Published : 03 Dec 2023 09:55 PM
Last Updated : 03 Dec 2023 09:55 PM

மதுரை வீதிகளில் ஒலிக்கும் விழிப்புணர்வு கருத்துகள்: தினம் ஒரு தகவல் வழங்கும் இல.அமுதன்!

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

மதுரை: மதுரை வீதிகளில் சமூக ஆர்வலர் ஒருவர், ஒவ்வொரு நாளும் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்குப் பயனுள்ள தகவல்களை அறிவிப்புச் செய்து வருகிறார்.

கரோனா தொற்று காலத்தில் தொடங்கிய இந்த சேவை இன்றளவும் தொடர்கிறது. இது மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. அன்றாட விலைவாசி உயர்வால் பொருளாதாரச் சுமை, உடல்நலக் குறைபாடுகளால் நிச்சயமற்ற இயந்திர வாழ்க்கைக்கு இடையே மற்றவர்களை பற்றி சிந்திக்க கூட நேரமின்றி மக்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில், எந்தவித ஆதாய நோக்கமும் இன்றி, குடும்ப நலனைத் தாண்டி சமூக நலனுக்காக களத்தில் இறங்கிப் பணி செய்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம். அத்தகையவர்களில் ஒருவர் மதுரை பேச்சியம்மன் படித்துறை கீழ அண்ணா தோப்பு தெருவைச் சேர்ந்த இல.அமுதன் (65).

இவர் தொற்று நோய், மழை, புயல், வெயில் என எது வந்தாலும் ஒவ்வொரு நாளும் மதுரை நகர வீதிகளில் ஒலிபெருக்கியுடன் நடந்து சென்று மக்களுக்கு விழிப்புணர்வு தகவல்களை அறிவித்து வருகிறார்.

தொடக்கத்தில் ரத்த தானம் செய்வோரை ஒருங்கிணைத்து அரசு, தனியார் மருத்துவமனைகளில் ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு ரத்தம் பெற்றுத் தருவது, ஏழைக் குழந்தைகளுக்கு உதவுவது, ஆதரவற்றோர் இறந்தால் இறுதிச் சடங்கு செய்வது போன்ற சமூக சேவைகளை முன்னெடுத்துச் செய்து வந்தார்.

‘கரோனா’வுக்குப் பிறகு, முழு நேரமாக ஒலிபெருக்கியுடன் மதுரை நகர் வீதிகளில் நடந்து சென்று, அந்தந்த வாரங்களில் நடக்கும் முக்கிய மக்கள் நல முகாம்கள், சுகாதார விழிப்புணர்வுத் தகவல்களைச் சொல்லி வருகிறார்.

‘கரோனா’ காலத்தில் தடுப்பூசி ஒன்றே பாதுகாப்பு என்று சுகாதாரத் துறை அறிவுறுத்தியது. ஆனால், மக்கள் தடுப்பூசி போடத் தயங்கினர். அந்த வேளையில், அமுதன், பஜாரில் ஒலிப்பெருக்கி வாங்கி கரோனா தடுப்பூசியின் முக்கியத்துவம் குறித்து வீதி வீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அதன்பிறகு வாக்காளர் அட்டை முகாம், ரத்த தான முகாம் நடக்கும் இடங்கள், மின்தடை நடக்கும் இடங்களை முந்தைய நாளே அறிவித்து வருகிறார். தற்போது டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வுத் தகவல்களை ஒலிபெருக்கி மூலம் பரப்பி வருகிறார்.

இது குறித்து இல.அமுதன் கூறியதாவது: கல்லூரி முடித்த காலத்தில் இருந்தே சமூகப் பணியில் ஈடுபட்டு வருகிறேன். திருமணம் செய்தால் சமூக சேவை செய்ய முடியாது என்பதால் திருமணம் செய்து கொள்ளவில்லை. சொந்தமாக வீடு உள்ளது. எனது தேவைகளும் குறைவு. தொடக்கத்தில் எல்ஐசி முகவராக இருந்தேன். தற்போது முழு நேரமாக சமூக சேவையில் இறங்கி விட்டேன்.

சிம்மக்கல், மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகள், மக்கள் அதிகம் வசிக்கும் குடியிருப்புகளில் காலை, மாலை நேரங்களில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு செய்கிறேன்.

கடந்த வாரம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம்கள், மதுரையில் நடந்தது. அந்த முகாம்கள் நடக்கும் இடங்களையும், அதன் முக்கியத்துவம் பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தினேன். கரோனா காலத்தில் தொடங்கிய இந்த ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை இன்றளவும் தொடர்கிறேன். இவ்வாறு கூறினார்.

அடுத்தவர் வீட்டில் எது நடந்தாலும் நமக்கென்ன என சுயநலமாக வாழ்வோர் மத்தியில் அமுதன் போன்று பிரதிபலன் எதிர்பாராமல் சேவையாற்றும் தன்னார்வலர்களின் மக்கள் பணி பாராட்டுக்குரியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x