Published : 01 Dec 2023 04:18 AM
Last Updated : 01 Dec 2023 04:18 AM
ஈரோடு: மது, சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு, துரித உணவு போன்றவற்றால், இளம் வயதிலேயே வாத நோய் ஏற்படுவதாக, தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி நரம்பியல் நிபுணர்கள் சங்க மாநில மாநாட்டுத் தலைவர் சி.எஸ்.செந்தில்வேலு, செயலாளர் ஆர்.ஏ.கணேஸ்வரன் ஆகியோர் தெரிவித்தனர்.
இது குறித்து ஈரோட்டில் அவர்கள் கூறியதாவது: "நரம்பியல் நிபுணர்கள் சங்கம் சார்பில், ஈரோட்டில், மாநில நரம்பியல் நிபுணர்கள் மாநாடு, இன்று (1-ம் தேதி) தொடங்கி 3-ம் தேதி வரை நடக்கிறது. இதில், 300 மருத்துவர்கள் பங்கேற்கின்றனர். கடந்த காலங்களில் நரம்பியல் நோய் தொடர்பான சிகிச்சை முறை, புதிய நுட்பங்கள்,வாத, வலிப்பு நோய், தலைவலி, தலைக்காயம் மற்றும் இதர மூளை நரம்பியல் நோய்கள் குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படும்.
வாதம், வலிப்பு போன்ற நோய்கள் முன்பு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் ஏற்பட்டு வந்தது. தற்போது 35 வயது முதல் வாத நோய் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மது, சிகரெட் மற்றும் போதைப்பொருட்கள் பயன்பாடு, துரித உணவு போன்றவையே இதற்கு காரணமாகும். ஐ.டி. போன்ற பல துறைகளில் உடல் உழைப்பு இன்றி அமர்ந்த நிலையிலான பணி, இரவு நேர பணி, ரத்த அழுத்தத்தை முறையாக கண்காணிக்காததும் வாத நோய் ஏற்பட காரணமாகிறது.
இந்நோய் ஏற்படும் முன்பே பேச்சு தொய்வு, லேசான மயக்கம், நினைவாற்றல் மாற்றம் போன்ற அறிகுறி தென்படும். பாதிப்பு ஏற்பட்ட நான்கரை மணி நேரத்துக்குள் சிகிச்சை பெற்றால், வாத நோயில் இருந்து காக்கலாம். வாதம், வலிப்பு நோய் ஏற்படும், 100 பேரில், 45 முதல், 50 பேர் இளம் வயதினராக உள்ளனர். இந்நோய்க்கு காற்று மாசுபாடும், பரம்பரை ஜீன்களும் கூட காரணமாவது கண்டறியப்பட்டுள்ளது. இது பற்றிய கலந்துரையாடல் இம்மாநாட்டில் நடக்க உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT