Published : 27 Nov 2023 04:38 PM
Last Updated : 27 Nov 2023 04:38 PM
கோவை: சாலை விபத்து, உடல் நலக்குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினந்தோறும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களில் பலருக்கு ரத்தம் தேவைப்படுகிறது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் உன்னத பணியில் ஈடுபட்டுள்ள கோவை பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள், கரோனா தொற்று பரவலுக்கு பின் ரத்தம் கொடுப்பது தொடர்பான விழிப்புணர்வு இளைஞர்கள் மத்தியில் குறைந்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். கோவையில் இளைஞர்கள் சார்பில் நடத்தப்பட்டு வரும் ஸ்ரீ அன்னை கரங்கள் நலச்சங்கம் என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் கடந்த பத்தாண்டுகளுக்கு மேல் கோவை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் நோயாளிகளுக்கு ரத்த தானம் வழங்கி வருகின்றனர்.
ரத்தம் தானமாக கொடுப்பதால் அதை பெறுபவர்கள் மட்டுமின்றி அதை வழங்குபவர்களுக்கும் நன்மை கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். ஸ்ரீஅன்னை கரங்கள் நலச் சங்கத்தின் தலைவர் கோபி கூறியதாவது: கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறேன். மருத்துவமனையில் சாலை விபத்தால் பாதிக்கப்பட்ட நோயாளி ஒருவருக்கு ரத்தம் தேவைப்பட, அவர்களின் குடும்பத்தினர் எதிர்கொண்ட இன்னல்களை நேரில் பார்த்த பின் ரத்த தானம் செய்வதுடன் பல தன்னார்வலர்களை இணைத்து பொது சேவை வழங்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
இதனால் 2012-ம் ஆண்டு நான் மற்றும் எனது நண்பர்கள் சுரேஷ், பிரகாஷ், யுவராஜ் மற்றும் நண்பர்கள் இணைந்து ஸ்ரீ அன்னை கரங்கள் நலச் சங்கம் என்ற தன்னார்வ அமைப்பை தொடங்கினோம். தற்போது எட்டாயிரம் தன்னார்வலர்கள் உள்ளனர். கோவை மாவட்டம் மட்டுமின்றி சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகளுக்கும் கேரளா மாநிலத்திலுள்ள நோயாளிகளுக்கும் ரத்த தானம் செய்து வருகிறோம். இதுவரை 50 ஆயிரம் யூனிட்டுக்கும் அதிகமான ரத்தத்தை தானமாக வழங்கியுள்ளோம். கரோனா தொற்று பரவலுக்கு பின் ரத்த தானம் வழங்க முன்வரும் தன்னார்வலர்களின் எண் ணிக்கை குறைந்துள்ளது.
பல வீடுகளில் தன்னார்வலர்களின் குடும்பத்தினர் அச்சம் காரணமாக ரத்த தானம் வழங்க அனுமதிப்பதில்லை. ரத்த தானம் வழங்குவதால் அதை பெறுபவர்கள் மட்டுமின்றி அதை வழங்குபவர்களுக்கும் நன்மை கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். ரத்த தானம் செய்வதற்கு முன் உடல் நல பரிசோதனை செய்யப்படும். எனவே, தானம் தர முன்வருவோர் அவர்களின் உடல் நலன் குறித்தும் தெரிந்து கொள்ளலாம். ஒரு முறை ரத்தம் தானமாக வழங்கினால் மூன்று மாதங்களுக்கு பின் மீண்டும் வழங்கலாம். கோவை மாவட்டத்தில் மட்டும் தினமும் சராசரியாக 30 யூனிட் ரத்தம் தானமாக வழங்கி வருகிறோம். 24 மணி நேரமும் இந்த பொது சேவையை செய்து வருகிறோம். ரத்தத்தை தானமாக வழங்குவதால் விலைமதிப்பற்ற மனித உயிரை காக்க முடியும். எனவே, இந்த உன்னத பணியில் எங்களுடன் இணைந்து செயல்பட விரும்புவோர் 9994148105 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT