Published : 04 Jan 2024 06:52 PM
Last Updated : 04 Jan 2024 06:52 PM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண் பானையில் சர்க்கரை பொங்கல் வைத்து, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னையைச் சேர்ந்த தனியார் சுற்றுலா நிறுவனம் ஆண்டு தோறும் வெளிநாட்டினர் பங்கேற்கும் ‘ஆட்டோ ரிக்ஷா சேலஞ்ச்’ என்ற ஆட்டோ சுற்றுப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. அந்த வகையில் 17-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஆட்டோ ரிக்க்ஷா சேலஞ்ச் சுற்றுலா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பயணம் கடந்த 28-ம் தேதி சென்னையில் தொடங்கியது. இந்த பயணத்தில் இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளை சேர்ந்த 7 பெண்கள் உள்ளிட்ட 26 பேர் கலந்து கொண்டுள்ளனர்.
வெளிநாட்டினர் 26 பேரும் 9 அணிகளாக பிரிக்கப்பட்டு 9 ஆட்டோக்களில் தங்கள் பயணத்தை சென்னையில் இருந்து 28-ம் தேதி தொடங்கினர். அவர்களே ஆட்டோக்களை ஓட்டி வந்தனர். புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக அவர்கள் காலை தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். தூத்துக்குடியில் உள்ள பிரசித்தி பெற்ற தூய பனிமய மாதா பேராலயம், முத்துநகர் கடற்கரை உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.
பொங்கல் கொண்டாட்டம்: பின்னர், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்கள் ஆட்டோக்களில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள தனியார் பண்ணைத் தோட்டத்துக்கு சென்று சேர்ந்தனர். அங்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். வெளிநாட்டினர் 9 அணியினரும் 9 பானைகளில் தனித்தனியாக பொங்கல் வைத்தனர். அவர்களுக்கு பொங்கல் பாணை, பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் கொடுக்கப்பட்டு, அவர்களே அடுப்பு மூட்டி தனித்தனியாக பொங்கல் வைத்தனர்.
வேட்டி சேலையில் அசத்தல்: வெளிநாட்டினர் அனைவரும் தமிழர் கலாச்சாரத்துக்கு மாறியிருந்தனர். ஆண்கள் அனைவரும் வேட்டி கட்டி, தோளில் துண்டு போட்டிருந்தனர். அதுபோல பெண்கள் சேலை கட்டி தமிழ் பெண்களாக மாறினர். பொங்கல் பானை பொங்கி வழிந்த போது, தோட்டத்து பணியாளர்கள் சொல்லி கொடுத்தப்படி ‘பொங்கலோ, பொங்கல்’ என கோஷமிட்டதுடன், குலவை சப்தம் கொடுத்து அசத்தினர்.
பின்னர் தாங்கள் சமைத்த பொங்கலை உண்டு மகிழந்தனர். இதில் சிறப்பாக பொங்கல் வைத்த முதல் மூன்று குழுவினருக்கு வாழைத்தார்கள் பரிசாக வழங்கப்பட்டன. வெளிநாட்டினரின் ஆட்டம், பாட்டத்துடன் அந்த பண்ணை தோட்டம் களைகட்டியிருந்தது. தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன.
இந்த கொண்டாட்டத்தை பார்க்க உள்ளூர் மக்கள் ஏராளமானோர் அங்கு திரண்டிருந்தனர். வெளிநாட்டு சுற்றுலா குழுவினர் நாளை (ஜன.5) கன்னியாகுமரி புறப்பட்டு செல்கின்றனர். நாளைமறுநாள் (ஜன.6) கன்னியாகுமரியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் ஆட்டோ சுற்றுலா குழுவினர், அங்கு தங்களது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து, தங்கள் நாடுகளுக்கு விமானங்கள் மூலம் திரும்புகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT