Published : 02 Jan 2024 06:35 PM
Last Updated : 02 Jan 2024 06:35 PM
திருநெல்வேலி: திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால், அதிலிருந்து தப்பிக்கும் வகையில் 10 படிக்கட்டுகளுடன் உயரமாக அமைக்கப்பட்டுள்ள பழங்கால வீடுகள் இப்போதும் அதிசயிக்க வைக்கின்றன. முன்னோர்களின் பட்டறிவிலிருந்து யாரும் பாடம் கற்கவில்லை என்பதால் பெருவெள்ளத்தால் பாதிப்புகளை சந்திக்க நேர்ந்துள்ளதாக முதியோர்கள் தெரிவிக்கிறார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த 17, 18-ம் தேதிகளில் தொடர்ச்சியாக பெய்த அதிகனமழையால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட அணைகளில் 1 லட்சம் கனஅடிக்குமேல் தாமிரபரணியில் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றங்கரையோர குடியிருப்புகளுக்குள் வெள்ளம் புகுந்து பாதிப்புகள் ஏற்பட்டன. அந்த வகையில் திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரத்திலுள்ள வண்ணார்பேட்டை, சிந்துபூந்துறை, கைலாசபுரம், மீனாட்சிபுரம், கருப்பந்துறை, கொக்கிரகுளம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தனர். 1992-ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கைவிட அதிகமாகவே தாமிரபரணியில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியதாக முதியோர்கள் தெரிவிக்கிறார்கள்.
தாமிரபரணியில் வெள்ளம் வரும்போதெல்லாம் ஆற்றங்கரையோர பகுதி மக்கள் பதைபதைக்க மேடான இடங்களுக்கு இடம்பெயர்வது அவ்வப்போது நடைபெற்று வருகிறது. குறுக்குத்துறை முருகன் கோயில் மண்டபங்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியிருக்கும்போது மேடான பகுதியிலுள்ள தலத்தில் பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆற்று வெள்ளத்தை எதிர்கொள்ளும் வகையில் இந்தக் கோயிலில் சுவர்களின் கட்டுமானங்கள் படகுகளைப் போன்று அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோல் வெள்ளத்தை எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கையாக தாழ்வான பகுதிகளில் இருந்து உடனே வெளியேறவும் பல்வேறு கட்டமைப்புகளை முன்னோர்கள் உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
அந்த வகையில், திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகையில் 10 படிக்கட்டுகளுடன் உயரமாக வீடுகளை அமைத்திருக்கிறார்கள். சிந்துபூந்துறையில் இத்தகைய பழங்கால வீடுகளை இப்போதும் காணமுடியும். திருநெல்வேலியில் தாமிரபரணி ஆற்றங்கரை ஓரமாக அமைந்துள்ளப் சிந்துபூந்துறை, திருஞானசம்பந்தரால் "சிந்துபூந்துறை கமழ் திரு நெல்வேலி உறை செல்வர்தாமே" என்று பாடி சிறப்பு பெற்றது.
தாமிரபரணி ஆற்றின் கரையில் இது அமைந்திருப்பதால் இங்குள்ள பல வீடுகள் தெருவின் தரையிலிருந்து 10 படிகள் ஏறிச் செல்லும் உயரத்திலேயே அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றில் வெள்ளம் வரும் நேரத்தில் வெள்ள நீரால் எந்தவித பாதிப்பும் ஏற்படாதிருக்கவே இந்த விதமாக வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.
முதியவர்கள் கருத்து - இது தொடர்பாக இப்பகுதியைச் சேர்ந்த முதியவர்கள் கூறும்போது, ''உயரமாக அமைக்கப்பட்டுள்ள இந்த வீடுகள் ஆற்றின் கரையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில்தான் அப்போதெல்லாம் கட்டப்பட்டிருக்கின்றன. ஆற்றங்கரையில் அப்போதெல்லாம் தோப்புகள் இருந்துள்ளன. காலப்போக்கில் ஆற்றங்கரைகளை ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்புகளையும் கட்டுமானங்களையும் அமைத்துவிட்டார்கள்.
அந்தக் காலத்தில் நம் முன்னோர்களிடம் காணப்பட்ட முன்னெச்சரிக்கை உணர்வை இன்று நாம் தவற விட்டதாலேயே ஆற்று வெள்ளம் மாநகரையே புரட்டிப் போடும் அளவுக்கான சேதத்தை உருவாக்கி சென்றிருக்கிறது.
ஆற்றின் கரையிலிருந்து 1 கி.மீ. தூரத்தில் குடியிருப்பை அமைத்த விதம், எட்டடி, பத்தடி உயரத்தில் வீடுகளை அமைத்த முன்னெச்சரிக்கை பாங்கு போன்ற நம் முன்னோர்களின் பட்டறிவை நாம் தொலைத்து நிற்கிறோம். நம் முன்னோர்களின் ஞானமீட்டுருவாக்கமே இன்றைய நமது தேவையாக இருக்கிறது'' என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT