Published : 29 Nov 2023 09:01 AM
Last Updated : 29 Nov 2023 09:01 AM
கோவை: கோவை அரசு மருத்துவமனைக்கு கோவை மட்டுமல்லாது நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் இருந்தும் இருதய நோயாளிகள் வந்து சிகிச்சை பெறுகின்றனர்.
இங்குள்ள இருதயவியல் துறையில், தினசரி சராசரியாக, குறைந்த பட்சம் 250 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். உள் நோயாளியாக குறைந்த பட்சம் 10 பேரும், தீவிர சிகிச்சை பிரிவில் 8 பேரும் அனுமதிக்கப் படுகின்றனர். ஒரு நாளைக்கு சராசரியாக குறைந்த பட்சம் 150 இசிஜி, 100 எக்கோ, 5 ஆஞ்சியோகிராம், 2 ஆஞ்சியோ பிளாஸ்டி மேற்கொள்ளப்படுகிறது.
மருத்துவமனையின் இருதயவியல் துறையில் கடந்த 2018 -ம் ஆண்டு மார்ச் மாதம் ரூ.4.50 கோடி மதிப்பில் ‘கேத் லேப்’ தொடங்கப்பட்டு, 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இங்கு, கடந்த 18-ம் தேதி 10 ஆயிரமாவது ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டது.
இருதயவில் துறையின் செயல்பாடுகள் குறித்து மருத்துவமனையின் டீன் நிர்மலா கூறியதாவது: இங்குள்ள இருதயவியல் துறையில் மாரடைப்பு சம்மந்தப்பட்ட பிரச்சினைகள், இருதய செயலிழப்பு மற்றும் பிறவி இதய குறைபாடுகளுக்கு சிறப்பாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும், கர்ப்பிணிகள் அனைவருக்கும் ‘எக்கோ’ பரிசோதனை செய்யப்படுகிறது. இருதய வால்வு நோய்கள் ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டு, தக்க சிகிச்சை அளிப்பதால், தாய் மற்றும் சேய் நலம் காக்கப்படுகிறது.
மேலும், பிரசவத்தின்போது ஏற்படும் இருதய செயலிழப்புக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இங்கு குறுகிய காலத்தில் 10,000 ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 6,995 கரோனரி ஆஞ்சியோகிராம், 2,925 ஸ்டென்டிங், 63 ஓர் அறை பேஸ்மேக்கர் கருவி பொருத்தம், 2 ஈரறை பேஸ்மேக்கர் கருவி பொருத்தம் உள்ளிட்டவை அடங்கும். இந்த சாதனையானது இருதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பி ராஜன், டாக்டர்கள் சக்கரவர்த்தி, ஜெகதீஸ், செந்தில், மணிகண்டன், சதீஸ்குமார், செவிலியர்கள், டெக்னீசியன்கள் உள்ளிட்டோரால் தான் சாத்தியமானது.
இங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் அனைத்தும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யபட்டுள்ளது. கரோனா உச்சத்தில் இருந்தபோதும் ஆஞ்சியோ சிகிச்சை தொடர்ந்து செய்யப்பட்டது. கோவையில் பல தனியார் மருத்துவமனைகள் இருந்தும், அரசு மருத்துவமனையில் அதிக நோயாளிகள் சிகிச்சை மேற்கொள்வது, மருத்துவமனை மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கைக்கு சான்றாக திகழ்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கோவை அரசு மருத்துவமனை இருதயவியல் துறையில் இருதய ரத்தக் குழாய் அடைப்புகளை கண்டறியவும், ‘ஸ்டென்ட்’ வைத்ததை சரி பார்க்கவும் பயன்படும், ஓசிடி எனப்படும் ரூ.1.50 கோடி மதிப்பிலான கருவி கேத் லேபில் பொருத்தப்பட்டுள்ளது. இதனை, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடந்த 22-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
இந்த கருவியின் சிறப்பம்சங்கள் குறித்து இருதயவியல் துறை தலைவர் ஜெ.நம்பி ராஜன் கூறும்போது, “ஓசிடி என்பது அல்ட்ராசவுண்ட் பொருத்தப்பட்ட ரத்த உள்நோக்கு கருவி ஆகும். இது, ஒளிக்கற்றை உதவியுடன் ரத்த குழாய்களை படம் எடுக்கிறது.மேலும், ரத்த குழாயின் முப்பரிமாண ( 3டி ) தோற்றத்தை காண உதவுகிறது. இருதய ரத்த குழாய்களில் உள்ள அடைப்புகளை மிக துல்லியமாக அளவிட்டு சரியான அளவுள்ள ‘ஸ்டென்ட்’ வைக்க இந்த கருவி உதவுகிறது.
ஸ்டென்ட் வைத்த பின்பு, சரியாக பொருந்தியுள்ளதா என்பதை கண்டறியவும், ஸ்டென்ட் அடைப்பால் வரும் மாரடைப்பை சரி செய்யவும் உதவுகிறது. இந்த கருவியால், இருதய ரத்த குழாய்களில் உள்ள கொழுப்பு படிமங்கள் மற்றும் கால்சியம் படிமங்களை துல்லியமாக கண்டறிய முடியும். இதன் உதவியுடன் மிக கடினமான இருதய ரத்த குழாய் அடைப்புகளையும் இங்கேயே சரி செய்ய முடியும்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT