Published : 08 Jan 2024 06:14 PM
Last Updated : 08 Jan 2024 06:14 PM
கோவை: உடலில் சிறு காயம் ஏற்பட்டாலே பலர் துவண்டுவிடுகிறோம். கழுத்துக்கு கீழ் உறுப்புகள் செயலிழந்த நிலையில் 17 ஆண்டுகள் இருந்தால், என்ன ஆவோம்? உடைந்து நொறுங்கிப்போவோம். அவ்வாறு உடல் ரீதியாக பிரச்சினைகள் தொடர்ந்தாலும், மிகுந்த நம்பிக்கையுடனும், சுய பச்சாதாபங்கள் இல்லாமல் வாழ்வை எதிர்கொள்கிறார் கோவை குனியமுத்தூர், சுகுணாபுரத்தை அடுத்த, செந்தமிழ் நகரைச் சேர்ந்த கௌ.செ.லோகநாதன் (40). தன்னைப்போன்று பாதிக்கப்பட்டவர்கள், அவர்கள் வாழ்வை நேர்மறை உணர்வுகளோடு எதிர்கொள்ள, நவீன தகவல் தொடர்பு வசதிகளை பயன்படுத்தி, அவர்களுக்கு ஒரு உந்துசக்தியாகவும் விளங்கி வருகிறார்.
உணவக, சுற்றுலா மேலாண்மை படிப்பை முடித்த லோகநாதன், ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற 'ஓபராய்' நட்சத்திர ஹோட்டலில் பேக்கரி பிரிவின் மேற்பார்வையாளராக கடந்த 2006-ம் ஆண்டு பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான், அவரது வாழ்வையே புரட்டிப்போட்ட சம்பவம் நிகழ்ந்தது.
ஜெய்ப்பூர், சாங்கனேரி கேட் சிக்னலில், இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த வேன் இவர் மீது மோதிவிட்டுச் சென்றுள்ளது. இதில், முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு, நரம்புகள் பாதிக்கப்பட்டதால், லோகநாதனின் கழுத்துக்குக் கீழ் உள்ள உறுப்புகள் செயலிழந்துவிட்டன. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று, ஒரு கட்டத்தில், இதிலிருந்து மீளவே முடியாது என்று தெரிந்தபோது, இறந்துவிடுவதே மேல் என்று விரக்தியின் உச்சநிலையில் இருந்துள்ளார்.
படிப்படியாக தன்னை தேற்றிக்கொண்ட இவர், வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த 2018-ம் ஆண்டு சிகிச்சையில் இருந்தபோது, மற்ற நோயாளிகளுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேசுவதை பார்த்த அங்குள்ள டாக்டர் பிரின்ஸ், ‘நீங்கள் ஏன் உங்கள் வாழ்க்கையை ஒரு புத்தகமாக எழுதக்கூடாது?’ என்று கேட்டுள்ளார்.
‘நாமெல்லாம் எப்படி புத்தகம் எழுத முடியும்?’ என யோசனையில் இருந்த லோகநாதனுக்கு, அவரது நண்பரான நடராஜன், புத்தகம் எழுதுவதற்கான அடிப்படை வழிமுறைகளை விளக்கியுள்ளார். அதன்பின், தன் வாழ்க்கையை ‘இவன் வேற மாதிரி அல்ல’ என்ற புத்தகமாக, முதலில் தமிழில் எழுதி கடந்த 2021-ம் ஆண்டு வெளியிட்டார். தற்போது ‘Logism’ என்ற தலைப்பில் ஆங்கிலத்திலும் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
தனிமையும், புறக்கணிப்பும்... - புத்தகம் எழுதும்போது தான் பட்ட சிரமங்கள் குறித்து லோகநாதன் கூறும்போது, ”செல்போனில் உள்ள தமிழ் ‘வாய்ஸ் டைப்பிங்’ தொழில்நுட்பத்தை உபயோகப்படுத்தியும், செயல்படும் ஒரு விரலை வைத்தும், ஒருக்களித்து, படுக்கையில் படுத்துக்கொண்டே புத்தகத்தை எழுதினேன். எழுதும்போது, கண்ணருகேயே செல்போனை வைத்திருந்ததால், கண் எரிச்சல், தோள்பட்டை வலி, இடுப்பு வலி ஏற்பட்டது. வலி ஏற்பட்டால் 4, 5 நாட்கள் தொடர்ந்து எழுத இயலாது. இருப்பினும், முயற்சியை கைவிடாமல் புத்தகத்தை எழுதி முடித்து, திருத்தங்கள் செய்து வெளியிட ஓராண்டாகிவிட்டது.
எனக்கு வெளிமாநிலம், வெளிநாட்டில்தான் நண்பர்கள் அதிகம் என்பதால், தமிழில் எழுதிய புத்தகம் வெளிவந்தபோது, ‘ஆங்கிலத்தில் எழுதினால் நாங்களும் படிப்போமே’ என்று கேட்டுக்கொண்டனர். அப்போது வீல்சேரில் அமரும் நிலையில் இருந்த நான், தவறான பிசியோதெரபி சிகிச்சையால் படுத்தபடுக்கையானேன். உறக்கம் என்பது சுருங்கிப்போனது. இருப்பினும், ஆங்கிலத்தில் புத்தகம் எழுதும் முயற்சியை கடந்த 2022 நவம்பரில் தொடங்கி 2023 டிசம்பரில் நிறைவு செய்தேன். தனிமையும், புறக்கணிப்பும் ஒரு மனுஷனை அதல பாதாளத்திற்கோ அல்லது அதி உயரத்துக்கோ இட்டுச்செல்லும். அது நம்மளோட மனசைப் பொறுத்துதான் இருக்கு” என்றார் உற்சாகம் குறையாமல்.
எல்லாமே அம்மாதான்: லோகநாதனின் தம்பிக்கு திருமணமாகி பெங்களூருவில் வசிக்கிறார். தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், தாய் கௌரி மட்டுமே லோகநாதனுக்கு எல்லாமுமாக உள்ளார். “எனக்கு பல் துலக்கிவிடுவது, ஆடை மாற்றுவது, சாப்பாடு அளிப்பது என இரவு, பகல் பாராமல் இத்தனை ஆண்டுகளும் சலிக்காமல் ஒரு குழந்தையை கவனிப்பது போல கவனித்து வருகிறார் அம்மா. என்னால் சுயமாக எழுந்து நிற்கவோ, அமரவோ முடியாது.
எனவே, நான் நிற்கவும், படுக்கவும் பிரத்தியேமாக வடிவமைக்கப்பட்ட படுக்கையில் என்னை அப்படியே தூக்கி கிடத்தி, நேராக நிற்க வைப்பார் அம்மா. எனவே, தாயை புறக்கணித்துவிட்டு நீங்கள் எத்தனை சாமிய கும்பிட்டாலும் பிரயோஜனம் இல்லை” என்கிறார் லோகநாதன்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆன்லைனில் பேச அழைக்கும்போது லோகநாதன் கூறும் வார்த்தைகள் இவைதான். “வாழ்க்கையில கன்னத்துல கை வச்சு உட்காரும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்ல. ஒரு பிரச்சினையை உங்களால சமாளிக்க முடியும்னா, கவலைப்பட தேவையில்லை. சமாளிக்க முடியாதுனா, கவலைப்பட்டு பிரயோஜனம் இல்லை. உலகத்துல கவலையே இல்லாத மனுஷங்க இரண்டு பேர்தான். ஒருவர் இறந்துவிட்டார். இன்னொருவர் இன்னும் பிறக்கவே இல்லை”. தன்னம்பிக்கை மனிதர், லோகநாதனின் புத்தகங்கள், அவர் குறித்த விவரங்களை www.gsloganathan.com என்ற இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT