Published : 16 Nov 2023 06:42 PM
Last Updated : 16 Nov 2023 06:42 PM
விழுப்புரம்: ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம்ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக்கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, எழுத்தறிவு விகிதத்தில் விழுப்புரம் மாவட்டம் 9-வது இடத்தில் உள்ளது.
தமிழகத்தின் சராசரி எழுத்தறிவு விகிதம் 80.07 சதவீதம். ஆனால், விழுப்புரம் மாவட்டத்தின் எழுத்தறிவு விகிதம் 71.88 சதவீதம் ஆக உள்ளது. எழுத்தறிவு விகிதத்தில் முதலிடத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்துக்கும் (91.756) விழுப்புரம் மாவட்டத்துக்கும் இடையில் கிட்டத்தட்ட 20 சதவீதம் வித்தியாசம் உள்ளது. விழுப்புரம், திண்டிவனத்தில் அரசுபொறியியல் கல்லூரிகள், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி, விழுப்புரத்தில் அரசு சட்டக்கல்லூரி, திண்டிவனம் அருகே தனியார் சட்டக்கல்லூரி, அரசு, தனியார் மகளிர் கல்லூரிகள், திண்டிவனம் அருகே வேளாண் அறிவியியல் ஆராய்ச்சி மையம் என கல்வி நிறுவனங்கள் உள்ளன. ஆனாலும், விழுப்புரம் மாவட்டம் கல்வி அளவில் சற்றே பின்தங்கி உள்ளது.
இதற்கிடையே வானூர் பகுதியில் ஐ.டி பார்க் பணிகள் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது நீண்ட காலமாக வெறும் அறிவிப்புடனே உள்ளது. இதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. நடப்புக் கல்வியைத் தாண்டிய திறன் வளர்ப்பு இல்லாததால் மற்ற மாவட்டங்களை விட இங்குள்ள இளையோர் தகுந்த வேலைவாய்ப்புக்காக நீண்ட நாட்கள் காத்திருக்கும் சூழல் உள்ளது. திண்டிவனம் அருகே பெலாகுப்பம், கொள்ளார் மற்றும் வெண்மணியாத்தூர் ஆகிய கிராமங்களில் சுமார் 720 ஏக்கர் பரப்பளவில் ஒரு தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
இப்பூங்காவில், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூ 52 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் சிப்காட் நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இதை விரிவாக்கம் செய்து, அதிகப்படியான தொழிற்கூடங்களை உருவாக்கி வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட இளையோர் விரும்புகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தின் கல்வி வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, ‘திருவள்ளுவர் பல்கலைக்கழகம் பிரிக்கப்பட்டு, அதன் ஒரு பகுதி டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகமாக விழுப்புரத்தில் செயல்படும்’ என அதிமுக ஆட்சியில், கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், 5-ம் தேதி சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டு, மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து விழுப்புரம் பழைய வட்டாட்சியர் அலுவலகத்தில், இந்த பல்கலைக்கழகத்துக்கான தற்காலிக அலுவலகம் செயல்பட தொடங்கியது. துணை வேந்தராக அன்பழகன் என்பவர் நியமிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து தற்போதுள்ள ஆவின் நிறுவனத்தை வளவனூர் அருகே உள்ள செங்காடு கிராமத்தில் உள்ள அரசு இடத்துக்கு மாற்றிவிட்டு, ஆவின் நிறுவன வளாகத்தில் இந்த பல்கலைக்கழகத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டது. ஆனாலும், பல்கலைக்கழகச் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இதற்கிடையே ஆட்சி மாறியது.
“பெயரளவுக்குத் தொடங்கப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை தனித்துச் செயல்பட அனுமதிக்க முடியாது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் ஜெயலலிதா பல்கலைக்கழகம் இணைக்கப்படும்’’ என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். இதற்கு மறுப்பு தெரிவித்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், “விழுப்புரம் மாவட்டத்தில் புதிய பல்கலைக்கழகம் வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். ஜெயலலிதா பெயர்தான் உங்களுக்கு பிரச்சினை என்றால், வேறு பெயர் வைத்துக்கொள்ளுங்கள்” என்றார்.
ஆனாலும், விழுப்புரம் மாவட்டத்துக்காக திட்டமிடப்பட்ட ஜெயலலிதா பல்கலைக்கழகம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டது. நமது மாவட்டத்துக்கு என்று தனியே ஒரு பல்கலைக்கழகம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இப்போதும் இங்குள்ள மக்களிடையே உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தின் தொடர் வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி.சண்முகத்திடம் கேட்டபோது, “கடந்த அதிமுக ஆட்சியில்ரூ.261 கோடி மதிப்பில் மரக்காணம் பகுதியில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டன. அதன் பின் ஆட்சிக்கு வந்த திமுக அரசு இப்பணிகளை நிறுத்தியது.
மீன் பிடி துறைமுகம் அமைய உள்ள இடம் தொடர்பாக தனி நபரால் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த அரசு இவ்வழக்கை முறையாக நடத்தாமல் மீனவர்கள் மேல் அக்கறை இல்லாமல் இத்திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது. இதே போல, விழுப்புரம் மாவட்டத்துக்கான கடல்நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை மூடி விட்டனர். அதிமுக கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு ரத்து செய்துள்ளது” என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம் கேட்ட போது, “விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் ,மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகம்,பொறியியல், மருத்துவக் கல்லூரி உள்ளிட்டவைகள் திமுக ஆட்சியில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக திமுக ஆட்சிகளின் போதே விழுப்புரம் மாவட்டம் வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இம்மாவட்டத்தில் உள்ள யாரைக் கேட்டாலும் இதைச் சொல்வார்கள். அரசின் நிதிநிலைக்கேற்ப வருங்காலத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் வேளாண் கல்லூரி தொடங்கப்படும்” என்று தெரிவித்தார். இம்மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து ஆட்சியர் பழனி அளிக்கும் விவரங்களுடன் அடுத்து..
முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT