Published : 14 Nov 2023 05:50 PM
Last Updated : 14 Nov 2023 05:50 PM
மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள புத்தூர் மலையிலுள்ள புடைப்புச் சிற்பங்களை பாதுகாக்க தமிழக தொல்லியல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். உசிலம்பட்டி அருகே புத்தூர் மலை உச்சிக்கு செல்லும் வழியிலுள்ள குகையை ‘மூன்று சாமிக் குகை’ என உள்ளூர் மக்கள் அழைக்கின்றனர். இக்குகைக்குள் முற்காலத்துப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த 4 புடைப்பு சிற் பங்கள், பெருங்கற்கால வெண்சாந்து பாறை ஓவியங்கள், குகைக்குள் மழை நீர் புகாதவாறு காடியும், சிந்து சமவெளியில் கண்டறியப்பட்டது போன்ற சில குறியீடுகளும் காணப்படுகின்றன.இதனை தமிழக தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பொறியாளரும், தொல்லியல் ஆர்வலருமான வெ.பாலமுரளி கூறியதாவது: இக்குகையில் சமண மதத்தைச் சேர்ந்த தீர்த்தங்கரர்கள் என்று புனே ஜெயின் சங்க உறுப்பினர்கள் மஞ்சள் நிறப்பலகை ஒன்றை வைத்துள்ளனர். பொதுவாக ஜெயின் தீர்த்தங்கரர்கள் மீசை வைத்துக் கொள்வதில்லை, இடுப்பில் ஆடையும் அணிவதில்லை. ஆனால், இங்குள்ள 4 சிற்பங்களும் மீசையுடனும், இடுப்பில் ஆடையுடனும் காணப்படுகின்றன. இதுபற்றி ஆசீவக மத ஆய்வாளர்கள் ஆய்வு செய்து, இங்குள்ள நான்கு சிற்பங்களையும் ஆசீவக மதத் தலைவர்கள் என்று குறிப் பிட்டிருக்கின்றனர். சமணம், பவுத்தம் உருவான காலத்தில் உருவான மதம் ஆசீவகம். அதைத் தோற்றுவித் தவர் மற்கலி கோசாலர். அவரும்சமண மதத்தின் 23-ம் தீர்த்தங்கரரான பார்சுவநாதரை தனது குருவாக ஏற்றுக் கொண்டவர்.
இங்கு அமர்ந்த நிலையில் இருக்கும் சிற்பங்களில் நடுவில் ஐந்து தலை நாகத்து டனும்,முக்குடையுடனும் இருப்பது பார்சுவநாதர். அவருக்கு இடது புறம் இரு குடையுடன் இருப்பது ஆசீவகத்தைத் தோற்றுவித்த மற்கலி கோசாலர்,வலது புறத்தில் இருப்பது பூரண காயபர் என்னும் ஆசீவகத் துறவி. நின்ற நிலையில் இருக்கும் சிறிய சிற்பம் கணி நந்தாசிரிய இயக்கன் என்னும் ஆசீவகத் துறவி. இந்தக் கணி நந்தாசிரியனுக்குத்தான் சங்க காலப் பாண்டிய மன்னன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் கற்படுக்கை அமைத்துக் கொடுத்தான் என்கிறது மதுரை மாங்குளம் தமிழி கல்வெட்டு. இக்கிராம மக்கள் இன்றளவும் ‘மூன்று சாமிகள்’ என்று வழி பட்டு வருகின்றனர். தமிழக தொல்லியல் துறையினர் இந்தக் குகையை மேலும் ஆராய்ந்தால் கற்படுக்கைகள், தமிழிக் கல்வெட்டுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT