Published : 30 Oct 2023 07:12 AM
Last Updated : 30 Oct 2023 07:12 AM
அகமதாபாத்: மும்பையில் மேற்கு கண்டிவலியில் வசிக்கும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த 16 வயது கிரிஷா என்ற சிறுமி 110 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து அபூர்வ சாதனை படைத்தார். இதனை கொண்டாடும் வகையில் நேற்று முன்தினம் அவர்களது குடும்பத்தினர் பிரம்மாண்ட விழா நடத்தினர். ஆன்மீக குருக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று, சாதுக்கள் சிலர் மட்டுமே செய்யக்கூடிய சாதனையை கிரிஷா நிகழ்த்தியுள்ளது அசாதாரணமானது என பாராட்டினர்.
கிரிஷாவின் தந்தை ஜிகர் ஷா பங்குத்தரகர். தாயார் ரூபா ஷா இல்லத்தரசி. இவர்களுக்கு இரண்டு மகள்கள். இதில், மூத்த மகள் கிரிஷா. இதுகுறித்து கிரிஷா தாயார் ரூபா ஷா கூறுகையில், “கிரிஷா ஜூலை 11-ம் தேதி உண்ணாவிரதத்தை தொடங்கினார். முதலில் 16 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்தார். இந்த கால கட்டத்தில் கிரிஷாவுக்கு உடலில் எந்த பிரச்சினையும் ஏற்படாததால் அவளது ஆன்மீக குருவான முனி பத்மகலாஷ் மகராஜிடம் அனுமதி பெற்று 110 நாட்களுக்கு தனது உண்ணாவிரத்தை நீட்டித்துக் கொண்டார். இந்த காலகட்டத்தில் கிரிஷா காலை 9 மணி முதல் மாலை 6.30 மணி வரை காய்ச்சிய தண்ணீரை மட்டுமே பருகுவாள். 110 நாட்கள் உண்ணாவிரதத்தில் கிரிஷாவின் எடை 18 கிலோ குறைந்துள்ளது’’ என்றார்.
கிரிஷா 11-ம் வகுப்பு படிக்கிறார். கிரிஷா உண்ணாவிரதம் தொடங்கிய பிறகு மன வலிமை பெற மத நூல்கள் மற்றும் பிரார்த்தனைகளில் கவனம் செலுத்தி உள்ளார். மன ஒருமைப்பாட்டுடன் இருந்தால் எதையும் சாதிக்க முடியும் என்பதை கிரிஷாவின் செயல் எடுத்துக்காட்டியுள்ளது என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT