Published : 12 Dec 2023 03:17 PM
Last Updated : 12 Dec 2023 03:17 PM
விருத்தாசலம்: போதிய பராமரிப்பு இல்லாததால் கட்டிடத்தில் வளர்ந்து வரும் செடிகள். கடலூர் பழைய ஆட்சியர் அலுவலகத்தின் உட்புற பகுதி. கிழக்கிந்திய கம்பெனி வணிகத்துக்காக இந்தியாவுக்குள் நுழைந்தது. அதுவே, பின்னாளில் நமது தேசம் பிரிட்டிஷ் அரசுக்கு அடிமையாகக் காரணமாகவும் அமைந்தது. அவ்வாறு வந்தவர்கள் தங்களுக்கான அலுவலகக் கட்டிடங்களை, கடற்கரை நகரங்களில் நேர்த்தியான வடிவங்களில் கலை ரசனையுடன் கட்டத் தொடங்கினர். அதில், முக்கியத்துவம் வாய்ந்தது கடலூர் பழைய ஆட்சியர் அலுவலக கட்டிடம்.
மஞ்சக்குப்பம் மைதானத்தில் 36 ஆயிரம் சதுர அடி பரப்பில் 30 அறைகள் கொண்ட இரு தளங்களுடன் கூடிய இந்த கட்டிடத்துக்கான பூமி பூஜையை கடந்த 1895-ம் ஆண்டு தொடங்கி, 1897-ம் ஆண்டு பணிகளை நிறைவு செய்து, கட்டிடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர். இந்த அலுவலகத்தின் முன்புறம் உருவாக்கப்பட்ட பச்சை பசுமையான புல்வெளியை கோல்ஃப் மைதானமாக பயன்படுத்தி வந்தனர். இக்கட்டிடத்தில் ஆட்சியர் அலுவலகம் செயல்பட்டபோது, எல்.எம்.வின்ச் என்பவர் முதல் ஆட்சியராக பணி செய்தார்.
எல்.எம்.வின்ச் தொடங்கி 2015-ம் ஆண்டு சுரேஷ்குமார் வரை 118 ஆண்டுகளில் 92 ஆட்சியர்கள் இந்தக் கட்டிடத்தில் பணிபுரிந்துள்ளனர். தொன்மை வாய்ந்த கடலூர் பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எத்தனையோ அரசியல் முடிவுகளுக்கு களமாய் இருந்து வந்திருக்கிறது. பல வரலாற்று நாயகர்கள் ஆட்சியர்களாக இக்கட்டிடத்தை அலங்கரித்தும் இருக்கிறார்கள். இதில்சந்திரலேகா, சி.கே.கரியாலி, தங்கவேலு, தங்கசாமி, ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டவர்களை குறிப்பிடத்தக்கவர்களாக குறிப்பிடலாம். இக்கட்டிடம் கம்பீரத்தில் மட்டுமன்றி, காற்றோட்டத்துக்கும் பஞ்சம் இல்லாதது. சுட்டெரிக்கும் கோடை வெயிலிலும் மின்விசிறி இன்றியே குளுமையான சூழலில் இங்கு பணியாற்ற முடியும்.
நேர்த்தியாக சுடப்பட்ட செங்கலும் சுண்ணாம்பும் கொண்டு கட்டடப்பட்ட இக்கட்டிடத்தின் உறுதித் தன்மைக்கு வேறெந்த கட்டிடமும் இணையாக இருக்க முடியாது. இதன் கட்டிட நேர்த்தியை இங்கு வந்து சென்ற பலர் பாராட்டிச் சென்றதுண்டு. மழைக்காலத்தில் கட்டிடத்தின் மீது விழும் மழை நீரை உள்வாங்கி, அருகில் உள்ள குளத்துக்கு கொண்டு செல்லும் நீர்மேலாண்மையுடன் அப்போதே அமைத்துள்ளது இக்கட்டிடத்துக்கான கூடுதல் சிறப்பு. கட்டி முடிந்து சில மாதங்களிலேயே வெள்ளத்தில் அடித்துச் செல்லும் தளவானூர் தடுப்பணை போன்ற கட்டிடப் பணிகள் தற்போது நடைபெறும் சூழலில், இதுபோன்ற பழமையின் கம்பீரத்தை வியந்து போற்றாமல் இருக்க முடியவில்லை.
