Published : 29 Oct 2023 04:03 PM
Last Updated : 29 Oct 2023 04:03 PM
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் பொம்மிக்குப்பம் கிராமம், வேடி வட்டம் அருகே கி.பி.16ம் நூற்றாண்டை சேர்ந்த வில் வீரன் நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி பேராசிரியர் பிரபு மற்றும் சமூக ஆர்வலர்கள் மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கள ஆய்வு நடத்தி வருகின்றனர். அந்த வகையில், திருப்பத்தூர் அடுத்த பொம்மிக்குப்பம் கிராமம் வேடி வட்டத்தில் கள ஆய்வு நடத்திய போது, 500 ஆண்டுகளுக்கு முந்தைய வில் வீரனின் நடுகல் ஒன்றை ஆய்வுக் குழுவினர் கண்டெடுத்தனர்.
இது குறித்து பேராசிரியர் பிரபு கூறியதாவது, "திருப்பத்தூரில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள பொம்மிக்குப்பம் கிராமத்துக்கு உட்பட்ட ஜவ்வாது மலையில் இருந்து வரும் "பாம்பாற்றின்" கரையில் அமைந்துள்ள பகுதியே வேடி வட்டம் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் பழமையான மரங்கள் அடர்ந்துள்ள பகுதியில் "வில் வீரனின்" உருவம் தாங்கிய நடுகல் ஒன்றை எங்கள் ஆய்வுக் குழுவினர் கண்டறிந்தனர்.
இந்த வில் வீரனின் வலது கரத்தில் அம்பும், இடது கரத்தில் வில்லும் ஏந்திய நிலையில் உருவம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வீரன் அலங்கரிக்கப்பட்ட நேரான கொண்டையினை முடிந்துள்ளார். கழுத்தில் மூன்று அடுக்குகளைக் கொண்ட கழுத்தணியினை அணிந்துள்ளனர். முதுகில் அம்புகள் தாங்கிய கூட்டினையும் (அம்பறாத்தூணி), இடைக் கச்சையுடன் நீண்ட குறுவாளும், காதுகளில் குண்டலமும், புயங்களில் பூண்களும், கால்களில் வீரக்கழலும் அணிந்துள்ளார்.
இந்த தோற்றம் இந்த வீரர் இப்பகுதியில் நடந்த போரில் பங்கேற்று வீரத்துடன் போரிட்டு வீர மரணமடைந்ததை உணர்த்துகிறது. இந்த நடுகல்லானது உறுதியான கரும்பாறை கல்லால் செதுக்கப்பட்டுள்ளது. நான்கரை அடி உயரமும், மூன்றரை அடி அகலமும் கொண்டதாக இந்த உருவம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதி மக்கள் இந்த வில் வீரனை "வேடியப்பன்" என்று அழைத்து வழிபட்டு வருகின்றனர்.
வரலாற்றின் சாட்சிகளாக நிற்கும் இந்த நடுகல் ஒரு காலத்தில் தான் சார்ந்துள்ள மக்கள் கூட்டத்தின் பிரதிநிதியாகப் போர்க்களத்தில் பங்கேற்று உயிர்துறந்த ஒப்பற்ற வீரனின் நினைவைப் போற்றும் வகையில் அமைக்கப்பட்டதாகும். இந்ந நடு கற்கள் நாயக்க மன்னர்கள் ஆட்சிக் காலத்தை சேர்ந்தவையாக இருக்கக் கூடும். அதாவது கி.பி. 16ம் நூற்றாண்டு கலைப் பாணியைக் கொண்டதாக இருக்கக் கூடும் என தெரிகிறது.
பொதுவாக, நடு கற்களை வேடியப்பன் என்று அழைக்கும் வழக்கம் வட தமிழகத்தில் பரவலாகக் காணப்படுகின்றது. அந்த வகையில் இந்த நடுகல் அமைந்துள்ள பகுதி "வேடி வட்டம்" என்றும் நடுகல் "வேடியப்பன்" என்றும் அழைக்கப்படுகிறது. இது போன்ற வரலாற்று ஆவணங்களை பாதுகாக்கவும், ஆவணப் படுத்தவும் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறையினர் முன் வர வேண்டும்." என தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT