Published : 02 Jan 2024 05:07 PM
Last Updated : 02 Jan 2024 05:07 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து கடந்த 1993-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி தனியாக பிரிக்கப்பட்டு விழுப்புரம் மாவட்டம் புதிய மாவட்டமாக உருவானது. 2023-ம் ஆண்டு செப்டம்பரில், 30-வது ஆண்டில் நமது விழுப்புரம் மாவட்டம் அடியெடுத்து வைத்துள்ளது. இதனை சிறப்பிக்கும் வகையில், விழுப்புரம் மாவட்டத்தின் தேவைகள், மக்களின் எதிர்பார்ப்புகள், நிறைவேறிய திட்டங்கள், நிறைவேற்றப்படாத நிலுவையில் உள்ள திட்டங்கள், ஊர்கள் தோறும்உள்ள அடிப்படைத் தேவைகள், தீர்க்க முடியாமல் இருக்கும் நீண்ட நாளைய சிக்கல்கள் என பல தடங்களில், பல தரப்பில் இருந்து தகவல்கள் பெற்று ஒரு தொகுப்பாக, தொடர்ந்து நமது ‘இந்து தமிழ் திசை’யின் சிறப்பு பகுதியில் வெளியிட்டோம்.
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட நிர்வாகம், அரசு தரப்பில் மேற்கொண்டுள்ள பணிகள் குறித்து ஒரு பட்டியலை மாவட்ட ஆட்சியர் பழனி தரப்பில் இருந்து வெளியிட்டிருக்கிறது. ஆட்சியர் அளித்துள்ள அந்த தகவல் விவரம் வருமாறு: விழுப்புரம் மாவட்டம் 3 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்களை உள்ளடக்கியது. 688 கிராம ஊராட்சிகளை தன்னகத்தே கொண்டுள்ளது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 20 லட்சத்து 93 ஆயிரத்து 3 ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் வீதம் உள்ளனர். மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டரில் 481 பேர் வசிக்கின்றனர்.
மாவட்டத்தில் எழுத்தறிவு விகிதம் 2011-ம்ஆண்டில் 71.88 சதவீதமாக இருந்தாலும்,தற்போது ஆண்களில் 80.58 சதவீதம், பெண்களில் 63.51 சதவீதம் என எழுத்தறிவு உள்ளது.கடந்த 30 ஆண்டுகளில் 192 பள்ளிகள் உள்ளன. தற்போது 10, 12-ம் வகுப்பின் தேர்ச்சி விழுக்காடு90 சதவீதமாக உயர்ந்துள்ளது.
2008-ம் ஆண்டுதொடங்கப்பட்ட விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 500 படுக்கைகளுடன் தரம் உயர்த்தப்பட்டு, தற்போது 1,274 படுக்கைவசதிகளுடன் விரிவுப்படுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் 3.60 லட்சம் பண்ணை குடும்பங்கள் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களையே தங்களின் வாழ்வாதாரமாக கொண்டுள்ளனர். இம்மாவட்டத்தின் பிரதான பயிராக நெல் பயிரிடப்படுகிறது. மேலும் 80 சதவீதம் வரை உளுந்து பயிரிடப்படுகிறது.
புறவழிச்சாலை பணி: விழுப்புரம் மாவட்டத்தில் 29 ஆண்டுகளில் 2,081 கிலோ மீட்டர் சாலைகள் உருவாக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றன. வளவனூரில் நிலவும் போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் நகாய் மூலம் ஜானகிபுரம் - கெங்கராம்பாளையம் வரை 16 கி.மீ புறவழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. 2024-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இப்பணியை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரையில் 2,08,496 பேருக்கு கான்கிரீட் வீடுகள் வழங்கப்பட்டுள்ளன. 2,91,773 வீடுகளுக்கு குடிநீர் குழாய்இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்டத்தில் 2021-22-ம் ஆண்டில் ரூ. 61,43,00,209 மதிப்பில் 2,01,14,611 லிட்டர் பால் உற்பத்திசெய்யப்பட்டு பால்வளம் மற்றும் கால்நடைவளர்ப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
மரக்காணம் அருகே கழுவெளியில் 2டிஎம்சி தண்ணீரை தேக்கி கடல் நீர் உட்புகாமல் தடுக்கும் பணிக்காக ரூ. 161 கோடி நிதி பெறப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. மீதமுள்ள பணிகளுக்கு வனத்துறைஅனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நந்தன்கால்வாய் திட்டம்: நந்தன்கால்வாயை சீரமைப்பதன் மூலம் 3,388.34 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுவதுடன் நிலத்தடி நீர்மட்டம் உயரும். எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு ரூ.86.25 கோடி மதிப்பில் புனரமைக்க மறுகட்டுமான பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. மல்லாட்டாறில் இருந்து பிரிந்து செல்லும் நரியாற்றை புனரமைக்க ரூ.2 கோடி திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம் அருகே பெலாக்குப்பம், கொள்ளார் மற்றும் வெண்மணியாத்தூரில் 720 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. வானூர் அருகே புதிய தொழில்நுட்ப பூங்கா அமைக்கும் பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.
2008-ம் ஆண்டு திருநங்கைகளுக்கு நலவாரியம் அமைக்கப்பட்டு, 219 திருநங்கைகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம் கடந்த 2022-23-ம் ஆண்டில் 22 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டதில் 4,874 பேர் பங்கேற்றதில் 1,779 நபர்களை 361 நிறுவனங்கள் தேர்வு செய்து, பணி வழங்கியுள்ளது.
புதிய ரயில் பாதை: திண்டிவனம் முதல் திருவண்ணாமலை வரை புதிய ரயில்பாதை அமைக்க 168.45 ஹெக்டேர் பட்டா நிலங்கள் கையகப்படுத்திட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. இத்திட் டத்தை 31.08.2020 அன்று தற்காலிகமாக நிறுத்திவைக்க ஆணையிடப்பட்டது. தற்போது இத்திட்டப்பணிகளை தொடங்கிட அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்த தனியார் நிலங்கள் 85 ஏக்கரை கையகப்படுத்த அரசுக்கு அறிக்கை அனுப்பபட்டு பரிசீலனையில் உள்ளது.
வனவிலங்கு சரணாலயம்: வனத்துறையின் மூலம் செஞ்சி அருகே பாக்கமலையில் 4,473.84 ஹெக்டேர் நிலத்திலும், கெங்கவரத்தில் 2,681.87 ஹெக்டேர் நிலத்திலும் வனவிலங்கு சரணாலயம் அமைக்கப்பட உள்ளது. வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப 2021-22ம் ஆண்டில் 2,024 நியாயவிலைக்கடைகள் மூலம், 10,44,837 குடும்ப அட்டைகளும், 8,36,776 சமையல் எரிவாயு இணைப்பும் வழங்கப்பட்டு, குடிமை பொருட்கள் தங்கு தடையின்றி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களும் குறிப்பாக கிராமத்தில் வசிக்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து துறைகளின் மூலம் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | யார் ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வளர்ந்தது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT