Published : 16 Nov 2023 06:12 PM
Last Updated : 16 Nov 2023 06:12 PM
மதுரை: சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு மருந்து களை மட்டும் பரிந்துரைத்து அனுப்பாமல், அவர்களுக்கு வந்த நோய்க்கான அடிப்படை காரணத்தை அறிந்து அதற்கேற்ப சிகிச்சையை பரிந்துரைக்கிறார் பொதும்பு அரசு சித்த மருத்துவமனை மருத்துவர் நளினி மோகன். சித்த மருத்துவத்துடன் யோகா பயிற்சி, தியானம், வர்ம சிகிச்சை, மசாஜ், முத்திரை, மனநல ஆலோசனைகளையும் வழங்கி வருகிறார். மதுரையில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது பொதும்பு கிராமம். சுற்றிலும் தென்னந்தோப்புகள், பசுமை போர்த்திய நெல் வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள இச்சிறிய கிராமம் தற்போது சித்த மருத்துவ சிகிச்சைக்கு பிரபலமடைந்து வருகிறது.
பொதும்பு அரசு சித்த மருத்துவமனைக்கு சுற்றுவட்டார கிராம மக்கள் மட்டுமின்றி நகர் பகுதியில் வசிப்பவர்களும் தேடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள். அலோபதி மருத்துவம் கொடிகட்டி பறக்கும் இக்காலத்தில் சித்த மருத்துவத்தை நாடி செல்வோர் விரல் விட்டு எண்ணக்கூடியவர்களே. அப்படியிருந்தும் பொதும்பு சித்த மருத்துவமனைக்கு 100-க் கும் மேற்பட்டவர்கள் அன்றாடம் சிகிச்சைக்கு வரக் காரணம், இந்த மருத்துவமனையின் சித்த மருத்துவர் நளினி மோகன். இவர், சித்த மருத்துவராகப் பணியில் சேர்ந்த காலம் முதல் தற்போது வரை 27 ஆண்டுகளாக இந்த மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
மருத்துவம் என்பது உடலையும் மனதையும் புத்துணர்ச்சியடையச் செய்யக் கூடியதாக இருக்க வேண்டும். அப்படியொரு சிகிச்சையை நளினி மோகன் வழங்கி வருகிறார். வெறும் சிகிச்சையும், மருந்துகளையும் கொடுத்ததோடு தன்னுடைய கடமை முடிந்துவிட்டதாக கரு தாமல் நோயாளிகளுடன் பேசி நோய் வர காரணமான அடிப்படை பிரச்சினைகளையும் தெரிந்து கொள்கிறார். அதற்கேற்ப சிகிச்சையை அளிக்கிறார். இங்கு வாரந்தோறும் வியாழன், சனிக்கிழமைகளில் நோயாளிகளுக்கு யோகா, தியானம் பயிற்சி வழங்கப்படுகிறது.
இதில் பள்ளி மாணவர்களும் பங்கேற் கிறார்கள். மருத்துவமனையை சுற்றிலும் மருதம், வில்வம், நாவல், முருங்கை, நெல்லி, பப்பாளி மரங்கள் மற்றும் வெற்றிலை, துளசி உள்ளிட்ட 60 மூலிகை செடிகள் வளர்க்கப்படுகின்றன. அதனால், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவது பசுஞ்சோலைக்குள் வந்து சென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு நளினி மோகன் தன்னுடைய சொந்த செலவில் வரகு அரிசி பாயாசம், பஞ்சமுட்டி கஞ்சி, முருங்கை சூப் தயார் செய்து கொடுக்கிறார். நோயாளிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே சிகிச்சை வழங்காமல் கவுன்சலிங் வழங்கி வர்மம், மசாஜ், முத்திரை சிகிச்சை வழங்கி அதற்கேற்ப சித்த மருந்துகளை வழங்குகிறார்.
சிறுவாழை ஜமீன் அதிவீர பாண்டியன் கூறுகையில், ஆஸ்துமாவால் நீண்ட காலமாக சிரமப்பட்டு வந்தேன். சில நேரங்களில் மூச்சுவிட முடியாது. தீராத சளித்தொல்லையும் இருந்து வந்தது. இதனுடன் சர்க்கரை நோயும் சேர்ந்து கொண்டதால் வாழ்க்கையை முடக்கிப்போட்டது. சித்த மருத்துவம் எடுத்துக் கொண்ட பிறகு சளி தொல்லை, ஆஸ்துமா பிரச்சினை குறைந்துவிட்டது. சர்க்கரை நோய் கட்டுக்குள் வந்தது. தற்போது நோய் பிரச்சினைகளால் ஏற்பட்ட மன அழுத்தம் குறைந்து மகிழ்ச்சியுடன் உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.
மருத்துவர் நளினி மோகன் கூறுகையில், சித்த மருத்துவ சிகிச் சைக்கான கால அவ காசம் அதிகம். ஆனால், நிறைவான பலன் கிடைக்கும். தற்போதைய அவசர உலகில் மக்கள் துரித சிகிச்சை முறையான அலோபதிக்கே முக்கியத்துவம் தருகிறார்கள். அதில், குணமடையாதவர்களே தற்போது சித்த மருத்துவத்தை நாடி வருகின்றனர். இங்கு சிகிச்சைக்கு வருபவர்கள் பெரும் பாலும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக உள்ளனர். நாள்பட்ட நோய் பாதிப்பு, தீராத மன அழுத்தம், ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவற்றுக்காக சிகிச்சைக்கு வருகிறார்கள். அதனால், அவர்களுக்கு சித்த மருத்துவம் சிகிச்சையை தொடங்கும் முன்பு உரிய கவுன்சலிங் வழங்கி மன அழுத்தத்தை போக்கி தன்னம் பிக்கையை ஏற்படுத்து கிறோம். பின்னர் அவர்களின் பிரச்சி னையை அறிந்து அதற்கேற்ப சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT