Published : 01 Nov 2023 03:17 PM
Last Updated : 01 Nov 2023 03:17 PM

‘எங்கள் வீடுகளிலும் கார்த்திகை தீபம் ஒளி வீசுமா?’ - எதிர்பார்த்து காத்திருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்

தீபாவளி பண்டிகை, கார்த்திகை தீபத்திருவிழா முன்னிட்டு, வேலூர் சூளைமேடு பகுதியில் களிமண்ணால் நோன்பு பானை, அகல் விளக்குகளை தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ள தம்பதி. | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்: வேலூரில் கார்த்திகை தீபத்துக்காக அகல் விளக்குகள் தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் அதை தயாரிப்பவர்களின் வீடுகளிலும் ஒளி வருமா? என மண்பாண்ட தொழிலாளர்கள் காத்திருக்கிறார்கள். நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை புதுத்துணிகள் வாங்கவும், பட்டாசு வாங்கவும் திட்டமிட்டு வருகின்றனர். அதேபோல், தீபாவளி பண்டிகை முன்னிட்டு வீடுகளில் முக்கிய வழிபாடாக இருக்கும் கவுரி நோன்பு விரதத்தை சிறப்பாக கொண்டாடவும் திட்டமிட்டு வருகின்றனர்.

கவுரி நோன்பு பண்டிகையில் முக்கியமாக இடம் பெறும் புதுப்பானையில் அதிரசம் உள்ளிட்ட தின்பண்டங்களுடன் உறவினர்களுக்கு வழங்க கயிறுகள், மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழங்கள் வைத்து வீட்டில் மங்களம் நிறைய வேண்டி வழி படுவார்கள்.

வேலூரில் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வரும் கவுரி நோன்பு விரதத்துக்காக புதுப்பானைகள் தயாரிப்பு பணியும், தீபாவளி முடிந்த அடுத்த சில நாட்களில் வரும் கார்த்திகை தீப விழாவை வரவேற்க அகல் விளக்குகள் தயாரிப்பு பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வேலூர் சூளைமேடு பகுதியில் பல தலைமுறைகளாக சட்டி, பானை தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ள குடும்பத்தினர் இந்தாண்டு மழை குறைவாக இருப்பதால் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மழை இல்லாவிட்டால் பானை, அகல் விளக்கு தயாரிப்பு பணி தடையில்லாமல் நடைபெறுவதுடன் விற்பனையும் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கின்றனர்.

இதுகுறித்து, அகல்விளக்கு தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுள்ள பழனி என்பவர் கூறும்போது, ‘‘தீபாவளிக்கு புதுப்பானை வாங்க ஒரு பக்கம் அதிகமாக ஆர்டர்கள் வருகின்றன. அதேநேரத்தில் கார்த்திகை தீப விழாவில் பயன்படுத்தப்படும் பாரம்பரிய அகல் விளக்குகள் கேட்டும் அதிகமாக ஆந்திர மாநிலம் சித்தூர், பலமநேர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஆர்டர்கள் வந்துள்ளன. அவர்கள் கேட்கின்ற அளவுக்கு உடனடியாக தயாரித்து கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறோம்.

கடந்த சில ஆண்டுகளாக வண்ண, வண்ண அகல் விளக்குகள் மீது மக்களுக்கு அதிக ஆர்வம் இருந்தது. அது குறைந்திருப்பது எங்கள் தொழிலுக்கு மகிழ்ச்சியான செய்தி. அடுத்த வரும் நாட்களில் மழை இல்லாவிட்டால் பொது இடங்களில் பானை, அகல் விளக்குகள் விற்பனை அதிகமாகவே இருக்கும். அதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இந்தாண்டு தீபாவளியும், கார்த்திகை தீபமும் எங்கள் வீடுகளிலும் ஒளி வீச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்’’ என்றார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x