Last Updated : 15 Jan, 2024 04:26 PM

 

Published : 15 Jan 2024 04:26 PM
Last Updated : 15 Jan 2024 04:26 PM

ஆரம்பிக்கலாங்களா..! - சீறிப்பாய தயாராகும் ‘ரேக்ளா’ வண்டிகள் @ பொள்ளாச்சி

ஆனைமலையில் ரேக்ளா பந்தயத்துக்காக தயாராகி வரும் ரேக்ளா வண்டி.

பொள்ளாச்சி: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் ரேக்ளா ரேஸ் நடத்த காளைகளும் வண்டிகளும் தயார்படுத்தப்பட்டு வருகின்றன. கொங்கு மண்ணின் கிராமங்களில் பொங்கல் திருவிழா வந்துவிட்டாலே ரேக்ளா பந்தயங்களுக்கு தயாராகி விடுவார்கள் இந்த மண்ணின் மைந்தர்கள். ஆண்டு முழுவதும் பந்தயத்துக்காகவே பார்த்துப் பார்த்து வளர்க்கப்படும் காளைகளுக்கு, பொங்கலுக்கு சில வாரங்களுக்கு முன்பிருந்தே கவனிப்புகளும், கண்காணிப்புகளும் சற்று தூக்கலாகவே இருக்கும்.

வீட்டில் உள்ள அனைவரும் தங்களின் செல்லப் பிள்ளைகளாக காளைகளைக் கொண்டாடுவார்கள். அதி நவீன தொழில்நுட்பங்களுடன் நடத்தப்படும் மோட்டார் பந்தயங்களுக்கு மத்தியில், உழவர்களின் உணர்வுகளுடன் ரத்தமும் சதையுமாக கலந்து பழகும் காளைகளைக் கொண்டு நடந்தப்படும் ரேக்ளா பந்தயம் வெறும் போட்டி மட்டுமல்ல, அது உணர்வுகளின் சீற்றம். ரேக்ளா பந்தயத்துக்காக காளைகளும், அவை பூட்டப்படும் வண்டிகளும் எவ்வாறு தயாராகின்றன என்ற தகவல் சுவாரஸ்யமானது.

பொள்ளாச்சி அருகே ஆனைமலையில் ரேக்ளா வண்டி தயாரிக்கும் தொழிலில் மூன்று தலைமுறைகளாக ஈடுபட்டு வரும் செளந்தர்ராஜன் கூறியதாவது: மாட்டு வண்டி போல் அல்லாமல் ரேக்ளா வண்டிகளை கூடுதல் கவனம் எடுத்து தயார் செய்வோம். நன்றாக விளைந்த தேக்கு மரத்தை மட்டுமே சக்கரங்களின் பாகங்கள் மற்றும் நுகத்தடி செய்யப் பயன்படுத்துவோம், எடை குறைவாகவும் அதே நேரம் வலிமையுடையதாகவும் வண்டி இருந்தால்தான் பந்தய தூரத்தை விரைவில் அடைய முடியும். காளைகளும் களைப்பு அடையாது.

இரண்டு பேரின் உழைப்பில் 50 முதல் 60 நாட்களில் ஒரு வண்டியை உருவாக்க முடியும். ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் ரேக்ளா வண்டி தயாரிக்கும் தொழில் முடங்கிக் கிடந்தது. ரேக்ளா பந்தயத்துக்கு மீண்டும் அனுமதி கிடைத்ததால் கடந்த சில ஆண்டுகளாக ரேக்ளா வண்டி தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இனி சாலைகளில் காளைகளின் தீப்பொறி பறக்கும் வேகத்தை காணலாம், என்றார்.

ரேக்ளா பந்தயத்தில் பங்கேற்பவர்கள் கூறும்போது, ‘‘கடந்த 20 ஆண்டுகளாக ரேக்ளா போட்டிகளில் பங்கேற்று வருகிறோம். கொங்கு மண்டலத்தில், கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல் மாவட்ட கிராமங்களில் ரேக்ளா பந்தயங்கள் பாரம்பரியமாக நடத்தப்படுகின்றன.

பந்தயத்தில் பங்கேற்க உள்ள பூஞ்சிட்டு, தேன்சிட்டு, தட்டாஞ்சிட்டு என அழைக்கப்படும் காளைகளை தேர்வு செய்ய முதலில் கிராமங்களில் ரேக்ளா வண்டிகளை குரூப்பாக ஓட விட்டு காளைகளைத் தேர்வு செய்வோம். பின்னர் பந்தயத் திடலுக்கு அழைத்து வரப்பட்டு காளைகளுக்கு சிறப்பு உணவு மற்றும் பயிற்சி அளிக்கப்படும். ரேக்ளா நடத்த தற்போது மைதானங்கள் இல்லாததால் 500 மீட்டர் முதல் 1000 மீட்டர் வரை நேர் கோடாக அமைந்துள்ள தார் ரோடுகளில் பந்தயங்கள் நடத்தப்படுகின்றன.

உணவும் பயிற்சி முறைகளும்: காலையில் முட்டை, பால், அடுத்தது நீர்நிலைகளில் நீச்சல் பயிற்சி முடிந்ததும் பேரீச்சை, தேன், கருப்பட்டி கலந்த உணவு தருவோம். பின்னர் சிறிது ஓய்வு, அடுத்தது சாலையில் ஓட்டப்பயிற்சி, கலப்பையில் கட்டி, தரிசு நிலத்தில் விரட்டி உழவு, பின்னர் அருகம்புல், பருத்திகொட்டை, தேங்காய் புண்ணாக்கு, அரிசி கழுவிய தண்ணீர், பால், பேரீச்சை, கருப்பட்டி, வெங்காயம் ஆகியவை மட்டுமே சிறப்பு உணவாக தினமும் வழங்கப்படும். பந்தயத்துக்கு 15 நாட்களுக்கு முன், காளைகளுக்கு பயிற்சி இன்னும் தீவிரமாகும்.

இழுவைத் திறன் பயிற்சியாக காளைகளுக்கு, கிணறுகளில் நீச்சல் பயிற்சி அளிக்கப்படும். இதனால், காளையின் நுரையீரல் காற்றை உள்வாங்கி, நன்றாக விரிந்து கொடுத்து ‘தம்' கட்ட பழகிவிடும். இப்பயிற்சி பந்தயத்தில் முந்திச்செல்ல கைகொடுக்கும். அடுத்த சில நாட்களில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் ரேக்ளா ரேஸ் காளைகளின் பாய்ச்சல் உச்ச கட்டத்தை எட்ட உள்ளது,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x