், பகைவர்களையும் ஒன்று சேர்க்கும் விழாவாக இதை கொண்டாடி வருகிறோம். மாடுகளை விழாவுக்கு முந்தைய நாளில் காட்டுக்குள் விட்டுவிடுவோம். அவற்றை சாமியாடி அழைப்பார். அழைத்ததும், அவை தானாக தொழுவத்துக்கு வந்து அடைந்துவிடும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT