Published : 03 Jan 2024 05:14 PM
Last Updated : 03 Jan 2024 05:14 PM

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 97 ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள எடை இயந்திரம்!

எடை இயந்திரம்

திண்டுக்கல்: ஆங்கிலேயேர் ஆட்சிக் காலத்தில் திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட எடை இயந்திரம் இன்றும் பயன்பாட்டில் இருப்பது ரயில் பயணிகள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல்லில் 1875-ம் ஆண்டில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது. அப்போது சென்னை- மதுரை இடையே முக்கிய வழித்தடமாக திண்டுக்கல் ரயில் நிலையம் அமைக்கப்பட்டது.

தற்போது திண்டுக்கல்-கரூர், திண்டுக்கல் - பொள்ளாச்சி என 2 புதிய வழித்தடங்களை தன்னுடன் இணைத்துக் கொண்டு திண்டுக்கல் சந்திப்பாக திகழ்கிறது. இந்த ரயில் நிலையத்தில் நடைமேடைக்கு மேலே தொங்கவிடப்பட்டிருக்கும் இரண்டு புறமும் நேரம் பார்க்கும் வகையில் உள்ள கடிகாரம் இன்னமும் சரியான நேரத்தை காட்டிக்கொண்டிருக்கிறது.

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 97 ஆண்டகளாக பயன்பாட்டில் உள்ள ஆங்கிலேயர்
காலத்து எடை இயந்திரத்தில் பொறிக்கப்பட்டுள்ள விவரங்கள்.

இதேபோல் ரயிலில் சரக்குகள் அனுப்ப முன்னதாக அவற்றை எடைபோட்டு, எடைக்கு தகுந்த கட்டணம் நிர்ணயிக்கப்படும். இதற்காக எடை மேடை பயன்படுத்தப்பட்டது.

தற்போது எவ்வளவோ நவீன எடைமேடைகள் வந்தபோதும், இன்னமும் ஆங்கிலேயேர் காலத்தில் லண்டனில் இருந்து கொண்டுவரப்பட்ட எடை இயந்திரம் சிறப்பாகச் செயல்படுகிறது.

திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு 1927-ம் ஆண்டு லண்டனில் உள்ள பிர்மிங்காம் என்ற இடத்தில் இருந்து கொண்டுவரப்பட்டு எடை இயந்திரம் நடைமேடையில் அமைக்கப்பட்டது. 97 ஆண்டுகளாக இந்த எடை இயந்திரம் எந்தவித பழுதுமின்றி பயன்பாட்டில் உள்ளது.

எடைஇயந்திரத்தின் மேல்பரப்பில் எஸ்.ஐ.ஆர். (சவுத் இந்தியன் ரயில்வே) 1927 என்ற விவரம் பொறிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வரும் பயணிகள், இந்த எடை இயந்திரத்தை ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x