Last Updated : 24 Dec, 2023 07:11 PM

 

Published : 24 Dec 2023 07:11 PM
Last Updated : 24 Dec 2023 07:11 PM

வைகுண்ட ஏகாதசி |  தஞ்சாவூர் அருகே 200 ஆண்டுகளாக இரவில் சரித்திர நாடகங்களை நடத்தி வரும் கிராம மக்கள்

தஞ்சாவூர் அருகே கொல்லாங்கரை கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு நடைபெற்ற ருக்மாங்கதன் சரித்திர நாடகத்தை கண்டுரசித்த கிராமத்தினர் | படங்கள்: ஆர் .வெங்கடேஷ்

தஞ்சாவூர்: வைகுண்ட ஏகாதசியின் போது, கிராம மக்கள் இரவில் கண்விழிக்க வேண்டும் என்பதற்காக 200 ஆண்டுகளாக தஞ்சாவூர் அருகே கிராம மக்கள் சரித்திர நாடகங்களை நடத்தி வருகின்றனர்.

தஞ்சாவூர் அருகே காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி விழாவினை விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். ஏகாதசி நாளன்று இரவு நேரத்தில் பொதுமக்கள் கண்விழித்து, அதிகாலை நேரத்தில் பெருமாள் கோயில்களுக்கு சென்று சொர்க்க வாசல் திறப்பில் கலந்து கொண்டு பெருமாள் சுவாமியை வழிபடுவது வழக்கம். இரவு நேரங்களில் பொதுமக்கள் கண்விழிக்க வேண்டும் என்பதால், அந்த இரவை பொழுதுபோக்குடன் கண்டுகளிக்க சரித்திர நாடகங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சாவூர் அருகே உள்ள காசவளநாடு கொல்லாங்கரை கிராமத்தில் ஏகாதசியின் போது மூன்று நாட்களுக்கு சரித்திர நாடகங்களான வள்ளி திருமணம், ருக்மாங்கதன், இராமாயணம், சத்தியவான் சாவித்ரி நாடகங்கள் நடத்தப்படுகின்றன.

இந்த நாடகங்களுக்கு தேவையான கதாப்பாத்திரங்களில் அந்த கிராம மக்களே நடித்து வருகின்றனர். குறிப்பாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இதில் நடித்தாலும், பெண்கள் நாடகத்தில் நடிப்பதில்லை. பெண் கதாபாத்திரங்களை ஆண்களே ஏற்று நடிக்கின்றனர். சினிமா,டிவியின் ஆதிக்கம் நிறைந்த இந்த காலத்திலும், சரித்திர நாடகங்களை இக் கிராம மக்கள் இன்றும் பாரம்பரியத்தோடு நடத்தி அதனை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்த்து வருகின்றனர்.இந்நிலையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த டிச.22 ம் தேதி முதல் இன்று இரவு (டிச.24) வரை மூன்று நாட்களும் வள்ளித் திருமணம், ருக்மாங்கதன், சம்பூர்ண ராமாயணம் உள்ளிட்ட சரித்திர நாடகம் நடத்தினர்.

இதுகுறித்து கொல்லாங்கரை கிராமத்தைச் சேர்ந்த தர்மராஜ் கூறியதாவது: "எங்களது கிராமத்தில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு மூன்று நாட்கள் சரித்திர நாடகங்களை சுமார் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகிறோம். இதற்காக புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமையில் நாடக பயிற்சியை தொடங்கி விடுவோம். இதில் எங்களது கிராமத்தில் பிறந்த ஆண்கள் எல்லோரும் ஏதாவது ஒரு வேடத்தில் நடிப்பதை கனவாக கொண்டு நடித்து வருகிறோம். முன்பெல்லாம் ஒரு நாடகத்துக்கு 50 கலைஞர்கள் இருந்தார்கள். தற்போது பத்து கலைஞர்கள் தான் நடித்து வருகின்றனர்.

தொலைக்காட்சியில் சீரியல்கள் இருந்தாலும் கிராம மக்கள் அன்றைய தினம் சரித்திர நாடகங்களை பார்த்து, ரசித்து வருகின்றனர். இதில் பொதுமக்களிடம் கொஞ்சம் ஆர்வம் குறைந்தாலும், நாடகம் நடத்துவதை பாரம்பரியமாக தொடர்ந்து நடத்தி வருகிறோம். நாடகம் நடத்த ஏழு தினங்களுக்கு முன் பந்தகால் முகூர்த்தம் செய்ததும், இதற்காக விரதம் தொடங்கிவிடும். நாடக கலைஞர்கள் எல்லோரும் விரதம் இருந்து நடித்து வருகிறோம்.

நாடகத்துக்கு தேவையான அலங்கார உடைகள், ஆபரணங்கள் போன்ற அனைத்து பொருட்களையும் நாங்கள் சொந்தமாக வைத்திருக்கிறோம். இரவு பத்து மணிக்கு தொடங்கும் நாடகம் அதிகாலை 5 மணிக்கு முடியும். நாங்கள் எல்லோரும் ஏகாதசியன்று ஸ்ரீரங்கம் ரெங்கநாதரை நினைத்து தான், அவரது படத்தினை வைத்து வழிபட்டு வருகிறோம். பின்னர் சித்திரை மாதம் திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு சென்று சித்திரை தேரோட்டத்தில் எங்களது கிராம மக்கள் சுமார் 100 பேராவது சென்று பாட்டுப்பாடி, தேர் வடம் பிடித்து, பெருமாளை வழிபட்டு ஒரு நாள் முழுவதும் அங்கிருந்து தரிசனம் செய்து வருவதை இன்றளவும் கடைபிடித்து வருகிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x