முறையான பராமரிப்பு இல்லாததால் மழை நீர் கசிந்து, சில இடங்களில் செங்கற்கள் வீணானதைத் தவிர, இத்தனை ஆண்டுகளில் எந்த பாதிப்பும் இல்லாமல் இந்தக் கட்டிடம் அப்படியே இருந்து வந்தது. இக்கட்டிடத்தை ஒட்டி, 200 ஆண்டுகளுக்கு முன்னரே கட்டப்பட்ட ஆங்கிலேய மேஜர் ஜெனரல் ராபர்ட் கிளைவ் வாழ்ந்த பங்களா ஒன்று, ஆட்சியரின் முகாம் அலுவலகமாக இன்றும் செயல்பட்டு வருகிறது. காலத்தின் கட்டாயத்தால், கடலூர் ஆட்சியர் அலுவலகத்துக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டது. தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகம் 2015 ஜூன் முதல் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கியது.
தொன்மை வாய்ந்த பழைய ஆட்சியர் அலுவலகம், மாவட்டக் கருவூல அலுவலகமாகவும், அரசு அருங்காட்சியக அலுவலகமாகவும், தேர்தல் காலங்களில் மட்டுமே ஆட்சியர்கள் அமர்ந்து பணியாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது.
இதன்பிறகு இக்கட்டிடம் போதிய பராமரிப்பின்றி இருந்து வருகிறது. தொன்மை வாய்ந்த இக்கட்டிடத்தின் மீது தற்போது செடிகள் முளைத்து, அதன் பொலிவையும் கம்பீரத்தையும் கேள்விக்குறியாக்கி வருகிறது. இதுதொடர்பாக கடலூர் பொதுப்பணித்துறை செயற் பொறியாளர் பிரமிளாவிடம் பேசியபோது, “பழைய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சில அரசு அலுவலகங்கள் இயங்கி வந்தாலும், தற்போது அக்கட்டிடம் தமிழகஅரசின் பொதுப்பணித் துறையின் ஒரு அங்கமான பராம்பரிய கட்டிடப் பராமரிப்பு பிரிவில் ஒப்படைக் கப்பட்டுள்ளது.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட நிலையில், நாங்கள் அதில் எந்தப் பணியும் மேற்கொள்ள முடியாது. அந்தக் கட்டிடத்தை புனரமைக்க வேண்டி, அதற்கான மதிப்பீட்டுத் தொகையுடன், அத்துறையிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளாோம். அவர்கள் ஆய்வு செய்து, அதற்கான பணிகளை அவர்கள் தான் மேற்கொள்ள முடியும்” என்றார்.புராதனச் சின்னமாக பாதுகாக்கப்பட வேண்டிய ஒரு கட்டிடம் மெல்ல மெல்ல அதன் பொலிவை இழந்து வருவதை
பார்த்தபடியே கடலூர்வாசிகள் வருத்தத்துடன் நகர்ந்து
வருகின்றனர்.
எத்தனை கோடி செலவிட்டு நவீன காலத் திற்கேற்ப பல வடிவங்களில் புதிய கட்டடிங்களைக் கட்டினாலும் 126 ஆண்டுகளுக்கு முன் உருவான இக்கட்டிடத்துக்கு இணையாகப் போவதில்லை. “இங்குள்ள தர்பார் போன்ற கட்டுமானத்தில், அரசவை கம்பீரம் இணைந்து இருப்பதை, வேறெந்த ஒரு கட்டிடத்திலும் ஆட்சியர்கள் அனுபவிக்க வாய்ப்பில்லை” என்று இங்கு பணியாற்றிய பல முன்னாள் ஆட்சியர்கள், இக்கட்டிடத்தின் சிறப்பைப் பற்றி பெருமையாக பேசியதுண்டு. மாவட்ட ஆட்சியர் அலுவலகமாக இருக்கும் போது கட்டிடப் பராமரிப்புக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு இருக்கும். இக்கட்டிடம் வேறு அலுவலகங்களாக மாறும்போது அதே கவனிப்பும் அதே பராமரிப்புப் பணிகளும் தொடருவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும், ஆட்சியாளர்கள் மனது வைத்து, இதைப் பேண முற்பட்டால், தொன்று தொட்டு நின்று, கடலூரின் கம்பீரமாக இக்கட்டிடம் விளங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT