Last Updated : 15 Nov, 2023 07:42 PM

 

Published : 15 Nov 2023 07:42 PM
Last Updated : 15 Nov 2023 07:42 PM

விழுப்புரம் 30 | செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?

மரக்காணத்தில் உள்ள உப்பளம்.

செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?எஸ்.நீலவண்ணன் விழுப்புரம் ஒருங்கிணைந்த தென்னாற்காடு மாவட்டத்தில் இருந்து, கடந்த 1993-ம் ஆண்டு செப். 30-ம் தேதி பிரிந்து புதிய மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் உருவானது. 30-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள விழுப்புரம் மாவட்டத்தைச் சிறப்பிக் கும் வகையில், கடந்த 29 ஆண்டுகளில் இம்மாவட்டம் பெற்றது என்ன..? பெறத் தவறியது என்ன..? என்பது குறித்து நமது சிறப்பு பகுதியில் தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், மாவட்டத்தில் உள்ள சட்டப்பேரவை தொகுதிகள் வாரியாக அத்தொகுதிகள் பெறத் தவறியது குறித்து பதிவிடுகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் விழுப்புரம், மயிலம், விக்கிரவாண்டி, செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் என 7 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில் விழுப்புரம், மயிலம், விக்கிரவாண்டி தொகுதிகளின் தேவைகள் குறித்துபதிவிட்டோம். அதன் தொடர்ச்சியாக செஞ்சி, திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர் தொகுதிகளின் தற்போதைய நிலை குறித்து அலசுகிறோம்.

திண்டிவனம்: திண்டிவனம் தொகுதியில், மக்களின் நீண்ட கால கோரிக்கைகள் பல நிறை வேற்றப்படாமல் இருக்கின்றன. திண்டிவனத்தில் காகித தொழிற்சாலை, மரக்காணத்தில் பாலிடெக்னிக், கிழக்கு கடற்கரை சாலையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, மரக்காணம் கடற்கரை பகுதியில் விளையாட்டு மையம் மற்றும் நீர் விளையாட்டு சுற்றுலாதலம் படகு குழாமுடன் அமைக்க வேண்டும். மேலும் உப்பு தொழிற்சாலை அமைத்திட வேண்டும். மரக்காணம் வட்டத்தில் அரசு துணைக்கருவூலம் அமைக்க வேண்டும்.

ஆவணிப்பூரில் தீயணைப்பு நிலையம் அமைத்திட வேண்டும். கீழ்புத்துப்பட்டில் ஆரம்ப சுகாதார நிலையம், முருக் கேரியில் மருத்துவப்பணியாளர் குடியிருப் புகள், திண்டிவனம், கிடங்கல் 2 பகுதியில் பல்நோக்கு சமுதாயக்கூடம் கட்டித்தர வேண்டும். மரக்காணம் அழகன்குப்பம் முதல் முதலியார்குப்பம் வரை தூண்டில் வளைவு அமைக்க வேண்டும். தொகுதியில் பல இடங்களில் பாலங்கள் அமைக்க வேண்டும். ஓங்கூர் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டவேண்டும். கோவடி அரசு மேல்நிலைப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடங்கள், திண்டிவனம் - புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பெரிய ஊடுபாலம் அமைக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை இத்தொகுதி மக்கள் முக்கிய கோரிக்கைகளாக முன்வைக் கின்றனர்.

செஞ்சி: அமைச்சர் மஸ்தானின் தொகுதியாக விழுப்புரம் மாவட்டத்தில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருக்கிறது செஞ்சி. ஆனாலும், தொகுதி மக்களின் நீண்ட கோரிக்கைகள் நிலுவையில் இருக்கின்றன. செஞ்சிக்கோட்டை சுற்றுலா பயணி களை கவரும் வகையில் ரோப் - கார் வசதியை ஏற்படுத்த வேண்டும். சர்க்கரை குளம் மற்றும் செட்டிகுளத்தில் படகு சவாரி அமைக்க வேண்டும். ராஜா தேசிங்குவின் நினைவாக அவர் உயிர்நீத்த நீலாம் பூண்டியில் மணிமண்டபம் அமைக்க வேண்டும். செஞ்சி - வல்லம் ஒன்றியங்களை இணைக்கும் சங்கராபரணி ஆற்றைக் கடந்து செல்லும் மேற்களவாய் ஆற்றங்கரையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.

செஞ்சி அரசு மருத்துவமனையை மாவட்ட மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும். பெருவளூர் ஊராட்சியில் சமத்துவப்புரம் அமைக்க வேண்டும். அனந்தபுரத்தில் போக்குவரத்து கழக பணிமனை, அனந்தபுரம், அவலூர்பேட்டையில் தீயணைப்பு நிலை யங்கள், மேல்மலையனூரில் காவல் நிலையம் அமைக்க வேண்டும். செஞ்சியில் சுற்றுலா மாளிகை அமைக்க வேண்டும். செஞ்சியில் வேளாண் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

வானூர்: வளர்ச்சியில் சற்று பின்தங்கிய நம் விழுப்புரம் மாவட்டத்தில், அதிலும் பின்தங்கிய பகுதியாக வானூர் தொகுதி உள்ளது. கிளியனூரை தலைமையிடமாகக் கொண்டு ஊராட்சி ஒன்றியம் அமைக்க வேண்டும். வானூரில் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் கிரானைட் தொழிற்சாலை, கோண்டூர் கூட்டுச்சாலையில் காவல் நிலையம், கண்டமங்கலத்தில் தீயணைப்பு நிலையம், வருவாய் வட்டம், கோட்டக் குப்பம் நகராட்சியில் மின்தகன மையம், சின்ன முதலியார் சாவடியில் தூண்டில் வளைவு அமைத்திட வேண்டும் என்று தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வானூர் அருகில் உள்ள திருவக்கரையில் பலகோடி ஆண்டுகளுக்கு முற்பட்ட கல் மரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இது விழுப்புரம் மாவட்டத்துக்கு தனிப்பெருமை சேர்க்கிறது.

இங்கு கல்மரப் பூங்கா அமைக்கும் பணிகளை பொதுப்பணித் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பணி மந்தகதியில் நடந்து வருகிறது. இதை விரைந்து முடிக்க வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். கடந்த அதிமுக அரசில் விழுப்புரம் நகரின் அருகே ஐ.டி பார்க் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதை, திமுக அரசு வானூர் அருகே திருச்சிற்றம்பலம் பகுதிக்கு மாற்றியது. ஆனால், அதற்கான பணிகள் எதுவும் தொடங்கப்படவில்லை. இந்தப் பகுதியில் ஐ.டி பார்க் வந்தால், இப்பகுதி விரைவாக வளர்ச்சி அடையும். விழுப்புரம் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி இது என்றாலும், புதுச்சேரிக்கு மிக அருகில் உள்ள பகுதி என்பதால் இந்த வளர்ச்சி வானூர் தொகுதி மக்கள் மற்றும் புதுச்சேரி மக்களுக்கும் பயனளிக்கும்.

திருவக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்மரங்கள்.

திருக்கோவிலூர்: அரகண்டநல்லூர், திருக்கோவிலூர், திருவெண்ணைநல்லூர் பேரூராட்சிகள், தி.அத்திப்பாக்கம், வீரபாண்டி, கண்டாச்சிபுரம், குலதீபமங்கலம், முகையூர், வீரசோழபுரம், டி.மழவராயனூர், செம்மார், மலையம்பட்டு உள்ளிட்ட 94 ஊராட்சிகளும் உள்ளடக்கியது திருக்கோவிலூர் தொகுதி. திருக்கோவிலூர் தொகுதி தேர்தல் நிர்வாகத்தின் அடிப்படையில் தேர்தல் ஆணையத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் இணைக்கப்பட்டு இருந்தாலும், வருவாய் நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு அனைத்தும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கட்டுப் பாட்டில் வருகிறது. திருக்கோவிலூர் நகராட்சியையொட்டிய மணம்பூண்டி, அரகண்டநல்லூர் பேருராட்சி உள்ளிட்ட பகுதிகள் விழுப்புரம் மாவட்ட ஆளுகைக்கு வருவதால், அருகாமையில் சுமார் 3 கி.மீ தூரத்தில் பணிகளை முடிக்க வேண்டிய பொதுமக்கள் 40 கி.மீ அலையவேண்டியது உள்ளது.

உதாரணமாக மணம் பூண்டியைச் சேர்ந்தவர்கள் கண்டாச்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்துக்கும், விழுப் புரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கும், டிஎஸ்பி அலுவலகம், அனைத்து மகளிர் காவல்நிலையம் உள்ளிட்ட அலுவலகங் களுக்கு 37 கி.மீ தூரத்தில் உள்ள விழுப்புரத்துக்கும் செல்ல வேண்டும். ஆனால் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆளுகைக்கு உட்பட்ட திருக்கோவிலூர் வட்டத் தலைநகர் 3 கி.மீ தூரத்தில் உள்ளது. இந்த குழப்பங்களைத் தீர்க்க, பழையபடியே திருக்கோவிலூர் நகராட்சி விழுப்புரம் மாவட்டத்துடன் தொடர வேண்டும் என்று இத்தொகுதி மக்கள் விரும்புகின்றனர்.

திருக்கோவிலூரில் உள்ள விரிவுபடுத் தப்பட்ட பேருந்து நிலையம் போதுமானதாக இல்லாததால், புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும். பாதாள சாக்கடை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதும் இத்தொகுதி மக்களின் முக்கிய கோரிக்கைகளாக உள்ளன. இம்மாவட்டத்தின் வளர்ச்சி குறித்து முக்கியஸ்தர்களின் பார்வையோடு அடுத்த டுத்த நாட்களில்..திருவக்கரையில் கண்டெடுக்கப்பட்ட கல்மரங்கள்.

முந்தைய அத்தியாயம் > விழுப்புரம் 30 | விக்கிரவாண்டி, திருக்கோவிலூர், விழுப்புரம் தொகுதிகள் ஏற்றம் பெறுமா... மாற்றம் வருமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x