Published : 25 Dec 2023 04:00 AM
Last Updated : 25 Dec 2023 04:00 AM
கோவை: கோவை விழாவின் ஒரு பகுதியாக டபுள் டெக்கர் இலவச பேருந்து சேவை நேற்று தொடங்கப்பட்டது. ஜனவரி 8-ம் தேதி வரை முன்பதிவு செய்து இப்பேருந்தில் நகரை இலவசமாக சுற்றிப் பார்க்கலாமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவை வ.உ.சி பூங்கா அருகே நேற்று நடந்த பேருந்து சேவை அறிமுக விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகர காவல் ஆணையர் பால கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கோவை விழா 10-வது பதிப்பின் போது இந்த பேருந்து சேவை முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது. மக்களிடம் சிறப்பான வரவேற்பு பெற்றதால், ஆண்டுதோறும் கோவை விழாவின் ஒரு பகுதியான டபுள் டெக்கர் பேருந்து சேவை தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.
2024-ம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி வரை இந்த சேவை வழங்கப்பட உள்ளது. இதில் பயணிக்க bit.ly/doubletakkar என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மொத்தம் இரண்டு பேருந்துகள் இந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 6 வழித் தடங்களில் இயக்கப்படும். ஒவ்வொரு பேருந்திலும் 36 இருக்கைகள் உள்ளன.
தினமும் காலை 10 முதல் இரவு 8 மணி வரை திருச்சி சாலை, அவிநாசி சாலை, சத்தி சாலை, மேட்டுப் பாளையம் சாலை, கணபதி மேம்பாலம் ஆகிய வழித் தடங்கள் வழியாக பேருந்து சேவை வழங்கப்படும். ஒரு முறை பயணம் 30 முதல் 45 நிமிடங்கள் வரை போக்குவரத்து நெரிசலை பொறுத்து இருக்கும் என கோவை விழா குழுவினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT