Published : 31 Oct 2023 06:24 PM
Last Updated : 31 Oct 2023 06:24 PM

150-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் கரூர் (மா)நகராட்சி!

கரூர்: கரூர் (மா)நகராட்சி நாளை (புதன்கிழமை) 150-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 1874-ம் ஆண்டு நவம்பர் 1-ம் தேதி கரூர் நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது. அப்போது கரூர் நகர்மன்றத்தில் 16 வார்டுகள் இருந்தன. மக்கள்தொகை பெருக்கம், வருமான உயர்வு காரணமாக 1969-ம் ஆண்டில் முதல் நிலை, 1983-ம் ஆண்டில் தேர்வு நிலை, 1988-ம் ஆண்டில் சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

அப்போது 32 வார்டுகள் இருந்த நிலையில் 1995-ல் 36 வார்டுகளாக அதிகரிக்கப்பட்டது. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 76,328 பேர் வசித்தனர். 2011-ல் கரூர் நகராட்சியுடன், அதன் அருகில் இருந்த இனாம்கரூர், தாந்தோணி நகராட்சிகள் மற்றும் சணப்பிரட்டி ஊராட்சி ஆகியவை இணைக்கப்பட்டன.

இதனால், கரூர் நகராட்சியின் பரப்பளவு 6.03 ச.கி.மீட்டரில் இருந்து 53.26 ச.கி.மீட்டராகவும், வார்டுகள் எண்ணிக்கை 48 ஆகவும், மக்கள்தொகை 2.14 லட்சமாகவும் அதிகரித்தது. கரூர் நகராட்சி உருவாக்கப்பட்டு 146 ஆண்டுகள் 9 மாதங்கள் நிறைவடைந்த நிலையில், கடந்த 2021 ஆக.23-ம் தேதி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதன்பின், மாநகராட்சியின் எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை, வார்டுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படவில்லை.

இந்நிலையில், கரூர் நகராட்சி, அதாவது உள்ளாட்சி அமைப்பு தோற்றுவிக்கப்பட்டு 149 ஆண்டுகள் நிறைவடைந்து நாளை கரூர் (மா)நகராட்சி 150-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கரூர் மாநகராட்சியையொட்டியுள்ள ஆண்டாங்கோவில் கிழக்கு, காதப்பாறை உள்ளிட்ட ஊராட்சிகளை மாநகராட்சியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால்,இந்த ஊராட்சிகளில் கடந்த 2019-ல் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக் காலம் 2025 ஜனவரி வரை இருப்பதால், அதன் பிறகே மாநகராட்சியுடன் அப்பகுதிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x