Published : 04 Jan 2024 05:48 AM
Last Updated : 04 Jan 2024 05:48 AM
திருப்பத்தூர்: சங்க கால மக்கள் வாழ்ந்ததாக கருதப்படும் திருப்பத்தூர் மாவட்டம் குண்டு ரெட்டியூரில் விரைவில் தமிழக அரசின் தொல்லியல்துறை அகழாய்வு செய்ய அதிக வாய்ப்ப்பு இருப்பதாக அந்த இடங்களில் பல ஆண்டுகளாக களஆய்வு செய்து வரும் திருப்பத்தூர் தூய நெஞ்சக்கல்லூரியின் தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு தெரிவித்துள்ளார். இது குறித்து ‘இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம், பேராசிரியரும் முனைவருமான ஆ.பிரபு கூறும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டம் குண்டு ரெட்டியூர் ஏலகிரி மலைச்சரிவில் அமைந்துள்ள இயற்கை எழில் சூழ்ந்த அழகிய சிற்றூராகும்.
இந்த இடத்தில் கடந்த 2016-ம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் சங்க கால மக்கள் வாழ்ந்த இடமாக இந்த இடம் கண்டறியப்பட்டது. இதைத்தொடர்ந்து, இந்த இடத்தில் அடுத்தடுத்த கட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் அங்கே கண்டறியப்பட்டு அவை ஆவணப்படுத்தப்பட்டன. இந்நிலையில், தமிழக அரசின் தொல்லியல் துறை முறையான ஆய்வினை இந்த இடத்தில் மேற்கொண்டு, அகழாய்வு செய்து முற்கால மக்களின் வாழ்வியல் வரலாறுகளை வெளிக்கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து நாங்கள் கோரிக்கை விடுத்து வருகிறோம்.
அதன் தொடர்ச்சியாக, கடந்த 2017-ம் ஆண்டு அன்றைய தொல்லியல்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன், தொல்லியல் துறைக்கும் களஆய்வில் கண்டறியப்பட்ட ஆய்வு தரவுகளை முன்வைத்து ஆய்வு அறிக்கை ஒன்றிணைத்து தயார் செய்து, இங்கு அகழாய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.
தொடர்ந்து, பல்வேறு ஊடகங்களின் வாயிலாக இந்த இடத்தின் சிறப்புகளை வெளிக்கொண்டு வந்த வண்ணம் இருந்தோம்.இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போதைய தொல்லியல்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடமும், தொல்லியல்துறை செயலரும், அண்மைக்காலம் வரை இந்த இடத்தில் கண்டறியப்பட்ட சான்றுகளை முன் வைத்து ஆய்வறிக்கை தயார் செய்து முறையான அகழாய்வினை இந்த இடத்தில் மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை மனு மீண்டும் அனுப்பப்பட்டுள்ளது.
தொடர்ந்து ஊடகங்கள் மேற்கொண்ட முயற்சியின் பயனாக தற்போது தொல்லியல் துறை சார்பில் தொல்லியல்துறை அலுவலர் ரஞ்சித் முதற்கட்ட ஆய்வினை குண்டு ரெட்டியூரில் மேற்கொண்டார். இந்த ஆய்வில் நானும், ஆய்வு குழுவினரும் கலந்து கொண்டோம்.
இந்த ஆய்வின்போது புதிதாக இந்த இடத்தில் ‘கருப்பு-சிவப்பு மண்பாண்ட ஓடுகளும்’ நெசவு நூற்க பயன்படுத்தப்பட்ட சுடுமண் ‘தக்களி’ என்ற பொருளும், சிறப்பாக அக்கால மக்கள் கழுத்தில் அணிய பயன்படுத்திய ‘கல் மணி’ (பளிங்கு மணி) ஒன்றினையும், அக்கால மக்கள் விளையாட பயன்படுத்திய சுடுமண்ணால் ஆன ‘வட்டச்சில்லு’ (ஆட்டக்காய்) ஒன்றும் ஆய்வில் கண்டறியப்பட்டன’’ என்றார்.
முதற்கட்ட கள ஆய்வுக்கு பிறகு தொல்லியல் துறை அலுவலர் ரஞ்சித் கூறும்போது, “இந்த இடத்தில் அகழாய்வு செய்ய வேண்டுமென முனைவர் பிரபுவிடமிருந்து வந்த கோரிக்கை மனுவினை பரிசீலித்து தற்போது தொல்லியல் துறை சார்பாக இங்கே முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டேன்.
இந்த ஆய்வில் சங்க கால மக்கள் வாழ்ந்த இடமாக கருதப்படக்கூடிய இந்த இடத்தில் அதற்கான போதுமான சான்றுகள் பல கிடைத்திருக்கின்றன. மேலும் கடந்த 8 ஆண்டுகளில் மேற்பரப்பு கள ஆய்வில் இங்கு சேகரிக்கப்பட்டு திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு தொல்லியல் சான்றுகளை நான் சென்று பார்வையிட்டேன். அவை யாவும் இவ்விடத்தின் தொன்மைகளை பறைசாற்ற கூடியவையாக உள்ளன.
குண்டு ரெட்டியூரில் சுமார் 80 ஏக்கர் நிலப்பரப்பில் மேற்கொண்ட ஆய்வில் பல தொன்மை சான்றுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை அகழாய்வுகள் எதுவும் மேற்கொள்ளப்படாத நிலையில், இந்த இடத்தில் அகழாய்வு செய்வதற்கான சாத்தியக்கூறுகள் எதிர்பார்த்த அளவில் உள்ளன.
இந்த இடத்தில் அகழாய்வு மேற்கொள்ள அரசுக்கு பரிந்துரைக்கப்படும். அகழாய்வு மேற்கொள்ளப்படும் பட்டியலில் இவ்விடமும் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன’’ என்றார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்டத்தில் முற்கால வரலாற்று சிறப்புகளை அறிவதற்காக குண்டு ரெட்டியூரில் தமிழக அரசின் தொல்லியல் துறை முறையான அகழாய்வு மேற்கொள்வதற்கு தொடர்ந்து பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்த நிலையில், தற்போது அதற்கான சாத்திய கூறுகள் கணிந்து வந்திருப்பது மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.
விரைவில், இவ்விடத்தில் அகழாய்வு செய்யப்பட்டால் திருப்பத்தூர் மாவட்டத்தின் வரலாறு உலக அளவில் பேசப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக ஆய்வு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT