Published : 28 Nov 2023 04:38 PM
Last Updated : 28 Nov 2023 04:38 PM
பொள்ளாச்சி: தமிழகத்தில் சேர, சோழ, பாண்டிய நாடுகளைபோல், கொங்கு நாட்டின் வரலாறு கூறும் கல்வெட்டுகள், நடுகல் உள்ளிட்ட பல்வேறு சின்னங்கள் பராமரிப்பின்றி சிதிலமடைந்து காணப்படுகின்றன. தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டு, அவற்றை பாதுகாக்க வேண்டுமென வரலாற்று ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். கொங்கு 24 நாடுகளில் ராஜகேசரி பெருவழி என அழைக்கப்பட்ட ஆறை நாட்டு பகுதியான இன்றைய கோவை நகர், அவிநாசி வட்டம், பல்லடம் வட்டம் ஆகிய பகுதிகளிலும், வையாபுரி நாடு, நல்லுருக்காநாடு என அழைக்கப்பட்ட இன்றைய உடுமலை, பழநி, வட்டங்களில் வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டபோது முதுமக்கள் தாழி, கல்திட்டைகள், நாணயங்கள் கிடைத்தன.
அவற்றின் மூலமாக பல வரலாற்று செய்திகளும் வெளிவந்தன. அதேபோல், வீர நாராயணன் பெருவழி அமைந்ததாக கூறப்படும் தென்கொங்கு நாட்டு பகுதிகளான ஆனைமலை நாடு, காவடிக்கா நாடு ஆகிய பகுதிகளில் நடுகல், கல்வெட்டுகள், புடைப்பு சிற்பங்கள் பராமரிப்பு இன்றி உள்ளன. அவற்றை வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டால், வரலாற்று செய்திகள் வெளிவரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஆனைமலை அருகே பெத்தநாயக்கனூர் - ஜமீன் கோட்டாம்பட்டி சாலையில் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்ட புலிக்குத்தி கல், புடைப்பு சிற்பங்களுடன் 3 அடி உயரத்தில் கம்பீரமாக உள்ளது. முன்னோர்களின் வீரத்தை பறைசாற்றும் இந்த புலிக்குத்தி கல், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது.
இதுகுறித்து தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் ஆய்வாளரும், தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தமிழ் துறையின் கல்வெட்டியல் மற்றும் மரபு மேலாண்மை பொறுப்பாசிரியருமான ரவி கூறியதாவது: கிராமத்துக்குள் நுழைந்து மனிதர்களை தாக்கிய அல்லது கால்நடைகளை வேட்டையாடிய புலியை கொன்று வீரமரணமடைந்த வீரனின் நினைவை போற்றும் விதமாக புலிக்குத்தி கல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தில் வீரனின் தலையில் உள்ள குடுமி, முறுக்கிய மீசை, காலில்உள்ள காப்பு, அணிகலன்கள், உடை ஆகியவற்றை கொண்டு அந்த சிற்பம் நாயக்கர்காலமான 16 அல்லது 17-ம் நூற் றாண்டை சேர்ந்தது என கருதலாம். முதல் சிற்பத்தில் கூறப்படும் செய்தி கைகூப்பிய நிலையில் காணப்படும் பெண்ணின் உருவமானது, அப்பெண் இறந்து தெய்வீக நிலையை அடைந்ததை குறிக்கிறது.
கைகூப்பிய நிலையில் காணப்படும் ஆணின் உருவம், அவனும் தெய்வீக நிலையை அடைந்ததை விளக்குகிறது. புலியின் உடலில் காணப்படும் வட்ட வடிவம், அது சிறுத்தை வகையை சேர்ந்தது என்பதை காட்டுகிறது. மேலும், ஆணின் உடலில் ஓர் ஆயுதம் சிறுத்தையின் உடலில் பாய்ந்து வெளியே வருவது, அவன் சிறுத்தையுடன் கடுமையாக சண்டையிட்டுள்ளதை காட்டுகிறது. சிறுத்தையின் வால் அதன் தலை வரை நீண்டிருப்பது, சிறுத்தையின் கோரைப்பற்கள் வெளியில் தெரிவது அதன் ஆக்ரோஷத்தை குறிப்பிடுகிறது. சிறுத்தையின் முன்னங்கால் இரண்டும் வீரனின் தோள்பட்டையில் பதிந்திருப்பது, சிறுத்தை வீரனை தாக்குவதையும் குறிப்பிடுகிறது. பெண்ணை கொன்ற சிறுத்தையுடன் வீரன் சண்டையிட்டு வீரமரணமடைந்ததன் நினைவாக, இந்த புலிக்குத்தி கல் அமைக்கப்பட்டுள்ளது.
இரண்டாவதாக உள்ள சிற்பத்தில் ஆண் மற்றும் பெண்ணின் சிற்பம் உள்ளது. பெண் மற்றும் ஆணின் உருவங்களில் ஆபரணங்கள் அணிந்திருப்பது, அவர்கள் சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருப்பதை கூறுகிறது. கைகூப்பிய நிலையில் ஆணும், பெண்ணும் காணப்படுகின்றனர். புகழ்பெற்ற வாழ்வை வாழ்ந்து சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்து, மறைந்த வீரனின் நினைவாக இந்த நடுகல் அமைக்கப்பட்டுள்ளது. நடுகல் என்பது இறந்தவர்களுக்காக அமைக்கப்படுவதாகும். ஆண் கைகூப்பிய நிலையில் இருப்பது, அவனது தெய்வீக நிலையை குறிக்கிறது.
இருவருக்கும் இடையே நெருப்பின் வடிவம் இருப்பது, பெண் உடன்கட்டை ஏறியதை குறிக்கலாம். கணவன் இறந்ததும் மனைவி உடன்கட்டை ஏறுவது என்பது, நாயக்கர் காலத்தில் அதிகம் காணப்பட்டது. தமிழகத்தில் நாயக்கர் காலகட்டத்தில் புலிக்குத்தி கல் அதிகம் அமைக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் நினைவாக அமைக்கப்பட்ட புலிக்குத்தி கல்லை, தைப்பொங்கல் தினத்தில் வழிபடுவது, கொங்குநாட்டு பகுதியில் இன்றும் கடைபிடித்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார். முன்னோர்களின் வீரத்தையும், வரலாற்றையும் வெளிப்படுத்தும் இந்த வரலாற்று சின்னத்தை பாதுகாக்க வேண்டும் என்பதே வரலாற்று ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT