Published : 31 Oct 2023 06:23 PM
Last Updated : 31 Oct 2023 06:23 PM

பவானி அரசு மருத்துவமனை சித்தா பிரிவில் வாழை இலை, மண் குளியல் சிகிச்சைக்கு வரவேற்பு

பவானி அரசு மருத்துவமனையில் வாழை இலை குளியல் சிகிச்சை அளிக்கும் சித்த மருத்துவர் எஸ்.கண்ணுசாமி.

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப்பிரிவில், அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் சிகிச்சைக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அரசு மருத்துவமனையின் ஒரு பிரிவாக சித்த மருத்துவப் பிரிவு மருத்துவர் எஸ்.கண்ணுசாமி தலைமையில் செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் நீராவிக் குளியல், சிரசு எண்ணெய் குளியல், புற வளையம், வர்மக்கலை, தொக்கணம் (மசாஜ்) உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

மேலும் நோயாளிகள் மற்றும் பொது மக்களிடையே மூலிகைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மருத்துவமனை வளாகத்திலேயே பல்வேறு மூலிகைச்செடிகள் அடங்கிய மூலி கைத் தோட்டமும் அமைக்கப் பட்டுள்ளது. மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் சித்த மருத்துவப் பிரிவில் தியான மண்டபமும் செயல்பட்டு வருகிறது. சித்த மருத்துவப் பிரிவில் பல்வேறு புதிய முறையிலான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுவது நோயாளிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக, சித்த மருத்துவப் பிரிவில் வாழை இலை குளியல் மற்றும் மண் குளியல் ஆகிய சிகிச்சை முறைகள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து, சித்த மருத்துவர் எஸ். கண்ணுசாமி கூறியதாவது:சித்தமருத்துவத்தின் பயன்கள் நோயாளிகளுக்கு முழுமை யாகச் சென்று சேரும் வகையில் பல்வேறு சிகிச்சை முறை களை இங்கு மேற்கொண்டு வருகிறோம். இதில் தற்போது வாழை இலை குளியல் சிகிச்சை முறையை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளோம்.

இதன்படி, முழு வாழை இலையை, நோயாளிகளின் உடலில் முழுவதும் சுற்றி, சிறிய கட்டு போடப் படுகிறது. தொடர்ந்து, 45 நிமிடங்கள் வரை வாழை இலையுடன் நோயாளிகள் அமைதியாக படுத்திருக்க வேண்டும். இந்த சிகிச்சைக்கு முன்பாக, 2 லிட்டர் தண்ணீர் அருந்திவிட்டு, ரத்தக் கொதிப்பு, நாடித் துடிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தகுதியுள்ளவர் களுக்கு மட்டும் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.

பவானி அரசு மருத்துவமனை சித்தமருத்துவப் பிரிவில் நோயாளிகளுக்கு மண்குளியல்
சிகிச்சை அளிக்கப்படுகிறது.

வாழை இலையில் உள்ள எபிகேலோ கேட்டசின் கேலட், ஆலன்டாய்ன் ஆகிய சத்துகள் வியர்வை மூலம் உள்ளே சென்று கழிவுகளை வெளியேற்றுகின்றன. இந்த குளியல் மூலம் உடல் சூடு குறையும். ரத்த ஓட்டம் சீராகும். உடலுக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சி அளிக்கும்.

தோலின் பொலிவு கூடுவதோடு, உடல் எடை குறையும். மூட்டு வலி, சர்க்கரை நோய் பாதிப்புகள் குறையும். கொழுப்பை கரைக்கும். உடல் அழற்சி நோய்கள், சிறுநீரக நோய்கள், நாள் பட்ட புண்கள் குணமாகும்.மண் குளியல் சிகிச்சை இதேபோன்று, கரையான் புற்றிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கொண்டு மண் குளியல் முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

உடல் முழுவதும் மண்ணைப் பூசி 45 நிமிடங்களுக்கு அளிக்கப்படும் இச்சிகிச்சையின் மூலம், உடல் குளிர்ச்சி, ரத்த ஓட்டம் சீராகும். உடல், மனது புத்துணர்ச்சி பெறும். குறிப்பாக சொரியாசிஸ், தோல் நோய்கள் விரைவில் குணமடையும். மூட்டுவீக்கம், மூட்டுவலி, உடல் பருமன் குறையும், நீரிழிவு நோயால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். மாதம் ஒருமுறை இயற்கை முறையிலான, வாழை இலை மற்றும் மண் சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வாழை இலை மற்றும் மண் குளியல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் முன்பே மருத்துவரால் இறுதி செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு வாரத்தில் சனிக்கிழமை நாளில் மட்டும் இவ்வகை சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஒரு மணி நேர அளவில் நடக்கும் இந்த சிகிச்சைக்கு வரும் நோயாளிகள், முதல் நாளில் அசைவம், கொழுப்பு உணவுகளைத் தவிர்த்து இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று விளக்கமளித்தார் மருத்துவர் எஸ்.கண்ணுசாமி.

ஈரோட்டில் முதல்முறையாக அறிமுகப்படுத்தப் பட்டுள்ள புதுவகையான இவ்விரு சிகிச்சை முறைகளுக்கு நோயாளிகளிடம் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சிகிச்சைக்குப் பின்னர், கழிவுகள் நீக்கப்பட்டு, புத்துணர்வு கிடைப்பதை உடனடியாக உணர்வதாக நோயாளிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x