Published : 26 Jan 2018 10:55 AM
Last Updated : 26 Jan 2018 10:55 AM
2013-ம் ஆண்டு. பொள்ளாச்சியில் சிவில் இன்ஜினீயரிங்கில் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்த அந்த இளைஞர் ஒரு வலைப்பூவை ஆரம்பித்தார். கிரிக்கெட்டில் அதீத ஆர்வம் கொண்ட அவர், தொடர்ச்சியாக கிரிக்கெட் பற்றி எழுத நினைத்தார். ஆனால், ஆயிரக்கணக்கான வலைப்பூக்கள் இருக்கும் நிலையில், வித்தியாசமாக எதையாவது செய்யாவிட்டால், விரைவிலேயே காணாமல் போய்விடுவோம் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஆகவே, வலைப்பூவில் கிரிக்கெட் பற்றிய கட்டுரைகளை எழுதும்போது மற்றவர்களைப் போல கூகுளில் படங்களை எடுத்துப் பகிராமல், சொந்தமாக டிசைன் செய்ய ஆரம்பித்தார்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் அதன் தன்மைக்கேற்ப வித்தியாசமான, காமெடியான படங்களை உருவாக்கி வலைப்பூவில் இணைக்க, படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆறே மாதத்தில் இரண்டு லட்சம் ஹிட்ஸைப் பெற, தனக்கு விருப்பமான ஒரு விஷயத்தையே புதுமையாகச் செய்தால், வெற்றிபெற முடியும் என்பதை அந்த இளைஞர் உணர்ந்தார். 2015-ல் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு சுற்றுலா, பயணம் சார்ந்த பத்திரிகையில் அவர் பணிக்குச் சேர்ந்தார். ஆனால், கிரிக்கெட் சார்ந்து ஏதாவது புதுமையாகச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் துரத்திக்கொண்டே இருந்த அந்த இளைஞரின் பெயர் திவாகர்.
‘ஸ்போர்ட் வாக்’ இந்தியா என்ற பெயரில் இருந்த தனது வலைப்பூவை, ஒரு இணையதளமாக மாற்றினார், திவாகர். ‘ஸ்போர்ட் வாக்’ என்ற பெயரில் விளையாட்டுப் பொருட்கள், சந்தைப்படுத்துதல் சார்ந்த வணிகம் செய்யவே அவர் விரும்பினார். அதற்காக வாய்ப்புகளை எதிர்நோக்கி இருந்தபோதுதான் அவருக்கு ஃபேஸ்புக் உதவியது.
இணையத்தில் சேர்ந்தவர்கள்
2015-ல் ஃபேஸ்புக்கில் முதன்முறையாக ஒரு குழுவில் சில ஓவியங்களைப் பார்த்தார் திவாகர். ரசிக்கும்படியாக இருந்த அந்த கார்ட்டூன் ஸ்டைல் ஓவியங்கள் அவரைக் கவர, அவற்றை வரைந்த ஓவியரைத் தொடர்புகொண்டார். அந்த ஓவியரும் இவருடன் இணைந்து செயல்பட விருப்பம் தெரிவித்தார். அவர் அதீதன். இவருடைய தந்தையும் ஒரு விஐபிதான். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரின் மகன்தான் அதீதன். இப்படியாக இரண்டு புதுமை விரும்பிகள் இணைந்து ஒரு நிறுவனத்தை 2015-ல் உருவாக்கினார்கள்.
புதிய இணையதளத்தில் தனது முகநூல் நண்பர்களையே எழுத்தாளர்களாக்கினார் திவாகர். அவர்கள் எழுதும் கட்டுரைகளுக்கு அதீதன் வரைந்த ஓவியங்களை அப்லோட் செய்ய, இந்தக் கூட்டணிக்கு ஆதரவு அதிகரித்தது.
டோனியும் சூப்பர் கிங்ஸும்
‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படம் ஹிட் ஆன நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்களை அவெஞ்சர்ஸ் கதாபாத்திரங்களைப் போல் சித்தரித்து அதீதன் ஓவியம் வரைந்தார். அந்த ஓவியத்தில் டோனி கேப்டன் அமெரிக்காபோல, ரெய்னாவை சூப்பர்மேன் போல வரைந்தார்.
அந்த ஓவியத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர, இணையத்தில் வைரலாகப் பரவியது. அந்த ஓவியத்தை உருவாக்கிய ஸ்போர்ட்வாக் நிறுவனத்தைப் பற்றிய விவரங்கள் விசாரிக்கப்பட்டன.
அதன் பிறகு, டீஷர்ட்டில் அந்த கார்ட்டூன்களை உருவாக்கித் தர முடியுமா என்று நிறைய ரசிகர்கள் விசாரிக்க, முதன்முறையாக நம்பிக்கை துளிர்விட ஆரம்பித்தது. இந்த டீஷர்ட்டுகளைத் தொடர்ந்து கால்பந்தாட்ட ரசிகர்கள் குழுக்களுக்கு என்று ரசிகர் குழு சார்ந்த டீஷர்ட்டுகள், போஸ்டர்கள் போன்றவற்றைத் தயாரிக்க ஆரம்பித்தனர்.
சென்னை ஆர்சனல் ஃபேன் க்ளப், கேரளா மான்செஸ்டர் யுனைடெட் ஃபேன் க்ளப் & டெல்லியில் ஆர்சனல் ஃபேன் க்ளப் என்று பலருக்கும் சந்தைப்படுத்துதலில் முழுமூச்சில் இறங்கினார்கள்.
டிராவிட் காமிக்ஸ்
இந்தியாவின் ‘பெருஞ்சுவர்’ என்றழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டைப் பற்றி ஒரு புத்தகத்தை உருவாக்க திவாகர் விரும்பினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த ஹிமான்ஷு எழுத, வழக்கம்போல அதீதன் தனது கார்ட்டூன் பாணியிலான ஓவியங்களில் கலக்க, 32 பக்க வண்ணப் புத்தகத்தை உருவாக்கினார் திவாகர். 16 வண்ண ஓவியங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் ராகுல் டிராவிட்டின் வாழ்க்கையின் மிக முக்கியமான 15 தருணங்களைக் கட்டுரைகளாக வழங்குகிறது.
பெங்களூரு அணியில் விளையாடுவதில் ஆரம்பித்து, இங்கிலாந்தில் அவரது முதல் டெஸ்ட் போட்டி, தென்னாப்பிரிக்காவில் அவரது முதல் டெஸ்ட் சதம், 1999 உலகக் கோப்பையில் கங்குலியுடன் அவர் இணைந்து அடித்த 300 ரன் பார்ட்னர்ஷிப், 2001-ல் ஆஸ்திரேலியாவுடன் கொல்கத்தாவில் ஆடிய டெஸ்ட் போட்டி, 2003-ல் ஆஸ்திரேலியாவில் அவரால் ஜெயித்த டெஸ்ட், சேவாக் உடன் இவரது தொடக்க ஆட்டம் என்று பல மறக்க முடியாத தருணங்களைக் கண் முன்னே கொண்டுவருகிறது இந்தப் புத்தகம்.
ஒவ்வொரு கட்டுரைக்கும் ‘க்யூட்’டான ஓவியம், அதை இன்னமும் ரசிக்கவைக்கும் வண்ணக் கலவை என்று மிகச் சிறப்பாக வந்துள்ளது இந்தப் புத்தகம்.
சென்னையில் வெளியீடு
சென்னையில் சில தினங்களுக்கு முன்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது இந்தப் புத்தகம். இணையத்தில் ஏற்கெனவே இந்தப் புத்தகம் பற்றி அலசப்பட, தென்னாப்பிரிக்காவிலிருந்து திருவான்மியூர்வரை நூற்றுக்கணக்கான ரசிகர்கள் ஆர்டர் செய்து வாங்கிவிட்டார்கள். இந்த வாரம் முதல் கடைகளிலும் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார் திவாகர்.
தலைப்பு: தி வால் (The Wall) கதாசிரியர்: ஹிமான்ஷு ஓவியர்: அதீதன் வெளியீடு: ஜனவரி 20, 2018 பதிப்பாளர்: திவாகர், ஸ்போர்ட்வாக் பப்ளிகேஷன்ஸ் விலை: ரூ. 199 (32 வண்ணப் பக்கங்கள்) |
கட்டுரையாளர்:காமிக்ஸ் ஆர்வலர்
தொடர்புக்கு:TamilComicsUlagam@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT