Published : 10 Dec 2023 04:08 AM
Last Updated : 10 Dec 2023 04:08 AM
உதகை: தமிழ்நாட்டில் வெறிநாய் கடி சம்பவங்கள் பேசு பொருளாக மாறியுள்ளன. நாய்களுக்கான தடுப்பூசி விலை 20 மடங்கு குறைவு என்பதால், மக்கள் தங்களது வளர்ப்பு நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தி நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்கிறார், டாக்டர் கே.ஆனந்த குமார்.
வெறி நாய்களிடமிருந்து மரணத்தை சம்பவிக்கும் ரேபீஸ் நோய் பரவுகிறது. உலகளவில் ஆசியாவில் வெறிநாய் கடிப்பட்டு அதிகளவில் மனிதர்கள் இறந்து வருகின்றனர். இந்தியாவில் மரணங்கள் அதிகம். 15 வயதுக்கு உட்பட்டவர்களே இந்த நோய் பாதிப்புக்கு ஆளாகி உயிரிழக்கின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் கடந்த மாதம் சென்னை திருவொற்றியூரில் பரபரப்பான சாலையில், ஒரு மணி நேரத்துக்குள் 10 பள்ளி மாணவர்கள் உட்பட 29 பேரை தெருநாய் துரத்தி கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் வெறிபிடித்த தெருநாயை அடித்தே கொலை செய்தனர். தமிழ்நாடு முழுவதும் தெருநாய்கள் நடமாட்டத்தால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பாஸ்டியர் ஆய்வகத்தில் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது அந்த நிறுவனம் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தியை நிறுத்திவிட்டது.
இதுதொடர்பாக பாஸ்டியர் ஆய்வக இயக்குநர் எஸ்.சிவகுமாரிடம் கேட்டபோது, ‘‘பாஸ்டியர் ஆய்வகத்தில் திசு வளர்ப்பு முறை மூலமாக ரேபீஸ் தடுப்பு மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 2015-ம் ஆண்டு வரை மருந்து உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. அதன் பின்னர் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
புதிய புராஜெக்ட் மூலமாக, சோதனை முறையில் தடுப்பூசிகள்தயாரிக்க முடிவு செய்யப்பட்டு,அதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சோதனைக்கு பின், மத்திய அரசின் குழு ஆய்வு மேற்கொண்டு, மருந்துகளின் தரக் கட்டுப்பாட்டு சான்றிதழ் மற்றும் வணிகரீதியாக உற்பத்தி செய்ய உரிமம் வழங்கிய பின்னரே, உற்பத்தி மீண்டும் தொடங்கும்.
இந்நிலையில், ரேபீஸ் நோய்தடுப்பு மருந்து உற்பத்தி கோவைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக ஆய்வகம் அமைக்க கோவையில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு, ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்து, விநியோகம் செய்ய 2025-ம் ஆண்டு ஆகிவிடும்’’ என்றார்.
தற்போது ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து உற்பத்தி செய்து கைகொடுக்கிறது இந்தியன் இம்முனோலாஜிக்கல்ஸ் லிமிடெட் நிறுவனம். மத்திய பால்வள மேம்பாட்டு வாரியத்தின் ஓர் அங்கமான இந்த நிறுவனம், உதகையில் 1999-ம் ஆண்டு முதல் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்தை உற்பத்தி செய்து வருகிறது. மனிதர்களுக்கான ரேபீஸ் நோய் தடுப்பு மருந்தைவிட நாய்களுக்கான நோய் தடுப்பு மருந்து 20 மடங்கு விலை குறைவு என்கிறார், அந்நிறுவன நிர்வாக இயக்குநர் டாக்டர் கே.ஆனந்த்குமார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, ‘‘உதகை நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் ரேபீஸ் நோய் தடுப்பு மருந்து, சர்வதேச அளவிலான தரம் வாய்ந்தது. ஆண்டுக்கு 2 கோடி டோஸ்கள் தயாரிக்கப்படுகின்றன. ரேபீஸ் நோய் தடுப்பு மருந்துக்கு தேவை அதிகம் உள்ளது. இந்த நிறுவனத்திலிருந்து 50 வெளிநாடுகளுக்கு இம்மருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. எங்கள் நிறுவனம் மூலமாக மலிவாக விற்கப்படுகின்றன. இந்தியாவில் ரேபீஸ் நோயால் 20 ஆயிரம் உயிரிழப்புகள் நிகழ்கின்றன. உத்தரபிரதேசம் மற்றும் வட கிழக்கு மாநிலங்களில்தான் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
மனிதர்களுக்கான ரேபீஸ் நோய் தடுப்பு மருந்தைவிடநாய்களுக்கான நோய் தடுப்பு மருந்து 20 மடங்கு விலை குறைவு. ஆனால், இதுகுறித்து விழிப்புணர்வு மக்களிடம்இல்லை. மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளுக்கு இந்த தடுப்பூசியை செலுத்த வேண்டும். எங்கள் நிறுவனம், முன்மாதிரி திட்டமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம்மாவட்டத்தை தத்தெடுத்துள்ளது. இந்த மாவட்டத்தை ரேபீஸ் இல்லா மாவட்டமாக மாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இந்த முயற்சி வெற்றி பெறும்பட்சத்தில், ரேபீஸ் இல்லா நாடாக இந்தியா மாற நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT