Published : 09 Jan 2024 04:07 PM
Last Updated : 09 Jan 2024 04:07 PM
திருப்பூர்: வாழ்க்கையில் அற்புதங்கள் அவ்வப்போது நிகழும். அப்படிப்பட்ட அற்புத சிறுவன்தான் சாய் சர்வேஸ் (12). தனது ஒன்றே முக்கால் வயதில் ஆட்டிசம் குறைபாடுடைய குழந்தை என்று பெற்றோர் மற்றும் மருத்துவரால் கண்டறியப்பட்டவர். ஆனால், இன்றைக்கு வேர்ல்டு ரெக்கார்டு யூனியன், இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்டு, ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்டுகளில் இடம்பிடித்து தனிப்பெரும் சாதனை நிகழ்த்தி வருகிறார்.
திருப்பூர் கணக்கம்பாளையத்தில் வசித்து வருகிறது இவரது குடும்பம். தந்தை னிவாசன், திருப்பூர் ஏற்றுமதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தாயார் வசுமதி. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்திலுள்ள சிறப்பு பள்ளியில் படித்து வருகிறார் சாய் சர்வேஸ். எந்த ஆண்டில் எந்த தேதியை கேட்டாலும், அதன் கிழமையை கணித்து கூறி அசத்துகிறார்.
அதேபோல், கிழமையை கூறினால், அந்த மாதத்தில் எத்தனை கிழமைகள் அந்த தேதியில் வந்தன, வருகின்றன என்பதையும் கூறி அனைவரையும் கவர்கிறார். 5 நிமிடம் 5 விநாடிகளில் சுதந்திர போராட்ட வீரர்கள் 100 பேரின் பெயரை கூறினால், அவர்களது பிறந்த தேதியை கூறி அசத்துகிறார்.
1800-ம் ஆண்டு ஆக.8-ம் தேதி என்று கூறிவிட்டு கூகுளில் தேடுவதற்குள், பதிலை சட்டென்று கூறி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். தன்னுடைய பலவீனம் குறித்து துளியும் கவலை இல்லை. அதே சமயம் நினைவாற்றலை ஒருமுகப்படுத்தி, கைதேர்ந்து அனைவரையும் அசரடிக்கிறார். இவரது மூளைத்திறன், கணிக்கும் ஆற்றல் இவையெல்லாம் பலரால் பாராட்டப்படுகிறது.
இதுதொடர்பாக சாய் சர்வேஸின் பெற்றோர் கூறும்போது, “ஒரு நாள் வீட்டில் பேசிக்கொண்டிருக்கும்போதுதான், கடந்த ஆண்டு இதே நாள் என்ன கிழமை என்று சொல்ல ஆரம்பித்தார். பின்னர், எதிர்கால ஆண்டுகளில் வரும் தேதிகளை குறிப்பிட்டு கேட்டபோது, பிழையின்றி கூறவே எங்களுக்கு ஆச்சர்யம் தாங்க முடியவில்லை.
தொடர்ந்து இதுபோன்று நாள்தோறும் பல்வேறு ஆண்டுகளுக்கும் கேட்டு நாங்கள் ஓய்ந்து போனோம். ஆனால், சாய் சர்வேஸ் ஓயவில்லை. அனைத்து பதில்களையும் சரியாக கூறி ஆச்சர்யம் அளித்தார். இவனது திறமையை கண்ட பலரும் ‘கடவுளின் குழந்தை’ என்று பாராட்டுகிறார்கள்.
இதையடுத்து, சுதந்திர போராட்டத்தில் 100 தலைவர்களின் பெயர்களை கூறி, அவர்களது பிறப்பு மற்றும் இறப்பு நாளை கூறினோம். தற்போது அதையும் கூறி வருகிறார். எங்கள் மகனின் திறமை எங்களுக்கு தெரிகிறது. அதேபோல், இவரது திறமையை இன்னும் கூர்மைப்படுத்தி தயாராகும்போது, நாளை தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பார். எங்கள் மகனுக்கு தமிழ்நாடு அரசு உறுதுணையாக இருக்க வேண்டும்” என்றனர்.
எந்த ஆண்டிலும், எந்த மாதத்திலும் எந்த தேதியை குறிப்பிட்டாலும், உடனே அந்த கிழமையை சரியாக கூறியும், எந்த வருடத்தின், எந்த மாதத்தின் கிழமையை கூறினால் அந்த மாதத்தின் அந்த கிழமையில் வரும் அனைத்து தேதிகளையும் 1 நிமிடம், 8 விநாடி, 99 மைக்ரோ விநாடிகளில் கூறியும், 62 கேள்விகளுக்கு சரியான பதில் கூறியும் உலக சாதனை படைத்தார்.
இதனை இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட், ஆசியன் புக் ஆஃப் ரெக்கார்ட் ஆகிய நிறுவனங்கள் அங்கீகரித்து சான்றிதழ்கள், பதக்கங்கள் வழங்கி பாராட்டு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அந்த சிறுவனை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் அழைத்து பாராட்டினார். ஆட்சியர் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் அசத்தலாக பதில் கூறி வியப்பில் ஆழ்த்தினார், சாய் சர்வேஸ்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT