Published : 09 Dec 2023 05:01 PM
Last Updated : 09 Dec 2023 05:01 PM
மதுரை: மொபைல் போனில் மூழ்கிக் கிடக்கும் குழந்தைகள், பள்ளி மாணவர்களை மீட்டெடுக்க, பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் மதுரை பெண்மணி. சென்னையைச் சேர்ந்தவர் ஹம்சி சுகன்யா (41). தற்போது மதுரை கோ.புதூரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். டிப்ளமோ லெதர் டெக்னீஷியன் படித்த இவர், கணவருடன் சேர்ந்து தொண்டு நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்தார். கரோனா காலகட்டத்தில் மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியாமல் வீட்டில் முடங்கினர். அப்போது, மொபைல் போன் விளையாட்டுகளில் மூழ்கி மனநலம், உடல் நலம் பாதிக்கப்பட்டனர். இதனால் மொபைலில் மூழ்கிக் கிடக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களை மீட்டெடுக்கவும், இளைஞர்கள், பெண் களிடையே நல்ல எண்ணங்கள், ஆரோக்கியத்தை வளர்க்கவும், பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தருகி றார். இதற்காக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இதுகுறித்து பயிற்சியாளர் ஹம்சி சுகன்யா கூறியதாவது: கரோனா காலத்தில் பள்ளிக்குச் செல்ல வழியின்றி மொபைல் போன் விளையாட்டுகளுக்கு அடிமையான மாணவர்கள், குழந்தைகள் பொறுமையை இழந்தனர். இதனால் ஆசிரியர்கள், வயதில் மூத்தவர்கள், பெரியவர்களை மதிக்கும் எண்ணம் மாணவர்களிடம் குறைந்தது. ஆசிரியர்களை மாணவர்கள் தாக்கும் செயலும் அதிகரித்துள்ளது. ஒரே வீட்டிலிருப்பவர்கள் பேசிக்கொள்ளாமல் சமூக வலைத் தளங்களில் மூழ்கினர். இதனால் குடும்பங்களிலும் பிரச்சினை ஏற்பட்டது.
அந்தப் பழக்கத்திலிருந்து குழந்தைகள், பள்ளி மாணவர்களை மீட்பதற்கு, பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தந்தால் நல்ல எண்ணங்கள் ஏற்படும். மேலும், அவர்களது ஆரோக்கியமும் மேம்படும். எனவே, நமது பாரம்பரிய விளையாட்டுகளான பல்லாங்குழி, பாண்டியாட்டம், கிச்சு கிச்சு தாம்பாலம், பம்பரம் சுற்றுதல், பச்சைக்குதிரை, நுங்குவண்டி, பூப்பறிக்க வருகிறோம், மல்லர் கம்பம், குலை குலையா முந்திரிக்காய், காலாட்டுமணி கையாட்டு மணி, கோலிக்குண்டு, சிலம்பம், கபடி, கோ கோ, ஜோடிப்புறா ஆகியவற்றை கற்றுத் தந்தோம். இதன்மூலம் பள்ளி மாணவர்களிடம் நிறைய மாற்றங்கள் காணப்பட்டன.
மொபைல் போன்கள் பயன்படுத்துவதும் குறைந்தது. இதேபோல், மன அழுத்தத்தில் உள்ளோரும் இந்த விளையாட்டுகளை விளையாடினால் மனது லேசாகிவிடும். இதனை வலியுறுத்தி பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்று பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத்தந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். ஆட்டிசம் பாதித்த குழந்தைகள் இத்தகைய விளையாட்டுகளில் ஈடுபடும்போது அதிலிருந்து அவர்கள் வெளிவரவும் உதவுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, குழந்தைகள் என மூன்று தலைமுறையினரை ஒரே இடத்தில் சங்கமிக்கச் செய்து பாரம்பரிய விளையாட்டுகளை கற்றுத் தருகிறோம். எனது குடும்பத்தினர் எனக்கு உறுதுணையாக உள்ளனர். இதன்மூலம் குடும்பமாக இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். எங்களது சேவைகளை பாராட்டி சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தினர் சான்றிதழ் வழங்கினர் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT