Published : 11 Dec 2023 04:33 PM
Last Updated : 11 Dec 2023 04:33 PM
மதுரை: அமெரிக்கா போன்ற நாடுகளில், தமிழர்களின் பாரம்பரிய பறை இசை நிகழ்ச்சிகளை நடத்த அதற்கான கலைஞர்களை தமிழகத்தில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டி இருந்தது. தற்போது, அந்தந்த நாடுகளில் வசிக்கும் தமிழர்களும், அவர்களின் குழந்தைகளும், இக்கலையைப் பேரார்வமாக கற்றுக்கொள்ளத் தொடங்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் பறை இசையைப் பரப்பி வருகிறார் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் வசிக்கும் மென்பொருள் பொறியாளரான தங்கராஜ் பேச்சியப்பன்.
15 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசிக்கும் இவர், மூத்த தகவல் தொழில்நுட்ப அதிகாரியாகப் பணிபுகிறார். சென்னையில் பொறியியல் கல்லூரி கலை விழாவுக்காக பறை இசை கலைஞர்களிடம் இக்கலையைக் கற்றுள்ளார். கல்லூரி முடிந்ததும் பறையை இசைக்கும் வாய்ப்பில்லாமல் போய் விட்டது. அமெரிக்காவில் வேலை, திருமணம், குடும்பம் என அடுத்தடுத்த நெருக்கடியால் அவரால் பறை இசையைத் தொடர முடியவில்லை. ஒரு கட்டத்தில் விடுமுறை நாட்களில் மொபைல் போனில் யூடியூப்- வீடியோவில் பறை இசை நிகழ்ச்சியை பார்த்துள்ளார். இதனால் அவருக்கு பறையை இசைக்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது.
தொடர்ந்து அது தொடர்பான வீடியோக்களை பார்த்து சுயமாக பறை இசையை, தானே கற்றுக் கொண்டார். அதன்பின் அமெரிக்காவில் நண்பர்கள் வீட்டு விழாக்களில், திருமண நிகழ்ச்சிகளில் தனது நண்பர்கள் சிலருடன் சேர்ந்து பொழுதுபோக்காக பறை இசையை இசைக்கத் தொடங்கினார். அந்த நிகழ்ச்சியில் அமெரிக்கர்கள் கலந்துகொண்டு பறை இசையைப் பாராட்டினர். மேலும் அவர்களும் இணைந்து ஆரவாரமாக ஆடினர். அவர்கள் கொடுத்த ஊக்கமும், பாராட்டும் இன்று அமெரிக்காவில் தங்கராஜ் பேச்சியப்பனை 60 பேர் கொண்ட பறை இசைக்குழுவை உருவாக்க வைத்துள்ளது.
தற்போது வார விடுமுறை நாட்களில் 3 மணி நேரம் பறை இசையை கற்றுக் கொள்ள இவரிடம் 30 பேர் வருகிறார்கள். அவர்களுக்கும் பறை இசையைக் கற்றுக்கொடுத்து தன்னுடைய குழுவில் இணைத்துக் கொண்டு அமெரிக்காவின் சுதந்திர நிகழ்ச்சி, இந்திய சுதந்திர தினவிழா, அமெரிக்கர்கள், தமிழர்களின் குடும்ப நிகழ்ச்சிகளில் தங்கராஜ் பேச்சியப்பன் பறை இசைக் குழுவினர் கச்சேரியை நடத்தி வருகின்றனர். இதுவரை 60-க்கும் மேற்பட்ட மேடைகளில் தனது பறை இசை கச்சேரியை நடத்தி உள்ளார்.
இது பற்றி தங்கராஜ் பேச்சியப்பன் கூறியதாவது: அப்பா, அம்மா சிவகாசி, கோவில்பட்டியில் வசித்தனர். நான் சென்னையில் பொறியியல் படித்துவிட்டு பெரம்பூரில் வசித்தேன். அமெரிக்காவில் வேலை கிடைத்து 15 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறேன். ஆண்டுக்கு ஒருமுறை விடுமுறையில் சென்னை வந்து செல்கிறேன். அமெரிக்காவில் 50 ஆண்டு பாரம்பரியமான பாரதி கலைமன்றத்தில் தகவல் தொடர்பு (கம்யூனிகேஷன்) இயக்குநராக இருந்து பறை இசை நிகழ்ச்சியை நடத்தினேன். தற்போது நான் தனியாக 60 பேர் கொண்ட ‘யூஸ்டன்’ என்ற பறை இசைக் குழுவை உருவாக்கி, கடந்த இரண்டரை ஆண்டுகளாக தீபாவளி, பொங்கல், அந்தந்த ஊர் முக்கிய நிகழ்ச்சிகள், திருமணங்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறேன். பறை இசை நடத்த ஒரு குழுவுக்கு குறைந்த பட்சம் 5 பேர் முதல் அதிகபட்சம் 20 பேர் வரை இருக்கலாம்.
அந்த அடிப்படையில், என்னிடம் 3 குழுவினர் உள்ளனர். எனது நிகழ்ச்சியைப் பார்ப்பவர்கள் பாராட்டும் போது அடுத்தகட்டத்துக்கும், அடுத்த தலைமுறையின ருக்கும் இந்தக் கலையை கொண்டுசெல்ல வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டுள்ளது. தற்போது நான் வசிக்கும் நகரத்தைத் தாண்டி நிகழ்ச்சிகளை நடத்த அழைப்புகள் வருகின்றன. எதிர்காலத்தில் இந்த இசைக்கச்சேரி மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு மருத்துவம், கல்வி போன்ற பொதுச் சேவைகளுக்கு உதவ வேண்டும் என்பதே எனது இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT