Published : 02 Nov 2023 05:00 PM
Last Updated : 02 Nov 2023 05:00 PM

தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக நியூசி. அருங்காட்சியகத்தில் பழமையான தமிழ் எழுத்துகளில் கப்பல் மணி

ராமேசுவரம்: பண்டைய காலத்தில் தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக, நியூசிலாந்து அருங்காட்சியகத்தில் மிகப் பழமையான தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

‘திரை கடல் ஓடியும் திரவியம் தேடு’ என்ற முதுமொழியை பறைசாற்றும்விதமாக, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே கடல்வழி வணிகத்தில் தமிழர்கள் கோலோச்சினர். சோழ மன்னர்கள் பலம் வாய்ந்த கப்பற்படைகளை உடையவர்களாக இருந்தனர். அதில், ராஜராஜ சோழன் பல்லாயிரக்கணக்கான வீரர்களை கப்பலில் கொண்டுசென்று இலங்கை, மலாய் உள்ளிட்ட நாடுகளை வென்றதாக வரலாறு கூறுகிறது. தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்கு சான்றாக அமைந்துள்ளது நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட கப்பல் மணி.

இதுகுறித்து ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் வே.ராஜகுரு கூறியதாவது: இங்கிலாந்தில் இருந்து நியூசிலாந்துக்கு சென்ற வில்லியம் கோல்ன்ஸோ என்ற பாதிரியார், 1836-ம் ஆண்டு நியூசிலாந்து நாட்டின் வெங்கேரி எனும் இடத்தில் மவுரி இனப்பழங்குடியின மக்கள் ஒரு விநோதப் பாத்திரத்தில் கிழங்குகளை சமைத்துக் கொண்டிருந்ததை கண்டார். உடனே பாதிரியார், இரும்பிலான ஒரு பாத்திரத்தை அவர்களுக்கு கொடுத்துவிட்டு, அந்த விநோதப் பாத்திரத்தை பெற்றுக்கொண்டார். பின்னர், அது ஒரு கப்பல் மணி என்பதை அறிந்தார். மவுரி இனப் பழங்குடியினர் பெரும் புயலுக்குப் பிறகு கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து இந்த மணியை கண்டெடுத்துள்ளனர். இவர்கள் இந்த மணியை எந்த ஆண்டில் கண்டெடுத்தனர், எவ்வளவு காலம் பயன்படுத்தினர், மணி எவ்வாறு உடைந்தது உள்ளிட்ட எந்த குறிப்புகளும் இல்லை.

நியூசிலாந்து நாட்டு அருங்காட்சியகத்தில்
உள்ள தமிழ் எழுத்து பொறித்த கப்பல் மணி

பாதிரியார் உயிரிழந்த பிறகு, அவரது உயிலின்படி இந்த கப்பல் மணி வெலிங்டன் அருங்காட்சியகத்துக்கு கொண்டு வரப்பட்டது. இந்த வெண்கல மணியின் விளிம்பில் ‘முகைய்யதின் வககுசுஉடைய கபலஉடைய மணி’ என்று எழுதப்பட்டுள்ளது. முற்றிலும் வெண்கலத்தால் ஆன இந்த மணியில் 23 தமிழ் எழுத்துகள் உள்ளன. இந்த மணி 166 மி.மீ. உயரமும், 155 மி.மீ. சுற்றளவும் கொண்டது. இதில் உள்ள எழுத்துகளைக் கொண்டு அந்த மணி சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம். இந்த கப்பல் மணி, தமிழர்களின் கடல் கடந்த வணிகத்துக்குச் சான்றாக மட்டுமின்றி, நியூசிலாந்து வரலாற்றிலும் முக்கிய தொன்மைப் பொருளாகக் கருதப்படுகிறது.

வே.ராஜகுரு

டச்சு நாட்டைச் சேர்ந்த ஏபெல் டாஸ்மான் என்ற கடல் ஆய்வாளர் 1642-ம் ஆண்டில் நியூசிலாந்தை கண்டுபிடித்தார். நியூசிலாந்து கடற்கரையில் தமிழ் எழுத்து பொறிக்கப்பட்ட மணி 2 நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிடைத்தது என்பதில் ஆச்சரியம் இல்லை. ஆனால், நியூசிலாந்தை ஐரோப்பியர்கள் கண்டுபிடிப்பதற்கு முன்னரே, அங்கு தமிழர்கள் வணிகம் செய்திருக்கலாம் என்ற கோணத்தில் நியூசிலாந்து வரலாற்று அறிஞர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x