Last Updated : 04 Jan, 2024 04:43 AM

 

Published : 04 Jan 2024 04:43 AM
Last Updated : 04 Jan 2024 04:43 AM

சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு ‘ஜல் ஜல்’ கழுத்து மணிகள் தயார்!

சிங்கம்புணரி பெரிய கடை வீதியில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கான கழுத்து மணிகளை தயாரிக்கும் தொழிலாளர்கள்.

சிங்கம்புணரி: சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு காளைகளுக்கு ஜல் ஜல் என ஒலி எழுப்பும் கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தென்மாவட்டங்களில் தை மாதம் பொங்கல் பண்டிகையிலிருந்து 5 மாதங்களுக்கு தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு நடைபெறுவது வழக்கம். ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டில் பங்கேற்கும் காளைகளின் கம்பீரத்துக்காகவும், அலங்கரிக்கவும் கழுத்தில் மணிகள் கட்டுவர். அந்த வகையில் சிங்கம்புணரி மற்றும் சுற்றுப்பகுதியில் தயாரிக்கப்படும் கழுத்து மணிகள் பலராலும் விரும்பி வாங்கப்படுகிறது.

எளிதில் அறுபடாமல் உறுதியாக இருப்பதால் அவற்றை சிவகங்கை மாவட்டம் மட்டுமின்றி, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாங்கிச் செல்கின்றனர். ஜன.15-ம் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகளுக்கு பல்வேறு பயிற்சிகளை கொடுத்து வருகின்றனர். இதையடுத்து சிங்கம்புணரியில் கழுத்து மணிகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் 20-க்கும் மேற்பட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராஜா

இதுகுறித்து கழுத்து மணி தயாரிப்பாளர் ராஜா கூறியதாவது: காளைகளின் கழுத்தில் மணியை கட்டினால், அதன் ஜல், ஜல் ஓசையில் காளைகள் வீரியமாக செல்லும். இதனால் காளை உரிமையாளர்கள் அதற்கு கழுத்து மணி கட்டுவதில் ஆர்வம் காட்டுகின்றனர். கழுத்து மணி தயாரிக்க வெண்கலம், பித்தளை, எவர் சில்வரில் தயாரிக்கப்பட்ட மணிகளை பயன்படுத்துவோம்.

இந்த மணிகளை கும்ப கோணம், மணப்பாறை, துவரங்குறிச்சி, அரியக் குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வாங்கி வருவோம். பின்னர் அவற்றை தேவைக்கு ஏற்ப தோல் பெல்டுகளில் வைத்து தைப்போம். கைகளிலேயே தைப்பதால் மணி எளிதில் அறுந்து விழாது.

கொலுசு சத்தம் போல் கேட்கும் அரியக்குடி மணிகளே அதிகளவில் விற்பனையாகின்றன. அவற்றை 4 அறுவை (பல்)மணி, 6 அறுவை, 8 அறுவை மணி என தயாரிக்கிறோம். மணிகளுக்கு இடையே நூல் குஞ்சங்கள் வைப்போம். காளை உரிமையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்ப குஞ்சங்களின் வண்ணம், வடிவங்களை பயன்படுத்துவோம். சிறிய கன்றுகளுக்கு கழுத்து மணியில் 6 மணிகள் வைப்போம்.

பெரிய காளைகளுக்கு 11 முதல் 18 மணிகள் வரை வைப்போம். அவற்றை தரம், மணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப ரூ.2,000 முதல் ரூ.12,000 வரை விற்பனை செய்கிறோம். இதுதவிர காளைகளுக்கு கால் சலங்கை, மூக்கணாங்கயிறு போன்றவற்றையும் தயாரித்து தருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x