Published : 31 Dec 2023 08:20 AM
Last Updated : 31 Dec 2023 08:20 AM
அயோத்தி: அயோத்தி பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி முதலில் அயோத்தி தாம் ரயில் நிலையத்தை திறந்துவைத்தார். அங்கிருந்து அயோத்தி விமான நிலையத்துக்கு செல்லும் வழியில், தலித் காலனியில் அவர் காரை நிறுத்தி இறங்கினார்.
அங்கு இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டத்தின் 10-வது கோடி பயனாளி மீரா மாஞ்சியின் வீட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்றார். ஏழை மீனவ பெண்ணான அவர், பிரதமரின் வருகையால் இன்ப அதிர்ச்சியில் உறைந்தார். அந்த வீட்டில் சுமார் 15 நிமிடங்கள் இருந்த அவர், குடும்பத்தினரின் சூழல், ஒட்டுமொத்த காலனியின் நிலை குறித்து விரிவாக கேட்டறிந்தார். மீனவ பெண் மீரா மாஞ்சி தயாரித்த தேநீரை பிரதமர் மோடி அருந்தினார்.
அப்பகுதி குழந்தைகள் அவருடன் இணைந்து செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். ஒரு சிறுவன் பிரதமரிடம் ஆட்டோகிராப் பெற்றான். அந்த சிறுவன் அளித்த அட்டையில் 'வந்தே பாரத்' என்று பிரதமர் எழுதி கொடுத்தார். சுற்றுவட்டார பகுதி மக்கள், 'மோடி, மோடி' என்று உரக்க குரல் எழுப்பினர்.
இதுதொடர்பாக மீரா மாஞ்சி நிருபர்களிடம் கூறியதாவது: பிரதமர் நரேந்திர மோடி எங்களது வீட்டுக்கு வருவார் என்பது தெரியாது. ஒரு மணி நேரத்துக்கு முன்பாக காவல் அதிகாரி ஒருவர் வந்தார். உங்கள் வீட்டுக்கு முக்கிய அரசியல் தலைவர் வருகிறார் என்று கூறினார். அந்த தலைவர் பிரதமர் மோடி என்பது அவர் வந்த பிறகே எங்களுக்கு தெரியும். கடவுளே எங்கள் வீட்டுக்கு வந்தது போன்று உணர்ந்தேன். எனது மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.
நாங்கள் முதலில் குடிசை வீட்டில் வசித்தோம். மத்திய அரசின் திட்டத்தால் இப்போது கான்கிரீட் வீட்டில் வசிக்கிறோம். உஜ்வாலா திட்டத்தில் பெற்ற பலன்கள் குறித்து பிரதமர் கேட்டறிந்தார். நான் என்ன சமைத்தேன் என்று கேட்டார். சாதமும், பருப்பு, காய்கறிகளும் சமைத்திருப்பதாக கூறினேன்.
எங்கள் வீட்டில் தேநீர் அருந்தினார். தேநீரில் சர்க்கரை சற்று அதிகமாக இருப்பதாக பிரதமர் கூறினார். நான் தயாரிக்கும் தேநீரில் எப்போதுமே இனிப்பு அதிகமாகவே இருக்கும். இது எனது வழக்கம் என்று பிரதமரிடம் கூறினேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பிரதமர் நரேந்திர மோடி கூறும்போது, “கடந்த 2016-ம் ஆண்டு மே 1-ம் தேதி உத்தர பிரதேசத்தில் உஜ்வாலா என்ற பெயரில் இலவச சமையல் காஸ் இணைப்பு திட்டத்தை தொடங்கினோம்.
இந்த திட்டம் இப்போது புதிய உச்சத்தை தொட்டு உள்ளது. உஜ்வாலா திட்டத்தின் 10-வது கோடி பயனாளியின் வீட்டில் தேநீர் அருந்தியது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT