Published : 16 Nov 2023 04:02 AM
Last Updated : 16 Nov 2023 04:02 AM
கோவை: வடகிழக்கு பருவமழை காலத்தில் தோட்டக்கலை பயிர்களை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கோவை மாவட்ட நிர்வாகம் அறிவுரை வழங்கியுள்ளது.
இது குறித்து மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வட கிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பயிர்களை பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியது அவசியம். மா, கொய்யா, பலா, எலுமிச்சை: காய்ந்த மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். நல்ல காற்றோட்டம் அமையும் வகையில் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.
உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். திராட்சை: கொடியின் அடிப்பகுதியில் மண் அணைத்து விட வேண்டும். உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். திராட்சைக் கொடியில் போர்போப் பசையைப் பூச வேண்டும். அதிகப்படியான இலைதழைகளை கவாத்து செய்தல் வேண்டும். திராட்சைக் கொடிகளை பந்தல் அமைப்பில் நன்கு கட்ட வேண்டும்.
ஜாதிக்காய்: உரிய வடிகால் வசதி செய்ய வேண்டும். காய்ந்துபோன இலைகள் மற்றும் பட்டுப்போன கிளைகளை அகற்ற வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணை குவித்து வைக்க வேண்டும்.
வாழை: காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் கீழ்மட்ட இலைகளை அகற்றிவிட்டு மரத்தின் அடியில் மண் அணைக்க வேண்டும். சவுக்கு அல்லது யூகலிப்டஸ் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்த வேண்டும். மரங்களை சுற்றிலும் சுத்தப்படுத்தி நல்ல வடிகால் வசதி அமைக்க வேண்டும். வாழைத்தார்களை முறையாக மூடி வைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிர்ந்த தார்களை அறுவடை செய்ய வேண்டும்.
காய்கறி மற்றும் இதர தோட்டக்கலைப் பயிர்களுக்கான வழிமுறைகள்: தோட்டக்கலைப் பயிர்களான வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கொத்து மல்லி, கத்தரி போன்ற பயிர்களுக்கு உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக நீர் தேங்காத வகையில் உரிய வடிகால் வசதி செய்திட வேண்டும். நீர்ப் பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிமாக நிறுத்தி வைக்க வேண்டும். காற்றினால் ஏற்படும் சேதத்தை தவிர்க்க காற்று வீசும் திசைக்கு எதிர்திசையில் குச்சிகளால் முட்டு கொடுத்து புதியதாக நடவு செய்த செடிகள் சாயாதவண்ணம் பாதுகாக்க வேண்டும்.
நிழல் வலைக்குடில் மற்றும் பசுமைக்குடில்: கிழிந்து போன நிழல் வலைகளை தைத்து சரி செய்ய வேண்டும். நிழல் வலைக்குடிலின் அடிப்பாகம் பலமாக நிலத்துடன் இணைப்புக் கம்பிகளால் இணைக்கப்பட்டுள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும். நிழல் வலைக்குடில் மற்றும் பசுமைக்குடிலின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் பத்திரமாக மூடி உள்பகுதியில் காற்று உட்புகாமல் பாதுகாக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT