Published : 13 Nov 2023 10:04 AM
Last Updated : 13 Nov 2023 10:04 AM
கோவை: கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும், சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட நாய்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த கருத்தடை மேற்கொள்ளப்பட்டாலும், அதுபோது மானதாக இல்லை. இதனால், அவற்றின் எண்ணிக்கையானது தொடர்ந்து பல்கிப் பெருகி வருகிறது.
நாய்க் கடியால் குழந்தைகள், முதியவர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இது தவிர, அடிபட்டு, நோய்வாய்ப்பட்டு கவனிப்பாரற்று நாய்கள் இறக்கும் நிலையும் உள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் நாய்கள் முறையாக பராமரிக்கப்படாமல் தெருவில் விடப் படுவதாலும், தெரு நாய்களின் பெருக்கம் அதிகமாகிறது. வளர்ப்பு நாய்களுக்கு முறையாக தடுப்பூசி போடாத காரணத்தால் ரேபிஸ் நோய் பரவும் அபாயமும் உள்ளது.
இந்த பிரச்சினைகளுக்கான தீர்வுகள் குறித்து கைவிடப்பட்ட நாய்களை தன்னார்வமாக மீட்டு வரும் சாய்பாபா காலனி பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் கூறியதாவது: பெண் நாயானது 6 மாதங்களில் கருத்தரிக்கும் நிலைக்கு வந்து விடும். 8 மாதங்களில் குட்டி போட்டுவிடும். எனவே, 6-வது மாதத்தில் கருத்தடை செய்வது நல்லது.
கோவை மாநகரில் நாய்களுக்கு கருத்தடை செய்யும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு ஏற்ப வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 50 நாய்களுக்காவது கருத்தடை செய்ய வேண்டும். எந்த இடத்தில் இருந்து கருத்தடைக்காக நாய்களை பிடித்துச் செல்கிறோமோ, அதே இடத்தில்தான் அவற்றை விடுவிக்க வேண்டும். வேறு இடத்தில் விடுவித்தால், அங்கிருந்த நாய்களுக்கு பதில், வேறு இடத்தில் உள்ள நாய்கள் அங்கு வந்துவிடும். ஏற்கெனவே பழக்கப்பட்ட நாய்கள் எனில் மனிதர்களை கடித்தால் உணவு கிடைக்காது என்று அவற்றுக்கு தெரியும்.
ஆனால், புதிதாக வரும் நாய்களுக்கு அப்பகுதி மக்களிடம் பழக்கம் இருக்காது. அவை ஆக்ரோஷத்தை காண்பிக்கும். நாய்களுக்கு தொடர்ந்து உணவு அளிப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட இடத்தில் வந்து நின்றாலே நாய்கள் அங்கு வந்துவிடும். அவர்கள் மூலம் தான் நாய்களை பிடித்து கருத் தடை செய்ய முடிகிறது. இல்லையெனில், அவற்றை பிடிக்க செல்லும் போது அங்கிருந்து தப்பித்து விடுகின்றன. எனவே, நாய்க்கு சாப்பாடு அளிப்பவர்கள், தன்னார்வ அமைப்பினர் ஆகியோருடன் மாநகராட்சி இணைந்து செயல்பட வேண்டும்.
கடிநாய்கள் உருவாவது எப்படி? - சிலர் குழந்தை கேட்கிறது என நாயை சில மாதங்கள் வளர்ப்பார்கள். பின்னர், பராமரிக்க முடியவில்லை என தெருவில் விட்டுவிடுவார்கள். அதேபோல, வாடகை வீட்டில் வசிப்போரும் சில காலம் பராமரித்துவிட்டு நாய்களை கைவிடுகின்றனர். வீட்டில் உள்ள நாய்கள், வெளியாட்கள் வந்தால் குரைக்கவும், அவர்களை கடிக்க செல்லவும் பழகி இருக்கும். திடீரென அவற்றை சாலையில் விடுவித்தால் அதே குணம் தான் அவற்றிடம் இருக்கும். கடிநாய்கள் உருவாவது இப்படித்தான்.தற்போது சாலையில் உலவும் நாய்களில் எது தெரு நாய், எது வளர்ப்பு நாய் என்பதே தெரியவில்லை.
கருத்தடை செய்து ஓரிடத்தில் 10 நாய்களை விடுவித்து, சில நாட்கள் கழித்து அப்பகுதிக்கு சென்று பார்த்தால் கூடுதல் நாய்கள் இருக்கும். காரணம், வீட்டில் நாய்களை வளர்க்கும் சிலர் அவற்றை தெருவில் விட்டிருப்பார்கள். நாய்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வராமல் இருப்பதற்கு இதுவும் முக்கிய காரணம். எனவே, வளர்ப்பு நாய்களை பதிவு செய்து உரிமம் பெறுவதை மாநகரில் கட்டாயமாக்க வேண்டும். அப்போது தான் நாய் உயிருடன் இருக்கும்வரை பொறுப்புடன் வளர்ப்பார்கள்.
நாய்களை தெருவில் விடுவது குறைந்து, எண்ணிக்கையும் குறையும். தமிழ்நாடு நகர்ப்புற விலங்குகள் மற்றும் பறவைகள் (கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1997-ன் படி, வளர்ப்பு நாய்களுக்கு சென்னை மாநகராட்சியில் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. அதைப்போல, கோவை மாநகராட்சியிலும் ரூ.50 கட்டணம் செலுத்துவதன் பேரில், நிபந்தனைகளுக்கு உட்பட்டு, வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் வழங்கும் முறையை அமல்படுத்த வேண்டும்.
தடுப்பூசி அவசியம்: நாய்களில் இருந்து பரவும் நோயை தடுக்க தடுப்பூசி செலுத்துவது அவசியம். இதை ஆண்டுக்கு ஒருமுறை செலுத்த வேண்டும். நாய் உயிருடன் இருக்கும்வரை இதை செய்ய வேண்டும். ஆனால், தடுப்பூசி குறித்தும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. தன்னார்வலர்களிடம் நாய்களை பிடிக்க பயன்படும் கிளவுஸ், வலை போன்றவை பெரும்பாலும் இருக்காது. எனவே, அவற்றை தன்னார்வலர்களுக்கு வாங்கித் தர மாநகராட்சி முன்வர வேண்டும். அதோடு, எப்படி நாய்களை பிடிப்பது என பயிற்சியும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT