Last Updated : 30 Dec, 2023 05:45 PM

 

Published : 30 Dec 2023 05:45 PM
Last Updated : 30 Dec 2023 05:45 PM

எருதுவிடும் விழாவில் பங்கேற்கும் காளைகளுக்கு நீச்சல், ஓட்டம், நடை பயிற்சி

கிருஷ்ணகிரி: எருதுவிடும் விழாக்களில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு நீச்சல், நடை மற்றும் ஓட்டம் உள்ளிட்ட பயிற்சிகளை கால்நடைகளை வளர்ப்பவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்வமுடன் அளித்து வருகின்றனர். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு விழாவைப் போல், வடமாவட்டங்களில் எருதுவிடும் விழா, எருதாட்டம், மஞ்சுவிரட்டு போன்றவை புகழ் பெற்றவை. குறிப்பாக, கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர் மாவட்டங்களில் எருதுவிடும் விழாக்கள் கிராமங்கள் தோறும் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் எருதுவிடும் விழாக்கள் நடைபெற்றன. கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஊத்தங்கரை, பர்கூர் உள்ளிட்ட பகுதிகளில் காளைகளை குறிப்பிட்ட தூரம் ஓடவிட்டு, குறைந்த விநாடிகளில் எல்லையைக் கடக்கும் காளைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

தட்டியை பறித்தால் பரிசு: சூளகிரி, ஓசூர், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படும் எருதுவிடும் விழாக்களில் காளைகளின் கொம்பில் தட்டி கட்டப்பட்டு, அதனை பறிக்கும் இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. வரும் 2024-ம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையை யொட்டி நடக்கும் எருதுவிடும் விழாவிற்காக காளைகளை தயார்படுத்தும் பணிகளில் கால்நடைகள் வளர்ப்பவர்களும், இளைஞர்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டுமாடுகள் வளர்ப்பு: இதுகுறித்து வேப்பனப்பள்ளி அருகே உள்ள தளவாய்ப்பள்ளி சிரஞ்சீவி கூறும்போது, நாட்டு மாடுகள் வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில், எருதுவிடும் விழாக்களில் பங்கேற்க காளைகளை வளர்த்துப் பயிற்சி அளித்து வருகிறோம். குறிப்பாக, எருதுவிடும் விழாவில் 100 மீட்டர், 200 மீட்டர் தூரம் என எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு, காளைகள் ஓடவிடப்படுகின்றன.

மொத்த தூரத்தையும் குறைந்த விநாடிகளில் கடக்கும் காளைகளுக்கு ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. 100 மீட்டர் தூரத்தை 7 விநாடிகள் முதல் 10 விநாடிகளில் காளைகள் கடக்கும். இளைஞர்களுக்கு ஓட்டப்பந்தயம் நடத்துவது போல்தான், இவ்விழாவும்.பந்தயங்களில் பங்கேற்க உள்ள காளைகளுக்கு வாரத்தில் 4 நாட்கள் நீச்சல் பயிற்சி அளிக்கப்படுகிறது. தினமும் நடைப்பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம் கால்கள் வலுவாக மாறும்.

சிறுதானிய உணவுகள்: மேலும், சிறுதானியங்கள், பேரீச்சப்பழம், அரிசி உள்ளிட்டவை கெட்டியாக அரைக்கப்பட்டு சத்தான உணவே காளைகளுக்கு அளிக்கிறோம். இதே போல் சூளகிரி பகுதிகளிலும் நாட்டு மாடுகளின் கொம்புகளில் தட்டிகள் கட்டி வேகமாக ஓடுவதற்கான பயிற்சிகளை இளைஞர்கள் அளித்து வருகின்றனர், என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x