Published : 12 Jan 2018 11:11 AM
Last Updated : 12 Jan 2018 11:11 AM

‘மைம்’ மனிதனின் மனிதநேயம்!

 

மை

ம் கலையைச் சிலர் பொழுதுபோக்குக்காகவும் சந்தோஷத்துக்காகவும் செய்கிறார்கள். இன்னும் சிலரோ அந்தக் கலையின் மூலம் விரும்பிய கருத்துகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக மெனக்கெடுகிறார்கள். இதில், சென்னையைச் சேர்ந்த வீரமணி இரண்டாம் ரகம். காது கேளாத, வாய் பேச முடியாத இந்த இளைஞர், தான் கற்று அறிந்த மைம் கலையின் மூலம் வாகன ஓட்டிகளிடையே சாலை விழிப்புணர்வை ஏற்படுத்திவருகிறார்.

போக்குவரத்து நெரிசலுக்கோ சாலை விதிமுறைகளை மீறுவதற்கோ சென்னையில் பஞ்சமில்லை. அதுவும் ‘பீக் ஹவர்ஸ்’ என்றழைக்கப்படும் நெருக்கடி நேரத்தில் இந்த இரண்டும் சகஜமாக சென்னை சாலைகளில் நடக்கும். அந்தச் சந்தர்ப்பங்களில் விபத்துகளும் அரங்கேறும். இயந்திரகதியில் இயங்கும் சென்னையில் இவற்றையெல்லாம் சாதாரணமாகக் கடந்து செல்வோரே அநேகர். சிலர் மட்டுமே இதை மாற்ற முனைகிறார்கள்.

சென்னையில் ஒரு சாலை விபத்து ஏற்படுத்திய தாக்கம், மக்கள் மத்தியில் சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தும் யோசனையை வீரமணிக்குத் தந்தது. அதற்காக அவர் தேர்ந்தெடுத்ததுதான் மைம் கலை. உடல்மொழியால் (சைகை) சொல்ல வரும் விஷயத்தைச் சொல்லும் கலை என்பதால், வீரமணிக்கு அது சுலபமாகப் போனது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே சென்னை நகரச் சாலைகளில் விழிப்புணர்வையும் தொடர்ந்து ஏற்படுத்திவருகிறார்.

இதெல்லாம் எப்படிச் சாத்தியம் எனக் கேட்டோம். “கண் முன்னே கண நேரத்தில் விபத்தால் ஒருவரின் வாழ்க்கை முடிவது எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மறக்காது. அப்படி ஒரு நாள் சாலையைக் கடப்பதற்காக, சிக்னலில் காத்துக்கொண்டிருந்தபோது, என் கண் முன்னே அகோரமாக ஒரு விபத்து நடந்தது. அது என் மனதை மிகவும் பாதித்தது. இந்த விபத்து என் மனதில் நீண்ட நாட்களாக ஒரு வடுவாகவே இருந்ததால், அதை மாற்ற நம்மால் என்ன செய்ய முடியும் என யோசிக்க ஆரம்பித்தேன். அதற்காகச் சாலை விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்தேன். பலரிடமும் இது பற்றி விசாரித்தபோது, நான் கற்ற மைம் கலை மூலமே விழிப்புணர்வு தரலாம் என்று வழிகாட்டினார்கள்.

பின்னர், ‘தோழன்’ என்ற தன்னார்வத் தொண்டு மைய உதவியோடு சிக்னல்களில் சாலை விழிப்புணர்வைச் செய்யத் தொடங்கினேன்” என்கிறார் வீரமணி.

வாரத்தில் இருமுறை சிக்னலில் நின்றுகொண்டு விழிப்புணர்வு செய்வதை தற்போது வாடிக்கையாக வைத்திருக்கிறார் வீரமணி. சாலையில் சிக்னல்களுக்காகக் காத்திருப்பவர்களிடம், ஹெல்மெட் அணிய வேண்டும், சீட் பெல்ட் அணிய வேண்டும், ஹெட்செட் போட்டுக்கொண்டு வாகனம் ஓட்டக் கூடாது, குடித்துவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனப் பதாகைகளை மாட்டி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறார். அப்படிச் சென்றால் என்ன நடக்கும் என்பதை மைம் கலை மூலம் செய்து காண்பிக்கிறார் வீரமணி.

“பொதுவாக, சில விஷயங்களைக் கூறினால், அதை மக்கள் சாதாரணமாகக் கடந்து சென்றுவிடுவார்கள். மைம் மூலம் செய்யும்போது முகத்தில் வெள்ளை வர்ணம் பூசிக்கொண்டு வாகன ஓட்டிகளைக் கவர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன். அதனால், நான் சொல்ல வரும் கருத்து அவர்கள் மனதில் நிச்சயம் பதிகிறது என்பதைப் பல சந்தர்ப்பங்களில் கவனித்திருக்கிறேன். சாலைகளில் மட்டுமல்ல, அம்பத்தூரில் உள்ள என் வீட்டின் பின் பக்கத்தில் உள்ள பூங்காவிலும் மைம் மூலம் அவ்வப்போது சாலை விழிப்புணர்வு ஏற்படுத்துகிறேன்” என்கிறார் வீரமணி.

இந்த மாற்றுத் திறனாளியின் தன்னார்வ சேவை, வாகன ஓட்டிகள் மத்தியில் கொஞ்சமாவது மாற்றத்தை ஏற்படுத்த உதவும் என நம்புவோம்!

- ச. ராஜலட்சுமி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x