Published : 23 Nov 2023 04:10 AM
Last Updated : 23 Nov 2023 04:10 AM

அதிக பனியினால் ஏற்படும் முகவாதத்தை தடுப்பது எப்படி? - பிசியோதெரபி மருத்துவர் விளக்கம்

கோவை: கார்த்திகை, மார்கழி பனியில் நடப்பது அனைவருக்கும் பிடித்த ஒன்று. ஆனால், அதிக குளிரால் முகவாதம் ஏற்படும். குறிப்பாக பெண்களை அதிகளவில் இது பாதிக்கிறது என்கிறார், கோவை சரவணம்பட்டி சத்தி ரோட்டிலுள்ள ப்ரண்ட்ஸ் பிசியோதெரபி மருத்துவமனையின் தலைமை பிசியோதெரபி மருத்துவர் ராஜேஸ் கண்ணா.

இது தொடர்பாக அவர் மேலும்கூறியதாவது: கார்த்திகை, மார்கழியில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். இந்த பனியினால் ஜலதோஷம், சைனஸ், மூச்சு திணறல்போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவது சகஜம். ஆனால் முகவாதம் ஏற்படும் என்பது, நாம் அறியாத ஒன்று. இது பெண்களை அதிகமாக பாதிக்கிறது. இதன் அறிகுறிகளை நாம் எளிதாக கண்டறியலாம். அதாவது பேசும்போதோ அல்லது சிரிக்கும்போதோ ஒரு பக்கமாக வாய் கோணும். பாதிக்கப்பட்ட கண்ணை முழுமையாக மூட முடியாது. பாதிக்கப்பட்ட பக்கம் வலது அல்லது இடது கண்ணில், கண்ணீர் சொட்டும். தண்ணீர் குடிக்கும் போது வாய் வழியாக தண்ணீர் வழியும். பாதிக்கப்பட்ட புருவத்தை உயர்த்த முடியாது. சாப்பிடும் போது கன்னத்தின் உட்பகுதி பற்களுக்கிடையே சிக்கும். நாக்கில் சுவை தெரியாது.

இதற்கு காரணம் அதிக பனி காற்று, காது வழியாக புகுவதால் முக அசைவுகளுக்கு உதவும் நரம்பில் நீர் கோர்த்து நரம்பு செல்லும் சிறிய துவாரத்தை அழுத்துவதால், முக தசைகள் செயலிழந்து, முக வாதம் ஏற்படுகிறது. அதிகாலை விழிக்கும் பெண்களை இது அதிகம் பாதிக்கிறது. அதிகாலை நடைபயிற்சி, அதிகாலை இரு சக்கர வாகன பயணம், ஜன்னலோர பேருந்து, ரயில் பயணம் ஆகியவற்றால் பாதிப்பு ஏற்படுகிறது.

காது வலி மற்றும் அடைப்பு, ‘ஏசி' அருகில் அமர்ந்து வேலை பார்ப்பது, உமிழ் நீர் சுரப்பி அறுவை சிகிச்சை போன்ற காரணங்களாலும் முகவாதம் வரலாம். எனவே இந்த அறிகுறிகள் தென்படும் போதே, பொது அல்லது நரம்பியல் பிசியோதெரபி மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டால், முழுமையாக குணப்படுத்தலாம்.

பிசியோதெரபி சிகிச்சையின் மூலம் செயலிழந்த தசைகளை, மின்தூண்டல் முறையில் வலுப்படுத்தி, முகத்தை சீரமைக்க முடியும். இதனால் முகவாதம் வந்தசுவடே தெரியாமல், முக அமைப்பைமுழுமையாக திரும்ப கொண்டு வரமுடியும். முகவாதம் வராமல் தடுக்ககுளிர்காலத்தில் அதிகாலை மற்றும் நள்ளிரவு பயணத்தை தவிர்ப்பது நல்லது. இருசக்கர வாகன பயணத்தின் போது காதில் பஞ்சு, ஸ்கார்ப், ஹெல்மெட் அணிவதன் மூலம் பனிக்காற்று காதில் புகாமல் தடுக்க முடியும்.

பேருந்து, கார், ரயில் பயணத்தின் போது, ஜன்னலை மூடி காதில் பனிக்காற்று புகாதவாறு தடுக்கவேண்டும். காது வலி மற்றும் அடைப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும் போது, உடனே மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. குளிர்காலத்தில் குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் போன்றகுளிர்ச்சியான பொருட்களை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. மேலும் இது குறித்த இலவச மருத்துவ ஆலோசனைக்கு 9843239971,9626280496 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x