Published : 08 Jan 2024 04:10 AM
Last Updated : 08 Jan 2024 04:10 AM
ராமேசுவரம்: இலங்கையில் உள்நாட்டு போருக்குப் பின்னர், தமிழா்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி முதன்முறையாக திரிகோணமலை மாவட்டம் சம்பூரில் நடைபெற்றது.
உள் நாட்டுப் போர் காரணமாக, இலங்கையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை. இந்நிலையில், தமிழக ஜல்லிக்கட்டுப் பாதுகாப்பு நலச் சங்கத்தின் வழிகாட்டுதலுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவரும், கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் முயற்சியில் நேற்று முன்தினம் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது.
திரிகோணமலை மாவட்டம், சம்பூர் பத்ரகாளியம்மன் கோயில் களத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்து, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பேசியதாவது: தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் தொடர்ச்சியாக மாட்டுப் பொங்கல் கொண்டாடப் பட்டு, ஜல்லிக்கட்டு போட்டிகளும் நடத்தப் படுகின்றன. தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை இலங்கையில் நடத்துவதில் பெருமை கொள்கிறோம்.
மேலும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிலம்பம், கபடி, ரேக்ளா, படகுப் போட்டிகளும் நடத்தப்படும், என்றார். இப்போட்டியில் சுமார் 200 காளைகள் களமிறக்கப்பட்டன. தமிழக வீரர்கள் உட்பட 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். காளைகளை அடக்கிய வீரர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ ஶ்ரீ முருகன், நடிகர் நந்தா, தமிழக ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச் சங்கத் தலைவர் ஒண்டி ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இலங்கையில் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறாததால் சம்பூரில் நடந்த ஜல்லிக்கட்டுப் போட்டியை அந்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர். மேலும், தமிழகத்தைத் தாண்டி ஜல்லிக்கட்டு வேறு ஒரு நாட்டில் நடைபெறுவது இலங்கையில் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT