Published : 15 Jan 2024 09:06 AM
Last Updated : 15 Jan 2024 09:06 AM
மதுரை: பொங்கல் பண்டிகைக்கு வீட்டுக் கூரைகளில் வைக்கப்படும் கூரைப் பூவுக்கு பின்னால் உள்ள அறிவியல், மருத்துவக் குணங்கள் குறித்து நம் முன்னோர்கள் அறிந்து வைத்திருந்தனர். அதை நாம் இன்றளவும் பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம்.
பொங்கல் பண்டிகைக்கு முன் வீடுகளை தூய்மைப்படுத்தி வண்ணம் பூசுகின்றனர். முதல் நாளான போகிப் பண்டிகையின் போது வீடுகளில் ஆவாரம் பூ, மாவிலை, வேப்ப இலை மற்றும் பூளைப் பூ ஆகிய நான்கையும் சேர்த்து கூரைப் பூவாக காப்புக் கட்டுகின்றனர். பண்டைய நடைமுறை இன்றளவும் பாரம்பரியமாக தொடர்கிறது.
இதன் பின்னால் உள்ள அறிவியல், மருத்துவக் காரணங்கள் குறித்து, கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நீர் தொழில் நுட்ப மைய பேராசிரியர் சி.சுவாமிநாதன் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு வீட்டின் முன்வைக்கும் பீளைப் பூவுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. பூளைப் பூ, பொங்கப்பூ, சிறுகண்பீளை, கண்ணுப் பிள்ளைச்செடி என பல்வேறு பெயர்களில் அழைக்கப் படுகின்றன. அமரன் தேசியா எனும் தாவர வகைக் குடும்பத்தைச் சேர்ந்தது. பீளைப்பூ பாம்பு கடிக்கு சிறந்த மருந்தாகும். இச்செடியில் பல மருத்துவ குணங்கள் உள்ளன. வீடுகளில் பூச்சிகள் பிரவேசிக்காமல் தடுக்கும். பொங்கல் திருவிழாவின்போது காப்புக் கட்டவும், வீடுகளுக்கும், மாடுகளுக்கும் தோரணம் கட்டவும் பயன்படுத்தப்படுகிறது.
இது ஒரு வற்றாத புதர் பயிர், பயிரிடப்படாத நிலங்களில் காணப்படுகிறது. மழைக் காலங்களில் நன்றாக வளரும். மழை நின்ற பிறகு பூப்பூக்கும். இதன் இலைகளை ரசம் தயாரிக்கவும் பயன்படுத்துகின்றனர். சீரான சிறுநீர் போக்குக்கும், விஷ முறிவுக்கும் உதவும். மேலும், நோய்த் தொற்றிலிருந்து பாதுகாக்கும் வகையில், ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை ஆகிய மூன்றும் கூரைப்பூவுடன் இணைத்து கட்டப்படுகின்றன. இந்த மலரைப் பாதுகாக்கும் தாவரங்களாக ஆவாரம்பூ, மாவிலை, வேப்ப இலை உள்ளன. இத்தாவரங்கள் பூஞ்சை எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு, வைரஸ் எதிர்ப்பு தாவர மூலக்கூறுகளை கொண்டுள்ளதாக, சமீபத்திய ஆராய்ச்சிகள் மூலம் தெரிய வந்துள்ளன.
இம்மாதிரியான அறிவியல் ரீதியான பயன்கள் மற்றும் மருத்துவ குணங்கள் உள்ளதாலேயே பொங்கல் பண்டிகையின்போது `தை மகளை' வரவேற்கும் வகையில் கூரைப்பூக்களை வீட்டின் முன் வைக்கும் நடைமுறையை நம் முன்னோர்கள் கடைப்பிடித்தனர். இது நம் முன்னோர்களின் அறிவியல் ஞானத்தைக் காட்டுகிறது. எனவே, அனைத்து மக்களின் நலனுக்காக வீட்டின் வெளிப்புறக் கூரையில் நாமும் கூரைப்பூக்களை வைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT